“என்னப்பா நடக்குது நாட்டுக்குள்ளை சனம் அரசனைக் கலைக்குது வீட்டுக்குள்ளை” – மதீசனின் “மங்கினி மன்னன்” பாடல்

410

பூவன் மதீசனின் இசை மற்றும் வரிகளில் உருவாகியிருக்கும் பாடல் “மங்கினி மன்னன்”. இந்தப்பாடலை மதீசனுடன் இணைந்து சுபாஷ் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் குறித்து பாடல் குழுவினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். “இலங்கை அனுராதபுர இராஜ்யத்தின் இறுதி மன்னனும் இலங்கை வரலாற்றில் மிக மோசமாக வர்ணிக்கப்படும் மன்னருமாகிய ஐந்தாம் மகிந்தன் என்பவர் எவ்வாறு சோழரிடம் நாட்டையும் ராஜ்யத்தையும் தாரை வார்த்தார் என்பதை வில்லுப்பாட்டுடன் இணைத்து கூறுகிறது இந்த பாடல். செவி வழி மூலமும் பாடப்புத்தகங்களிலும், ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து வரலாற்றில் புனையப்பட்ட உண்மைக்கதைகளை அடிப்படையாக்கி இப்பாடலின் கரு உருவாக்கப்பட்டுள்ளது.”

பாடல் குழு குறிப்பிட வருவது என்னவென புரியாவிட்டாலும், இந்தப்பாடலைக் கேட்கும் போது அனைவருக்கும் புரிந்து விடும் அவர்கள் எதனைக்குறிப்பிட வருகிறார்கள் என்பதை.. இலங்கையின் சமகால நடப்புக்களை அச்சு அசலாக பிரதிபலிக்கும் இந்தக்கதையை வில்லுப்பாட்டு மற்றும் நாட்டிய நாடகத்துடன் இணைத்து சொல்ல வந்தமை பாடல் குழுவின் புத்திசாலித்தனம்.

கலை ஒரு போராட்ட வடிவம், அண்மையில் நமது கலைஞர்கள் பலர் அதைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் வெளிவந்திருக்கும் இந்த பாடலையும் ஒரு போராட்டமாகவே பார்க்கின்றேன்“ என இயக்குனர் மணிவாணன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இந்தப்பாடலில் வில்லிசைக் குழுவில் சபில்ராஜ், திலக்ஷன், நிருன், ஜித்தா, கஜா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். நாடகக்கலைஞர்களாக ஊரெழு பகி, ஜெயரமணன், சுபாஷ், மதீசன் ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். ஒளிப்பதிவு சிவராஜ், படத்தொகுப்பு அருண் யோகதாசன்.