ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும் – இயக்குனர் புதியவன் நம்பிக்கை!

259

சில தனித்துவமான கதைகளைப் பேசுவதன் ஊடாக ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும் என இயக்குனர் புதியவன் இராசையா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பல சர்வதேச விருதுகளை வென்ற “ஒற்றைப்பனைமரம்“ திரைப்படத்தின் இயக்குனர் புதியவன். ஈழச் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான இவர் தற்சமயம் லண்டனில் வசித்து வருகின்றார். இவரது ஒற்றைப்பனைமரம் திரைப்படம் லண்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் தற்சமயம் ஓ.டி.டி.க்கு வரவுள்ளது.

விரைவில் Amozon Prime ல் இந்த திரைப்படத்தை பார்க்க முடியும் என தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, தாயகத்தில் இருந்து இரு திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளன. ஒன்று ஜூட் சுகியின் இயக்கத்தில் “பாலை நிலம்”. இது எதிர்வரும் டிசம்பர் 3ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது. மற்றையது மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படம் எதிர்வரும் 2023 பெப்ரவரி மாதம் திரையிடப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈழச் சினிமாவில் வெளிவரும் படங்கள் தொடர்பாக தனது கருத்தை புதியவன் இராசையை சமூக வலைத்தளத்தில் முன்வைத்துள்ளார். அதில்,

ஈழச் சினிமா, ஒரு தனித்துவமான சினிமாவாக வளரவேண்டும். சினிமா மொழி என்பது காட்சி, ஒலி, வசனம் என ஒரு கோர்வை தான். அந்தக் கோர்வையினுடாக பார்வையாளரை அந்த விம்பங்களின் பகுதியாக உணரச் செய்துவிட்டாலே அது தனக்கான தனித் தன்மையை பெற்றுவிடும்.

தனியாக அல்லாமல் கூட்டாக இருந்து அரங்கில் பார்க்கிற அனுபவம் என்பது ஏனைய கலை வடிவங்களில் இருந்து திரைப்படம் வேறுபடும் காரணிகளில் ஒன்றாக அமைகிறது.

தொழிநுட்ப வளர்ச்சி தனியாகவும் படங்களை ரசிப்பதற்கு தளங்களை வழங்கிய வண்ணமே இருக்கிறபோதும், சினிமா என்பது இன்றளவும் திரையரங்கில் நுகரும் ஒரு மாய விந்தையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஈழச் சினிமா, இனங்களுக்கிடையிலான முரண்களை, மேட்டுக்குடி அரசியல் சித்து விளையாட்டுக்களை, பெண்கள் மீதான அடக்குமுறைகளை, சாதிய அக்கிரமங்களை, வர்க்க சுரண்டலை, நூற்றாண்டு கால மலையகத் தொழிலாளர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குதலை, பிரதேசவாதப் போக்கினை, முஸ்லிம் தமிழ் உறவை, முரணை, பண்பாட்டை, அடையாள அழிப்பு அரசியலை, கல்வி முறையை, போதைப் பொருள் பாவனையை, இணையவழி சீரழிவை என கதைக்களமாய் கொண்டு உருவாகுமேயானால் ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும்.

படைப்பாளிகள் இதில் கவனம் செலுத்துவதும் புலம் பெயர் நாடுகளில் வெளியிடுவதற்கான பொறிமுறையைக் கண்டறிதலும் மிக அவசியமாகிறது. – எனக்குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமோர் பதிவில், ஈழத்தில் இரண்டு படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றன. எந்தக்கட்டமைப்பும், பாரிய சந்தை வாய்ப்பும் இல்லாத சூழலில், இரண்டு முழு நீளப் படங்கள் வெளியாவது சாதாரண முயற்சி அல்ல.

இந்த இரண்டு படங்களும் கோடிகளை அள்ளிக் கொள்வதற்காக உருவானவை அல்ல. ஈழச் சினிமாவின் மீது கொண்ட பற்றினாலும் நாளைய சந்ததிக்கு இந்தப் பிரமாண்ட துறையை ஒரு ஆக்கபூர்வமான வழியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே.

Jude Sugi இயக்கத்தில் பாலை நிலம். MaThi Sutha இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு. இந்த இரண்டு படங்களையும் வியாபார ரீதியில் வெற்றியடைய வைத்தால் அவர்கள் தொடர்ந்து படைப்புக்களை எமக்களிக்க வாய்ப்பு உண்டாகும். வாழ்த்துகள். – எனத் தெரிவித்துள்ளார்.