இலங்கையில் சொல்லப்படாமல் இருக்கும் கோடி கதைகளைச் சொல்ல கலைஞர்கள் உருவாக வேண்டும் – மதியழகன் சுப்பையா

1191

“கரும்பனை” சார்பாக ‘வெந்து தணிந்தது காடு’ (இலங்கை) திரைப்படத்தின் இயக்குனர் மதிசுதா அவர்களுக்கு பாராட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸின் பிரபஞ்சன் அரங்கத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்றது.

டிராஸ்கி மருது, கவிதாபாரதி, நிழல் திருநாவுக்கரசு மற்றும் விட்னஸ் திரைப்பட இயக்குநர் தீபக் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடந்தது.

இதில் மதிசுதா எழுதி இயக்கிய “வெடிமணியனும் இடியன் துவக்கும்” மற்றும் “தர்தா” ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய சினிமா செயற்பாட்டாளர் மதியழகன் சுப்பையா, தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

மதிசுதாவை பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி. மருது அவர்களின் பேச்சும், கவிதா பாரதி அண்ணனின் இயல்பும் திருநாவுக்கரசின் தகவல்களும் விட்னஸ் தீபக் அவர்களின் தொழிநுட்ப நோக்கும் என மதியின் பாராட்டு விழாவில் போனஸ்கள்.

மிகக் குறைவாகவே நிகழ்வுகளுக்கு போக இயல்கிறது. நிகழ்வுகள் உற்சாகம் கொடுப்பவைகளாகவே இருக்கின்றன.

மதிசுதா இயக்கிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் சர்வதேச விருதுகளை வென்று கொண்டிருக்கிறது. சமீபமாக நேபாளத்தின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டும் பெற்றுள்ளது.

தனது குறும்படத்தில் ஒரு பெயர் குறிப்பிடல் குறித்து “பிரச்சனை ஏதும் வரலியா?” என்று கேட்டபோது, “சுட்டா சுட்டுக் கொல்லட்டுமே” என்று வெடித்த மதிசுதாவின் தைரியம் முழுசாய் சார்ஜ் எற்றி விட்டிருக்கிறது.

இலங்கையில் சொல்லப்படாமல் இருக்கும் கோடி கதைகளைச் சொல்ல கோடானுகோடி கலைஞர்கள் உருவாக வேண்டும். உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை கூடும் உறுதியாகி இருக்கிறது.

குறும்படங்களில் மிக நேர்த்தியாக கதை சொல்லும் திறமை கைவரப் பெற்ற மதிசுதா இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் உலகம் முழுவதிலும் வெற்றிவாகை சூடுவது மகிழ்வையும் பெருமையையும் அளிக்கிறது.

மதிசுதா தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.