பசுமைத் தேவையின் அவசியத்தை உணர்த்தும் மதீசனின் “வனமே என் இனமே” பாடல்

149

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன் தயாரிப்பில் பூவன் மதீசன் இசையில் சிவராஜ் இயக்கத்தில் அண்மையில் யாழ். சங்கிலியன் பூங்காவில் வெளியிடப்பட்ட பாடல் “வனமே என் இனமே”.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவினை கு.வசீகரனும், படத்தொகுப்பினை அருண் யோகதாசனும் செய்திருக்கின்றார்கள். மதீசனே பிரதான பாத்திரமாக நடிக்க திலக்‌ஷன், சத்தியஜித், ஜெயரமணன், நிதுஸ்யன் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

“வனத்தை ஏன் ஒழித்தாய்
எம் இனத்தை நீ அழித்தாய்…“
எனப்பல மனதை தட்டும் வரிகளை இணைத்து எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் பூவன் மதிசன்.

சங்க காலப் பாடல்களில் சம்மந்தப்பட்ட இருவர் தமக்கு மட்டும் புரியும் உவமம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அந்த உள்ளுறை உவமமே இந்த பாடல். இங்கு தமிழரும் இந்த பாடகரும்.

கல் தோன்றி மண் தோன்ற முன் ஆரம்பமான வனம் பார், எங்கும் பச்சை போர்த்தி எல்லோருக்கும் மத்தியில் விளங்கிய மரத்தை ஏன் அழித்தாய் என சூசகமாய் பாடியிருக்கிறார்.

கானகத்தை காக்க ஒருவராக தலைவன் மட்டும் உழைக்க, அவரை கோடலியும் நவீன சங்கிலி வாளாலும் பலர் சேர்ந்து அழித்து கானகம் பாலை நிலமாகியது.

அந்த பாலை நிலத்தில் அழித்தவர்கள் இன்று படும் பாடும் புலப்படுகிறது. பாலை நிலத்திற்கு வந்து போவோர்கள் சிலராகினர்..

இது தமிழ் மக்களின் மனதில் நேரடியாகவே கலந்து விடுகின்ற பாடலாக மாறியிருக்கிறது. அதிக கவலையும் இல்லாமல் மனதை ஈர்த்து நினைவுகளுக்குள் செல்ல வைக்கிறார்.

வனம் என்பது தமிழினம், அதனை தலைவன் காக்க பல தீய சக்திகள் அழிக்க எல்லாமே அழிந்த நினைவு தாமாக வந்து போகிறது.

வரலாற்றை சொல்லும் பாடல். அந்த பாடலின் வர்ணனை பகுதியில் பாடல் வரிகளை தெளிவாக இட்டிருக்கிறார்.

பாடலின் போக்கு அவ்வாறு இருக்கும் போது அதனைப்படமாக்கிய விதமும் சிறப்பு. வனம் அழிந்து பாலையாவதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். இனம், சனத்தின் நிலவுகைக்கு வனம் முக்கியமாகிறது.

வாழ்த்துகள். இந்த பாடல் அணியினருக்கு..