காலகாலமாய் காத்திடும் சிவன் – உமாகரன் அணியினரின் அடுத்த அதிரடி “காலகாலன்” பாடல்

422

நிரோசன் தயாரிப்பில் “வெற்றி விநாயகன்” பெருமையுடன் வழங்கும் உமாகரன் இராசையா அணியினரின் “காலகாலன்” பாடல் நேற்று (30) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப்பாடலுக்கு ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர் பத்மயன் சிவா இசையமைத்திருக்கின்றார். பாடல் வரிகள் வாகீசன் இராசையா. அமரர் சிவ பஞ்சாட்சரம், வாகீசன் இராசையா, என்.ரமணன், துஷ்யந்தன் கேதீஸ்வரன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

காணொளிப்பாடலை உமாகரன் இராசையா இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராசா. கலை இயக்கம் வி.எஸ்.சிந்து, ஒப்பனை டேரியன், சண்டைப்பயிற்சி அல்விஸ் கிளின்டன், போஸ்டர் டிசைன் ரஜீவன், நடன இயக்கம் சிந்துஜா.

காலகாலன் பாடலில் உமாகரன் இராசையா, பிரகேஷ், திருமலை பிரணவன், சதீசன், சஞ்ஜெய், சிந்துயா, ஊரெழு பகி, வாகீசன் இராசையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மரண வீட்டில் பாடும் சுன்னத்துப்பாடலுடன் ஆரம்பிக்கும் காலகாலன் பாடல் அப்படியே ராப் இசைக்கு மாறி விஸ்வரூபம் எடுக்கின்றது. பாடலின் போக்கிலேயே காட்சிகளையும் அமைத்து பின்னிப்பெடலெடுத்திருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுவொரு சிவனின் தாண்டவம். ருத்ர தாண்டவமாக எடுத்துக் கொள்ளலாம். சமயம் சார்ந்த பாடலாக மேலோட்டமாக தெரிந்தாலும், அநீதிக்கு எதிரான அனைவரையும் ஈர்க்க கூடிய பாடல்.

பாடல் கார்த்திகை 30 இல் வெளிவந்திருக்கின்றது. எனவே, வெறுமனே சிவனின் தாண்டவம் மட்டுமல்லாமல் எமைக்காக்க வந்தவர்களின் தாண்டவமாகவும் இதை பார்க்க முடிகின்றது. அவர்கள் இருந்திருந்தால் சமூக அநீதிக்கு எதிராக அவர்கள் நிச்சயம் இப்படித்தான் செய்வார்கள். அந்த தண்டனைகளையும் பாடலில் உள்ளீர்த்திருப்பதாக இயக்குனர் குறிப்பிட்டிருக்கிறார்.

இயல்பாய் அனைவரது வாயையும் அசைபோட வைப்பதில் வாகீசன் வல்லவர். இதிலும் அவர் அதனை செய்திருக்கிறார். இந்த பாடலை தானே எழுதி பாடியிருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்காகவும் அவர் மினைக்கெடும் விதமும், வரிகளுக்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் பாராட்டத்தக்கது.

நடிகர்களும் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக காலகாலனாக வந்த உமாகரன், நடன தாரகை சிந்துயா, சமூக விரோதிகள் போல் காட்டப்பட்டிருக்கும் மூவர், அவர்களை போட்டு பின்னியெடுக்கும் ஊரெழு பகி என எல்லோரது நடிப்பும் பக்கபலம்.

காட்சிப்படுத்தல்கள் பாடலுக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்கள். சிவனிடம் கேள்வி “ஏன் இவை?” என்பது போல் இந்த காட்சிகள் இருப்பது கூடுதல் ஈர்ப்பு. ரெஜியின் ஒளிப்பதிவும் அசத்தல். இரத்தம் தோய்ந்த காட்சிகள், காயங்களுக்கான ஒப்பனை மற்றும் அதனை முகம் பார்ப்பதற்கு ஏற்றவாறாக வர்ணச்சேர்க்கை (யசோத தனுபமா) செய்திருப்பது எல்லாம் சிறப்பான பணிகள்.

சில இடங்களில் இசை குரலை மீறி இருப்பது வரிகளை புரிந்து கொள்வது கடினமாகிறது. அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம். பத்மயனுக்கு இன்னொரு ஹிட் பாடல். “குவியம் விருதுகள் 2022” இல் சிறந்த பாடலுக்கான விருதைப்பெற்ற உமாகரன் இராசையா குழுவினருக்கு நிச்சயம் இது இன்னொரு வெற்றிப்பாடல்.

வாழ்த்துகள் பாடல் குழுவினருக்கு.

இந்தப்பாடலில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் பத்மயன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது எனக்கு நிறைய நாள் ஆசை.. நாங்கள் எங்கட ஊர்ல பார்த்து வளர்ந்த எங்கட ஊர் நாயகன் பாட்டுக்காறன் விசகடி வைத்தியர் அமரர் சிவபஞ்சாட்சரம் அவரது குரல் என்ர பாட்டுல வரோணும் எண்டு.. அது இந்த பாட்டில நடந்தது, அதுவும் ஒரு சிவன் பாட்டில நடந்தது மிகவும் மகிழ்ச்சி..

கவலைக்குரிய விசயம் என்னவென்றால் இப்ப அவர் உயிரோடு இல்லை.. பாடல் ஒலிப்பதிவு செய்து ஓரிரு மாதங்களில் அவர் காலத்தைக் கடந்துவிட்டார்.. இந்தப் பாட்டுல அவற்ற குரல் யூஸ் பண்ணி இருக்கு என்று சொல்ல அவரை மரியாதை செய்யும் விதமாக அவருக்கு சமர்ப்பணம் போட முடிவு செய்த ப்ரொடியூசர் நிரோஷ் மற்றும் டைரக்டர் உமாஹரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் பாடல் உடைய இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். நன்றி.

பாடலின் இயக்குனர் உமாகரன் இராசையா காலகாலன் பாடல் குறித்து இப்படி பகிர்ந்துள்ளார். (காணொளி)