IFFR ‘Tiger Awards’ இற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் “மணல்” திரைப்படம்! – ட்ரெயிலர் வெளியீடு

564

விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகியுள்ள “மணல்” (Munnel) திரைப்படம் International Film Festival of Rotterdam 2023 இன் உயரிய விருதான Tiger Awards இற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கேயே படத்தின் முதலாவது திரையிடல் (World Premier) உம் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளரான இயக்குனர் விசாகேச சந்திரசேகரம் (Visakesa Chandrasekaram) இதுவரை சிங்கள மொழியில் 2 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய Frangipani (2014) என்ற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில் தற்சமயம் மணல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற இதன் படப்பிடிப்பில் பங்குபற்றிய அநேக கலைஞர்கள் தமிழர்கள்.

குறிப்பாக ஒளிப்பதிவு ரிஷி செல்வம், இசை பத்மயன் சிவா, ஒப்பனை ஜூலியஸ் அன்ட்ரூ, உதவி இயக்கம் ஜெனோசன் ஜெயரட்னம், தயாரிப்பு முகாமை பரத் பஞ்சாட்சரம், ஆடை வடிவமைப்பு லீலாவதி செல்வராஜ் என பல தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் கைகோர்த்திருக்கின்றார்கள்.

இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சிதும் சமரஜீவவும், கலை இயக்கத்தை சன்ன அசங்கவும், வர்ணச்சேர்க்கையை ஆனந்த பண்டாரவும், ஒலிச்சேர்க்கையை அருண களுஆராய்ச்சியும் மேற்கொண்டுள்ளனர்.

திரைக்கதை எழுதி, இயக்கித் தயாரித்திருக்கின்றார் விசாகேச சந்திரசேகரம். அவருடன் ரிஷி செல்வம், ஜெனோஷன் ஜெயரட்ணம் மற்றும் பரத் பஞ்சாட்சரம் ஆகியோரும் இணைத்தயாரிப்பாளர்களாக கைகோர்த்துள்ளனர்.

”இராணுவ தடுப்பில் இருந்து வந்து தனது தொலைந்து போன காதலியை தேடும் முன்னாள் போராளிக்கு, அவனுடைய காதலிக்கு உண்மையாக என்ன நடந்தது என்பதை போராளியின் சாஸ்திரம் பார்க்கிற அம்மா சொல்ல போகின்றார்” என்பதாக கதை நகர்வதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ட்ரெயிலரைப்பார்க்கும் போதே படத்தினுடைய கனதி தெரிகின்றது. ஒளிப்பதிவு, இசையமைப்பு என நம்மவர்கள் முத்திரை பதித்திருக்கின்றார்கள். படம் வெளியானால் இன்னும் ஆழமாக பல விடயங்களை பேச முடியும். “எங்கட கதைகள்” என்று வந்த படங்களில் இந்தப்படம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு.. உங்களுக்கு விருதுகளும் பாராட்டுக்களும் குவியட்டும். படம் மக்கள் பார்வைக்கும் விரைவில் வரட்டும்..