ஜூட் சுகியின் “பாலை நிலம்” விமர்சனம்

532

ஈழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முழு நீள திரைப்படமாக வெளி வந்திருக்கிறது “பாலை நிலம்“ திரைப்படம். பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருந்தாலும் படத்தின் கரு அதனை சுட்டும் கதை நகர்த்தல் என்பன வலுவாய் அமைந்திருக்கின்றன.

படத்தின் கதையை பார்க்கும் போது, போர் சூழலில் தனது தாயை காப்பாற்ற புலம்பெயர்ந்த நாயகன் தனது தாயிற்கு இறுதி கடமை செய்ய மீண்டும் தாயகம் வந்து, அங்கு தனது மாமாவுடன் இணைந்து முன்னாள் காதலியை (நாயகியை) தேடுகின்றார். தேடலின் போது காதல் நினைவுகள் தட்டுவதும், காதலில் உதவியோர் தட்டிகழித்தாலும் நாயகியை இறுதியில் கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே கதை.

டென்மார்க் ஷண்ணின் “நெருஞ்சி முள்” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜூட் சுகி இந்த திரைப்படத்தில் இயக்குநராக அவதாரமெடுத்திருக்கிறார். பணிச்சுமை தெரிகிறது.

முற்று முழுதாக ஈழத்தை மையமாக கொண்டு காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறன.
அதற்கு வாழ்த்துகள் சொல்லவேண்டும். தீவகம், வட்டக்கச்சி போன்ற இடங்களை குறிப்பிடலாம். தீவக கல்கிணறும் இதற்கு சான்று.

வயற்காட்சிகளை காட்டும் போது கேரள சினிமாவின் பாணியா எண்ண தோன்றினாலும் காட்சியிடம் ஈழத்தை காட்டுகிறது.

வசன அமைப்புகள், வசனம் பேசும் முறைகள் எம்மக்களின் பேச்சு முறையோடு நாம் கேட்பது போன்றே அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகிக்கு வழங்கிய நிந்துஜாவின் பின்னணிக்குரலும் சிறப்பு.

ஈழ வாழ்வியல் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், பண்பாடுகள் குலையாத வண்ணம் இந்த திரைப்படம் அமைக்கப்பட்டிருக்கிறது. கள்ளு அருந்தும் முறை, மாமன் மருமகனுக்கு முன் நடந்து கொள்ளும் விதம் என பல சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பாடல்கள் அருமையாக அமையப்பெற்றுள்ளன. பாடல்களை திருமலை ரதி தனஞ்சேயன், றொனல்ட் இயற்றியுள்ளனர். பாடல்கள் காட்சியை நகர்த்துகின்றன. பாடல் படத்துடன் இணைந்தே செல்கிறது.

பின்னணி இசையானது படத்திற்கு பலம். சிறந்த இசையமைப்பு படத்தோடு ஒத்து போக வைக்கிறார் பிரசாந். அத்தோடு ஒலி விளைவுகளும் பார்வையாளரை கவரக்கூடிய வகையில் அமையப்பெற்றுள்ளது. சில இடங்களில் கொஞ்சம் கவனித்திருக்க வேண்டும். நாயகன் நாயகியின் தகப்பனை பார்க்கும் இடம், க்ளைமேக்ஸ் கவனித்திருக்கலாம்.

ஒளிப்பதிவும் சிறப்பு. அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் என்பதை ஜூட் காட்டியிருக்கும் அதேவேளை தெளிவாக காட்சிகள் கவ்வப்பட்டிருக்கிறன. ஒளிப்பதிவுக்கருவி (camera) அசைவு சில இடங்களில் தெரிகிறது.

சிறந்த ஒளிப்பதிவு தொகுப்பிற்கு இலகுவாக இருக்கும். ஒளித்தொகுப்பும் அருமையாக உள்ளது. இசையமைத்து அதேவேளை ஒளித்தொகுப்பையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் பிரசாந்த்.

நடிகர்களும் தாம் ஏற்ற பாத்திரங்களை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மாமாவாக வரும் மகேந்திர சிங்கத்தின் நடிப்பு சிறப்பு. நாயகன், நாயகி நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்னும் தாம் எடுத்த பாத்திரத்தை வலுப்படுத்தியிருக்கலாம்.

நல்லதொரு கதை. திரைக்கதைக்காக இன்னமும் மினைக்கெட்டிருக்கலாம். காட்சிகள் போதாமல் இருப்பதால் சில காட்சிகளின் நீட்சி அதிகமாகத் தெரிகின்றது. நடிக, நடிகையர்கள், காட்சிப்படத்தப்பட்ட இடங்கள் என்பனவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது.

ஈழத்தில் இருந்து ஒரு முழு நீளத்திரைப்படத்தை எடுத்து வெளியிடுவது என்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்றது. எனவே, பாலை நிலத்தை திரையரங்கு வரை கொண்டு வந்ததற்காகவே படக்குழுவினருக்கு ஒரு “சபாஷ்”.

மூத்த சினிமா செயற்பாட்டாளர் ஞானதாஸ் குறிப்பிட்டதைப் போல “திரைப்படங்கள் எம் சினிமாவுக்கான அத்திவாரங்கள்”. எனவே, அவற்றை ஆதரிக்க வேண்டியதும், தவறுகளை தயக்கமின்றி சுட்டிக்காட்ட வேண்டியதும், ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைக்க வேண்டியதும் எங்கள் கடமை.

சில சில குறைகளைத் தவிர்த்து “பாலை நிலம்” சிறந்த படம். 40 வயதிற்கு மேற்பட்ட புலம்பெயர் தேசத்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பழைய நினைவுகளைத் தட்டும். இதனை புலம்பெயர்ந்து நம்மவர்கள் வாழும் தேசங்களில் படக்குழுவினர் வெளியிடவேண்டும். வாழ்த்துகள் அனைவருக்கும்.