சரியான விதத்தில் படங்களைக் கொடுத்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் – “யாளி” இயக்குனர் டக்ஷான்

598

சரியான விதத்தில் படங்களைக் கொடுத்தால் அதற்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்து கிடைக்கும் என “யாளி” திரைப்படத்தின் இயக்குனர் டக்ஷான் க்ரிஷ் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் முழு நீளத்திரைப்படமான “யாளி” நாளை மட்டக்களப்பில் திரையிடப்படுகின்றது. இந்நிலையில், படம் குறித்தும் தனது சினிமா அனுபவங்கள் குறித்தும் குவியம் இணையத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கேள்வி – யாளி படத்தின் உருவாக்கம் குறித்து குறிப்பிடுங்கள்..

பதில் – யாளி கதை உண்மையிலேயே ஒரு நிமிடத்தில படம் பண்றதுக்காக உருவாக்கப்பட்ட கதை. குறும்படப்போட்டி ஒன்றுக்காக அவ்விதம் ஒரு கதையை யோசித்தோம். துரதிஷ்டவசமாக அந்தப்படத்தை செய்ய முடியாமல் போச்சு. அதை ஸ்கிறிப்டா எழுதி ஒரு கதையை உருவாக்கினம். அதுக்கு பிறகு பரணி சினி காம்ப்பால ஸ்டோரி கேட்டு ஒரு போட்டி நடத்தினாங்க. அதுக்கு யாளியை ஒரு முழு நீளத்திரைப்படமாக ஸ்கிறிப்ட் எழுதி அனுப்பினோம். அதில செலெக்ட் ஆச்சு. அப்பிடித் தான் யாளி படம் உருவாகினது..

கேள்வி – யாளி கதை எதைப்பற்றியது?

பதில் – நம்ம சமூகத்துக்கு தேவையான கருத்து அதில இருக்கு. ஆனால் உண்மையிலேயே அது கருத்து சொல்ற படமா மட்டும் இருக்காது. சினிமா பார்க்க வாற ஒவ்வொருத்தருக்கும் அவங்க இருக்கிற ஒரு மணித்தியாலத்தை நல்லமுறையில செலவழிச்சிட்டு போவாங்க. அதேநேரம் அந்த மெசேஜ்ஜையும் எடுத்திட்டு போவாங்க. அதுக்கு சினிமாவுக்குத் தேவையான விசயங்கள் என்னென்ன தேவையோ அதெல்லாம் சேர்த்து ஒரு கலவையா தான் யாளி உருவாகியிருக்கு. முழுக்க முழுக்க ஒரு க்ரைம் ஸ்டோரி. அப்பிடித் தான் கதை நகர்ந்து போகும்.

கேள்வி – இந்தப்படத்திற்கு யாளி என்று பெயரிடக்காரணம் என்ன?

பதில் – நான் செய்யுற எல்லா படைப்புக்கும் பெயரை முக்கியமா பார்க்கிறேன். ஏனென்டால், பேர் தான் அந்தப்படத்தை முதல்ல விளம்பரப்படுத்தப் போகுது. எல்லாரிட்டையும் கொண்டு போய் சேர்க்கப் போகுது. அதனால பெயர் சம்பந்தமாக கொஞ்சம் கவனத்தில எடுக்கிறன். யாளி பட டைட்டிலை பொறுத்தவரை எனக்கு சினிமால குரு எண்டு சொல்லக்கூடிய குமாரவேல் தயாநிதிபாபுகிட்ட இந்தப்படத்தோட கதையை சுருக்கமா சொல்லி டிஷ்கஸ் பண்ணி செலெக்ட் பண்ணின பெயர் தான் “யாளி”. பெயருக்கும் படத்தோட கதைக்கும் சம்பந்தம் இருக்கு. யாளி பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கோயில்களில அதைப்பார்த்திருப்பீங்க. சிங்கத்தின்ட தலையும் மீனின் வாலும் பொருந்தியது. அதை பார்க்கிறதுக்கு கொடூரமா இருக்கும். உண்மையில அதை பாதுகாப்புக்காக வைச்சிருப்பாங்க. இந்தப் படத்தோட கதையும் அப்பிடிப்பட்டது தான்.

