எங்களுடைய அடையாளங்களை சினிமாவிலும் பாதுகாக்க வேண்டும் – கலாநிதி சி.ரகுராம் வேண்டுகோள்

414

எங்களுடைய அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டே நாங்கள் மேல் எழ வேண்டும் என சினிமா கலைஞர்களுடனான சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கில் சினிமா துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்களுடனான சந்திப்பு நேற்று (18) யாழ். சரஸ்வதி மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.

இதில் சிறப்பு வளவாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “கோச்சடையான்” உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய நம்மவரான சூரியப்பிரதாப் பங்கேற்றார்.

அவர் தற்போது, மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பகவாதர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப் தொடர் ஒன்றை இயக்குகின்றார்.

மேலும், யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம், யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரதிதரன் மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்திருந்த சினிமா செயற்பாட்டாளர் அருள் பொன்னையா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

இதன்போது, இயக்குனர் சூரியபிரதாப்பின் சினிமா சார்ந்த அனுபவப் பகிர்வு , ஈழ சினிமாவின் இன்றைய நிலையும் எதிர்காலமும், அத்துடன் சில தயாரிப்பு முயற்சிகள் பற்றிய தகவல் பரிமாற்றம் என்பன இடம்பெற்றன.

இங்கு ஆரம்ப உரையை நிகழ்த்திய கலாநிதி ரகுராம், சவாலான ஈழ சினிமா துறையில் எங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொண்டே நாங்கள் மேல் எழ வேண்டும் எனத்தெரிவித்தார்.

புத்தாக்க சிந்தனைகளுடன் அர்ப்பணிப்பும், திறமையும் கொண்ட பல கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள் அவர்களுக்கு துறை சார்ந்த பயிற்சிகள் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் ஆதரவு தரும் என்பதையும் குறிப்பிட்டார்.

அத்துடன், எமது சினிமாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதையும், அது துறை சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறுகிய கால அழைப்பை ஏற்று ஏறக்குறைய 40 சினிமா கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இராப்போசனத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக நடந்து முடிந்ததுடன், எம் சினிமா கலைஞர்களுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிறு தூண்டுதலாகவும் அமைந்திருந்தது. இவ்வாறான சந்திப்புக்கள் இனிவரும் காலங்களிலும் அவசியம் என்பதை நிகழ்வில் கலந்து கொண்ட பலர் குறிப்பிட்டிருந்தனர்.