சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனமா? அல்லது சமூக ஊடகமா? – தயாரிப்பாளர், நடிகர் முரளிதரன் கேள்வி

161

எமக்கான சினிமாவை வளர்ப்பதிலும், அதனை வியாபார ரீதியில் கட்டமைப்பதிலும் “விஷூவல் ஆர்ட் மூவீஸ்“ முரளிதரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கிழக்கிலங்கையில் தமிழ் சினிமாவின் வளர்ப்பதில் சக கலைஞர்களுடன் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் அவரின் அண்மைய பேஸ்புக் புக் பதிவொன்று எமது கவனத்தை ஈர்த்தது. சினிமா குறித்தான தனது ஐயப்பாட்டை விளக்கங்களுடன் பதிவிட்டுள்ளார்.

அதில், நாங்கள் ஏன் ஒவ்வொரு கதையையும் மிகவும் கவனமாகத் தெரிவு செய்கிறோம்?

அண்மையில் ஒரு நண்பருடன் சினிமா தொடர்பாக உரையாடும் போது அவர் கூறினார் “சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டுமே. அதில சமூகக் கருத்துகளோ விழிப்புணர்வுச் செய்திகளோ இடம்பெறத் தேவையில்லை, ஏனெனில் அவை பாடசாலைகளிலோ அல்லது சமய பாட நூல்களிலோ இருந்தால் போதும். சினிமாவில் இளைஞர்களைக் கவரும் எந்தத் காட்சிகளையும் தாராளமாக வைக்கலாம்”.

நான் ஆச்சரியமாகக் பார்க்க அதற்கு அவரே ஒரு அற்புதமான விளக்கத்தையும் கூறினார். “சினிமா பார்க்க வருபவன் அன்னப்பறவை மாதிரி. அவனுக்குத் தெரியும் பால் எது தண்ணீர் எது என்பது. தண்ணீரை தியேட்டர் வாசலில் விட்டுவிட்டு பாலை மட்டுமே வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்களாம்”.

இப்ப எனக்கே கொஞ்சம் குழப்பமாக போய்விட்டது. உண்மையில் சினிமா என்பது சமூக ஊடகமா? அல்லது வெறும் பொழுது போக்கு சாதனம் தானா? சினிமாவில் சோகக் காட்சியில் நடிகனுடன் சேர்ந்து இரசிகனும் அழுகிறான். நகைச்சுவைக் காட்சியில் விழுந்து விழுந்து சிரிக்கிறான். நாயகன் செய்யும் மோட்டார் சைக்கிள் ஸ்டண்டைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நம்மை அறியாமலே நமது கை அக்சிலேட்டரை கொஞ்சம் அதிகமாக முறுக்குவதில்லையா? திரையில் தோன்றிய பாடலும், நாயகன் – நாயகியின் நடனமும் எம் கண்முன்னே நிழலாடிக்கொண்டே இருப்பதில்லையா? அது எமது அன்றாட வேலைகளை செய்வதை ஊக்கப்படுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ தாக்கம் செலுத்துவதை நீங்கள் உணர்ந்ததில்லையா?

என்னால் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் மட்டுமே எனக் கடந்து போக முடியாது. அது மாணவப் பருவத்தில் படிப்பில் தாக்கம் செலுத்துகிறது. வாலிப வயதில் காதலைத் தாங்குகிறது. பலரின் கவலைகளுக்கு வடிகால் ஆகிறது. சிலரின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கிறது. அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. தலைவர்களை உருவாக்குகிறது. பலருக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. இப்படிப் பல….

சினிமா ஒரு சமூக ஊடகம் தான். அதனைச் சிறந்த பொழுதுபோக்காகவும் சமூகக் கருத்துகளை விதைக்கும் களமாகவும் தருவதில் ஒரு படைப்பாளி வெளிப்படுகிறான். இரண்டு கைகளிலும் பாரத்தை வைத்து balance பண்ண முடியாதவன் தனக்குத்தானே “இரசிகர்கள் அன்னப்பறவைகள்” என்றொரு சமாதானத்தை சொல்லிவிட்டு தனக்குத் தெரிந்ததை – தன்னால் முடிந்ததை செய்கிறான். – எனக்குறிப்பிட்டுள்ளார்.