சென்சாரில் ‘பாஸ்’ – வெற்றிகரமாக திரையிட தயாராகிறது ஈழத்தின் ‘வெந்து தணிந்தது காடு’

290

இயக்குனர் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி பல சர்வதேச விருதுகளை வென்ற ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படத்திற்கு இலங்கையில் திரையிடுவதற்கான தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் அனைவரும் பார்வையிடுவதற்கான “U” சான்றிதழைப் பெற்றுள்ளதாக இயக்குனர் தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், எங்கட ”வெந்து தணிந்தது காடு” திரைப்படமானது இலங்கையில் திரையிடுவதற்குரிய தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டது. (என் பாசாக்கார விசமிகளுக்கு ஒரு விளையாட்டுக் காட்டுவதற்காக பெரும் காலமெடுத்தே இந்தச் சந்தோசச் செய்தியை பகிரங்கப்படுத்துகின்றேன்)

எமது திரைப்படத்திற்குரிய தணிக்கைச் சான்றிதழானது நாம் பயந்தது போல அல்லாமல் அனைத்து வயதினரும் பார்க்கக் கூடியதாக “U” சான்றிதழைப் பெற்றிருப்பதுடன் படத்தில் எந்தவொரு காட்சியும் கத்தரிப்பிற்குட்படுத்தப்படவில்லை என்பதை சந்தோசமாக அறியத் தருகின்றேன்.

நாளை பட வெளியீட்டு, முன்னோட்ட வெளியீட்டு நாளையும் அறிவிக்கின்றேன்.
அதற்கு முன்னர் – 203 பேரிடம் இருந்து சிறிது சிறிதாகச் சேகரித்த பணச் சேகரிப்பில் இத்திரைப்படம் உருவாக்கி முடிக்கப்பட்டு 15 நாடுகளில் 28 விருதுகளையும் பெற்றிருக்கின்றது.

திரையரங்கிற்கு கொண்டு வருவதானால் வெளியீட்டுச் செலவுக்கு மட்டும் 12 – 15 இலட்சங்கள் தேவைப்படுகின்றது. படத்தை பார்ப்பதற்கு முன் முடிவுடன் இருப்பவர்கள் யாராவது இருந்தால் படத்திற்குரிய ”நுழைவுச் சீட்டை” இப்போதே வாங்கி ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

எந்த நாட்டில் இருந்தும் பெற்றுக் கொள்ளுங்கள். இலங்கையைத் தொடர்ந்து மற்றைய நாடுகளுக்கும் திரையிடப்படும். திரையிட முடியாத பட்சத்தில் ஏனைய திரையிடல்களை முடித்துக் கொண்டு தனிப்பட்ட தொடுப்பு அளிக்கப்படும். அதுவும் முடியாத பட்சத்தில் பணம் மீளளிக்கப்படும்.
உள்நாடு –
சிறப்புக்காட்சி – 1000 /-
சாதாரண காட்சி – 600 /-
வெளிநாடு – 10 $ (USD)