(JIFF) “இலங்கைத் தமிழ் சினிமா” நேற்று – இன்று – நாளை: கலந்துரையாடலும் குழப்பங்களும்

298

“யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா” (JIFF) இன் 8 ஆவது அங்கம் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்து தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இதன் நிறைவு நிகழ்வு நாளை (08) இடம்பெறவுள்ளது.  

இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “இலங்கைத் தமிழ் சினிமா – நேற்று, இன்று, நாளை” எனும் தலைப்பில் கலந்துரையாடல் (Panel Discussion) நேற்று வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது.

இதில் இயக்குனர்களான சுமதி சிவமோகன், விசாகேச சந்திரசேகரம், லெனின் எம்.சிவம், ராஜ் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலை திரைப்பட விழா (JIFF) இயக்குனர் அனோமா நெறிப்படுத்தியிருந்தார்.

கலந்துரையாடலின் பெரும்பகுதி ஆங்கிலத்திலேயே இடம்பெற்றிருந்தது. அதற்கு தமிழ் மொழிபெயர்ப்பும் வழங்கப்படவில்லை. இது, கலந்து கொண்ட பலரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியது.

இது தொடர்பில் பார்வையாளர் ஒருவர் , “இங்கே தமிழர்களே அதிகளவில் உள்ளனர். கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களும் தமிழ் மொழி பேச தெரிந்தவர்களாக உள்ள போது ஏன் ஆங்கிலத்தில் உரையாடல் இருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த விழா இயக்குனர் அனோமா, இது சர்வதேச திரைப்பட விழா. அதனால் ஆங்கிலத்தில் உரையாடுவோம்” என்ற தொனிப்பட இறுக்கமாக பதில் அளித்தார். 

அதன் போது, ”சர்தேச திரைப்பட விழாவாக இருந்தாலும் , யாழ்ப்பாணத்தை பிரதி பலிக்கும் படங்கள் மற்றும் யாழ் இசைக்கருவி என்பவற்றை இலட்சனையாக (logo) விளம்பரப்படுத்தி “யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா” என்று யாழ்ப்பாணத்தில் இதனை நடத்தும் போது, தமிழ் மொழியை புறக்கணிப்பது போன்று நடந்து கொள்வதுடன், ஏன் தமிழ் மொழியில் உரையாடல் நடாத்தினீர்கள் என கேட்டதற்கு , “இதொரு சர்வதேச திரைப்பட விழா, அதானல் ஆங்கிலத்திலையே கதைப்போம்” என பதில் அளித்தது கண்டனத்திற்கு உரியது என பார்வையாளர் ஒருவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். 

அதேவேளை மற்றுமொரு பார்வையாளர், கடந்த முறை திரையிடப்பட்ட படம் குறித்து தான் விமர்சனங்களை முன் வைத்த போது தன்னை “புலியின் வால்” எனக் கூறி விமர்சித்து, தனது கருத்தை தெரிவிக்க விடாது தடுக்கப்பட்ட சம்பவத்தையும் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார். 

அத்துடன் தமிழ் சினிமா தொடர்பில் கதைக்கும் போது , நிதர்சனம் வெளியீடுகள் பற்றி எவரும் கருத்துக்களை முன் வைக்காதது கவலை அளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

சர்வதேச திரைப்பட விழாக்களில் ஆங்கிலத்தில் உரையாடுது தவிர்க்க முடியாதது என்று வகைப்படுத்தப்பட்டாலும், அது நடைபெறும் இடத்தைப் பொறுத்து அந்த மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதற்கு மொழி பெயர்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டியது விழா ஏற்பாட்டாளர்களது கடமை. அவர்கள் அதை நேற்று செய்யத்தவறிவிட்டார்கள் என்பது தான் நியாயமான உண்மை.

அது போக, கொழும்பிலோ அல்லது தென்பகுதியிலோ இவ்வாறான விழாக்கள் இடம்பெறும் போது, குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் கதைக்காமல் முழுமையாக சிங்களத்தில் கதைப்பதையும் சுட்டிக்காட்டிய சிலர், “வடக்குக்கு ஒரு நீதி, தெற்கிற்கு ஒரு நீதி” என்று இருப்பது தான் எம் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குக் காரணம். அதற்கு இந்த திரைப்பட விழாவும் விதிவிலக்கில்லைப் போலும்” என அங்கலாய்ததைக் காண முடிந்தது.