கேள்வி – யாளி திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து குறிப்பிடுங்கள்..

பதில் – இதில பணியாற்றிய பலரும் ஏற்கனவே மட்டக்களப்பில வெளிவந்த சினிமா சார்ந்த படைப்புக்கள்ல பணியாற்றியவங்க தான். ஆனால், இதில எப்பிடி அவங்க வித்தியாசப்படுவாங்க எண்டா, அவங்களோட கேரக்டர்களை நாங்க முன்னைய படங்கள்ல இருந்து வித்தியாசப்படுத்தி டிஷைன் பண்ணியிருக்கோம். அவங்கள்ட இருந்து எங்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கியிருக்கோம். ஒரு இயக்குனரா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நடிகர்களும் சப்போர்ட் பண்ணினாங்க. பல புதியவர்களும் இதில் இணைஞ்சிருக்காங்க. இசையமைப்பாளர் முழு நீளப்படத்திற்கு புதியவர். டுஜா என்கூட திரைக்கதையிலையும் பணியாற்றியிருக்கார், அவர் தான் எடிட்டர்.. எனவே, அதுவும் உதவியா இருந்திச்சு.

கேள்வி – உங்கள் சினிமா பயணம் எப்படிப் போகின்றது?

பதில் – யாளி படம் தொடங்கிய பிறகு நான் வேறு எந்த படங்களையும் தொடங்கல. நடிகரா வேறு இயக்குனர்களின் படங்களில நடிச்சிருக்கன். யாளியை முடிச்சிட்டு தான் அடுத்த படவேலையை தொடங்கிறது எண்டு யோசிச்சன். நிறைய விசயங்களை கற்றுகிட்டன். அடுத்த படத்தில அது எல்லாம் உதவும் எண்ட நம்பிக்கை இருக்கு. கதைகள் நிறைய இருக்கு, ஸ்கிறிப்ட் இருக்கு.. யாளி ரிலீஸூக்கு பிறகு தயாரிப்பாளர்கள் கிடைச்சா அதையெல்லாம் பண்ணலாம்.

கேள்வி – உங்கள் அவதானத்தில் இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சி மற்றும் கிழக்கில் இருந்து வெளிவரும் படைப்புக்கள் குறித்துக் கூறுங்கள்..

பதில் – நான் இலங்கையில மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், கிழக்கு என எல்லா பக்கங்களிலையும் இருக்கிற கலைஞர்களோட வேலை செய்திருக்கேன். எங்கட சினிமா வளர்ச்சி அடையல, எங்கட படங்களை பார்க்கிறாங்க இல்லை எண்டு சொன்னாலும், சரியான விதத்தில படங்களை குடுத்தா அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். சரியா கொண்டு போய் சேர்க்கணும். அது நம்ம கைல இருக்கு. அதுக்காக கஷ்டப்பட்டு உழைச்சு கொண்டு இருக்கோம். ஏற்கனவே இருந்ததோட ஒப்பிடும் போது முன்னேற்றம் இருக்கு. குறிப்பா மட்டக்களப்பில பார்த்தா, இப்ப வாற படங்கள் எல்லாம் தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க. அதை மக்கள் பாக்கிறாங்க. அந்தக் கட்டத்துக்கு வந்திடிச்சு. அடுத்து வணிகத்தை நோக்கி போகப்போகுது. அப்பிடி போனால் அது சக்சஸ் தான். சினிமால இருக்கிற கலைஞர்கள் எல்லாம் அதை முழு நேரமா செய்யத் தொடங்குவாங்க. அதை தான் யாளி ஊடாகவும் நாங்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி – எங்களுக்கான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு?

