இளையவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம் ரிஷாந்தனின் “அறியாமை”

389

பூவரசி மீடியாவின் தயாரிப்பில் உருவான ‘அறியாமை’ எனும் குறுப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய போதைவஸ்திற்கெதிரான குறும்படங்களில் ஒன்று.

இதனை ரிசாந்தன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு தொகுப்பினை (DOP and EDIT) விஸ் செய்திருக்கிறார். தமிழன்டா இசையமைத்திருக்கிறார். நல்லதொரு படைப்பு.

சாதாரண தரம் படித்துவிட்டு உயர்தரம் படிக்க உள்ள மாணவன் நண்பர்களோடு சேர ஆசைப்பட்டு தாயை இழந்த சோக கதை..

நண்பர்கள் எப்போதும் ஆரோகியமாக இருக்கவேண்டும், யாராக இருந்தாலும் நம்புவோர் மாட்டுப்பட சுயநலவாதிகள் தப்பிவிடுவர். அந்த சுயநலவாதிகள் நண்பராக இருப்பது வேதனை.

தீர்ப்பு வரும்வரை நல்லவர், தீயவர் யார் என பொலிசாரால் கூற முடியாது. போதைபொருள் வைத்திருந்தால் விசாரணையே தீர்வு. தீர்ப்பு கிடைப்பதற்கு முன் பல நிகழ்வு நிறைவேறிவிடும். இந்த படத்தில் தாய் இறந்திருக்கிறார். அதன் பின் எந்த பலனுமில்லை.

கதைக்கருவிற்கும் கதைக்குமான இசை படத்தை விரும்பி பார்க்க வைக்கிறது.

படம் விறுவிறுப்பாகவும் ஆழமாகவும் மனதை ஈர்த்துவிடுகிறது. 5 நிமிட படம் கணப்பொழுதில் முடிவடைவது போன்ற உணர்வு.

அம்மா பாத்திரத்தில் நடித்தவர் (தனுஷா) எல்லோரையும் ஈர்த்துவிடுகிறார். வசனம் பேசுதல் கூட சிறப்பு. வாய்ப்புக்கள் அமைந்தால் சிறந்த நடிகையாக வலம் வருவார் என்ற நம்பிக்கை உண்டு. சிறுவன் கார் ஓடியபடியே வந்து போவது ஜதார்த்தம்.

போதைபொருள் பாவனையாளர்களாக நடித்த இளவயதினரும் நல்ல நடிப்பு. பொலிஸார் விபத்தை பார்த்து பின் போனை தூக்கி கதைப்பது இயல்பான நடிப்பு. அழகு.

தோசை கருகல், அம்மா இறப்பு, பையன் பொலிசின் பிடியில் சம நேரத்தில் வந்து போகின்றமை இயக்குனர், தொகுப்பாளர்களின் அபார திறமை.

ஒலிவிளைவுகள் (sound effect) துளிக்கும் இல்லை இல்லை. இப்படி ஒரு ஈர்ப்பான படத்தில் அதனைக் கவனித்திருக்க வேண்டும். சில இடங்களில் லைட்டிங்கும் போதாது. நிற கலவையையும் கவனித்திருக்கலாம்.

பொலிஸ் என்றதும் ஓட தெரியாமல் நிற்கும் மாணவன் என்பது முரணானது. மாணவனை ஓடவிட்டு பிடித்திருக்கலாம். பொலிசார் இரு திசையால் வந்து மாணவன் சிக்குவதாக இருந்திருந்தால் இந்த முரண் இருக்காது.

கருவும் கதையும் படமாக்கலும் வெளிப்படுத்தலும் பாரட்டப்பட வேண்டியது. இவ்வாறான விழிப்புணர்வு குறும்படங்கள் காலத்தின் தேவை. எனவே, இதனை கச்சிதமாக எடுத்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.

இயக்குனர் ரிஷாந்தன், போதைப்பொருள் பாவனையை மையமாக வைத்து கடந்த வருடம் இயக்கிய “சிக்கு” என்ற குறும்படத்திற்கு இந்த வருடம் குவியம் விருதுகளில் “சிறந்த விழிப்புணர்வு குறும்படம்” என்கின்ற விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.