‘FEMALE’ – குறும்பட விமர்சனம்

906

கே.எஸ்.மீடியா தயாரிப்பில் கார்த்திக் சிவா இயக்கத்தில் தென்னிந்திய நடிகை நட்சத்திரா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடத்திருக்கும் படம் FEMALE.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இந்தியாவிலேயே இடம்பெற்றிருந்தன. நடித்த பல கலைஞர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனால் இதனைப் பார்க்கும் போது தென்னிந்திய திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைக்கும். ஆனால், இதனை இயக்கியிருப்பவர் நம்மவர் கார்த்திக் சிவா. ஒளிப்பதிவு அருண் கே சுப்ரன், படத்தொகுப்பு நிலாந்தன், இசை பத்மயன் சிவா.

இது பெண்ணியம், பெண்கள் உரிமைகள், பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து பேசுகின்ற படம். ஆகவே, கணவன், தந்தை என ஆண்களை வில்லன்கள் போல் சித்தரித்திருப்பார்கள். ஆனாலும், நண்பன் உருவில் வரும் பாத்திரம் சமனிலையைப் பேணும். ‘பெண் என்பவள் ஓரளவு படித்தால் போதும், பெண் என்பவள் கணவனுக்கு பணிவிடை செய்யத்தான், பெண் என்பவள் படி தாண்டக்கூடாது’ போன்றவாறான எமது சமூகக் கட்டமைப்பினுள் பின்னப்பட்ட தடைகளை உடைத்து பெண் எவ்வாறு வெற்றி பெறுகிறாள் என்பதை கதையோட்டமாக இயக்குனர் வடித்திருக்கின்றார்.

பெற்ற தந்தையையும், கட்டிய கணவனையும் விட்டு வெளியில் வந்து தான் நாயகி சாதிப்பதாக கதை நகரும். இன்று எல்லாமே மாறிவிட்ட போதும், எங்கோ ஓர் மூலையில் இவ்வாறான பெண் அடிமைத்தனங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது என்பதும் மறுப்பதற்கில்லை. தான் எடுத்துக் கொண்ட கதையை வசனங்களின் ஊடு செம்மைப்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.

நட்சத்திராவின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. ‘லக்ஷ்மி ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சி மூலம் உங்கள் வீடுகளுக்கே வந்தாலும் ஏற்கனவே பல குறும்படங்களில் நடத்திருக்கிறார் அவர். அழுகை, கோபம், ஆற்றாமை என அனைத்தையும் தன் நடிப்பால் மிரளவிடுகிறார். துணை நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

படத்துக்கு பக்கபலம் ஒளிப்பதிவு மற்றும் இசை. பெண் குறித்தான பாடல் ஒன்று படத்தின் இடையிலும் இறுதியிலும் வரும், அது ‘மனிதி’ பாடலைப்போல மனதுக்கு நெருக்கத்தை உண்டு பண்ணுகின்றது. இலங்கையில் சில குறும்படங்கள், இந்தியாவில் திரைத்துரைப்படிப்பு என தொடர்ந்த கார்த்திக்குக்கு ‘pilot film’ ஆக இந்த படம் அமைந்திருக்கின்றது. இதன் மூலம் முழு நீளத்திரைப்படம் என்ற நீண்ட பாய்ச்சலுக்கு தயாராகின்றார் இயக்குனர் கார்த்திக் சிவா. வாழ்த்துக்கள்

குவியம் புள்ளிகள் 2.75/5