“களரியில் நாம்” மட்டக்களப்பில் நடைபெற்ற திரைப்பட உருவாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

361

“களரியில் நாம்” எனும் தலைப்பில் திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகள் பற்றிய பயிற்சிப்பட்டறை ஒன்று நேற்று (07) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நுட்பமான கலை மற்றும் கலாசார நிறுவனம் (Institute of Subtle Art and Culture -ISAC) மற்றும் ”அ” கலையகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் கதை எழுதுதல் (Script Writing), திரைக்கதை எழுதுதல் (Screenplay Writing), தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறையில் ”ஆறாம் நிலம்” திரைப்படம் மற்றும் பல்வேறு குறும்படங்களை இயக்கிய ஆனந்தரமணன் விசேட வளவாளராக கலந்து கொண்டார்.

திரைத்துறையில் ஈடுபடுவதற்கு பல இளைஞர், யுவதிகள் ஆர்வமாக இருக்கின்ற போதும் அவர்களுக்கான துறை சார்ந்த பயிற்சிகள் இலங்கைத் தமிழ் சினிமா பரப்பில் போதியளவில் இல்லை.

அவ்வாறான நிலையில் மட்டக்களப்பிலும் இவ்வாறான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் திரைத்துறையில் ஆர்வம் கொண்ட 20 இற்கும் மேற்பட்ட இளைஞர் – யுவதிகள் நேற்றைய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.