பதில் – சினிமா எங்கிறது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதில நாங்க காதல், நகைச்சுவை எண்டு என்னவெண்டாலும் செய்யலாம். ஆனால், கடைசில அதை பாக்கிறவங்க ஏற்றுக்கொள்ளுறமாதிரி அது இருக்கணும். ஒரு பிரபல்யமான நடிகரின் மகனா இருந்தாக்கூட அவரை மக்கள் ஏற்றுக்கொண்டால் தான் அவருக்கான மார்கெட் இருக்கும். அந்த மாதிரி தான் கதையும். பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளணும். அவங்களுக்காக தான் கதை பண்ணணும். நாங்கள் இந்தியால இருந்து வாற படங்களை பார்த்து பழகி வளர்ந்திருக்கிற படியால் அதோட தான் ஒப்பிட்டுப்பார்ப்பம். அதனால அதுக்கு சமமா பண்ணுறதைப்பற்றி யோசிக்காமல் நாங்க எப்பிடி பெஸ்டை குடுக்கலாம் எண்டுறதை சிந்திச்சு செய்யணும். எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளுற மாதிரி படங்கள் பண்ணனும். அதுக்கான முயற்சிகளைச் செய்யணும். எங்களோட முழு திறமையையும் போட்டு வித்தியாசமா ஒரு படத்தை செய்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதுக்கேற்றது போல தான் செய்யணும். யாளிலையும் நாங்க அதை தான் முயற்சி செய்திருக்கோம்.

கேள்வி – எமது சினிமாவின் வளர்ச்சிக்கு தடைகளாக இருப்பதாக நீங்கள் கருதுவது எவற்றை?

பதில் – இங்க எல்லா வளமும் இருக்கு. நல்ல திறமையாளர்கள் இருக்கிறாங்க. ஆனால் சினிமா வர்த்தக நோக்கத்தில இன்னும் போகல. எல்லாருமே வேற வேற துறைகளில இருந்திட்டு தான் சினிமாவை பகுதி நேரமா செய்றாங்க. அப்பிடி செய்றதால தான் அது கஷ்டமா இருக்குது. பகுதி நேரம் செய்தே நாங்க இப்பிடி பண்றம் எண்டா, முழு நேரமா சினிமால இயங்கினால் இன்னும் படைப்புக்களை தரமானதாக செய்யலாம். அந்த ஒரு விசயம் தான் தடையா இருக்குது. முழு நேரமாக சினிமால இருக்கிறதுக்கான வாய்ப்பு இங்க இல்லாம இருக்குது. வர்த்த ரீதியாக எமது சினிமாவின் வளர்ச்சியே எங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்.

கேள்வி – சினிமாவில் உங்கள் அடுத்த கட்டப்பயணம் எப்படி இருக்கப்போகின்றது?

பதில் – யாளி தொடங்கி இரண்டு வருடமாச்சு. அவ்வளவு காலம் எடுத்தாலும், அதில நிறைய விசயங்களை கற்றுக்கொண்டோம். நிறைய அனுபவம் கிடைச்சுது. அந்த அனுபவம் எல்லாம் அடுத்த படத்தில உதவும். நாங்கள் படம் செய்தால் மட்டும் போதாது. மக்களுக்காக படம் செய்யணும். அவங்க ஏற்றுக்கொள்ளுற மாதிரி செய்யணும். வெறுமனே கருத்தை மட்டும் சொல்லாமல் மக்கள் ரசித்து பார்க்கிற மாதிரியும் படம் செய்யணும். அதுக்கு எங்களால முடிஞ்ச உழைப்பை கொடுத்து நல்ல படங்களை உருவாக்கணும். நல்ல கதைகள் இருக்கு, தயாரிப்பாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் யாளியில் கற்றுக்கொண்ட அனுபவங்களை வைச்சு எதிர்காலத்தில சிறப்பான படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்குது.

கேள்வி – சினிமாவுக்குள் வரத்துடிக்கும் இளையவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பதில் – ரெண்டு விசயம் சொல்ல விரும்புறேன். வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்காதீங்க. முயற்சி செய்யுங்க. உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்க. எனக்கான வாய்ப்பை நான் தான் உருவாக்கினன். திறமையும் விருப்பமும் இருக்கிறவங்க. உங்களால என்னெல்லாம் முடியுதோ அதை செய்யுங்க. நல்ல விசயங்களை செய்யுங்க. நிறைய கற்றுக்கொள்ளுங்க. இப்பவெல்லாம் யு-ரியூப் இருக்கு. நிறைய படிக்கலாம். இப்ப ஸ்கிறிப்ட் எல்லாம் ஒன்லைன்லயே இருக்கு. தொடர்ந்தும் உங்களை வளர்த்துக் கொண்டால் எப்பவோ ஒருநாள் உங்களுக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.