ஆணும் பெண்ணும் நட்பாக இருக்க முடியாதா? – கோடீஸ்வரனின் “எனக்குள்ளே” – திரை விமர்சனம்

443

சிப்ஸ் சினிமாஸ் (SIPS Cinemas) தயாரிப்பாக கோடீஸ்வரன் இயக்கத்தில் கர்ணன் படைப்பகம் வெளியீடாக அண்மையில் இணையத்திற்கு வந்திருக்கும் திரைப்படம் (Mid length Movie) “எனக்குள்ளே”.

சிறப்பான கதை ஒன்று படமாக்கப்படிருக்கிறது. இப்படித்தான் படம் போகும் என்று நினைத்தால் அதை மாற்றியிருக்கிறது திரைக்கதை.

விஞ்ஞானத்தில் சில கண்டு பிடிப்புகளுக்கு ஆர்வத்தையும் தூண்டுதலையும் கொடுத்திருக்கிறார்கள். இலங்கையிலும் வைத்தியர்களால் இதயமாற்று சிகிச்சை செய்ய முடியும் என ஊக்கம் கொடுக்கும் ஒரு படம் இது எனலாம்.

இதன் கரு நண்பன் – நண்பி கதை தான்.

பிரணவன் – பரணிதா ஆகியோரின் நட்பு (ஆண், பெண்) திருமணத்தின் பின் படும் அவலம், திருமணம் நடக்க முன்னர் குடும்ப உறவுகளால் வரும் பிரச்சினைகளையும் உள்ளடக்கி நாயகன் தன்னை இழக்கும் நிலையில் நாயகி வாழும் ஓர் படைப்பு.

படத்தை பல இடங்களில் “இப்படி போகுமா?“ என்று சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

சந்தோசமாக வளர்ந்து உயர்ந்து வரும் நாயகன் விதி வழியே தன்னிலை இழந்து போதல் ‘கதாசிஸ்’ என்று கூறப்படும். கதாசிஸ் படைப்புக்களில் நாயகன் சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்து அவலப்படுவான்.

இக்கதையும் கதாசிஸ் வகையில் நகர தலைப்பட்டிருக்கிறது. இங்கு நாயகன் சமூகத்திற்கு முன்னோடியாகிறான்.

நடிகர்கள் தெரிவு சிறப்பு. நாயகன் டுஜா நன்றாக நடித்திருக்கிறார். தன்னை செதுக்கி இன்னும் பல படைப்புக்களில் வர முயற்சிக்க கூடியவராக இருக்கிறார்.

நாயகி கௌசியின் நடிப்பும் தோற்றமும் சிறப்பு. ஆனால் அவருக்கு பின்னணி குரல் ஒத்துவரவில்லை. “குளோஸப்“ காட்சிகளுக்கும் வேறு கமெரா கோணங்களை வைத்திருக்கலாம்.

இறுதியில் வரும் நண்பனின் நடிப்பு இந்த படத்தில் சிறந்த நடிகன். சிறப்பாய் நடித்திருக்கிறார்.

தாய், தகப்பன், கணவன் பாத்திரங்கள் இன்னமும் செதுக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் கதையில் முழுமையாக வந்தாலும் ஏனோ பூரணப்படவில்லை. ஜானு முரளிதரனின் வில்லத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

இதய சத்திரசிகிச்சை வைத்தியர் குழு வருகை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வைத்தியரே தயாரிப்பாளர் என்பதால் ஸ்பெஷல் பிஜிஎம் எல்லாம் போட்டு கலக்கியிருக்கிறார்கள் போலும்…

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றது போல ஒத்துப்போகிறது. பாடல்களும் அருமை. நெருப்பு மூட்டி எடுக்கப்பட்ட பாடல் மூலம் இதயம் கொதிக்கும் உள்ளூணர்வை காட்டியிருக்கிறார் இயக்குனர். கதைக்கு இசையும் ஒரு பலமாய் அமைந்திருக்கிறது.

சில இடங்களில் ஒலிவிளைவுகளை (Sound effects) கொஞ்சம் கூட்டியிருக்கலாம். இதயம் மாற்றவேண்டும், இனி இவன் வரக்கூடாது, நாயகி வீழ்ந்த இடம், இவற்றில் ஒலிவிளைவை கூட்டியிருந்தால் காட்சிகள் வேற லெவலில் வந்திருக்கும்.

கதைக்கான களம், ஒளிப்பதிவு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. ஒளித்தொகுப்பும் அருமை.

இது ஏறக்குறைய ஒரு மணி நேர படம் என்பதால் கலைசார் வேலைகள் சிலவற்றை கூட்டி படைப்பை இன்னும் மெருகூட்டியிருக்கலாம். துணை நடிகர்களும் போதாது.

தயாரிப்பாளர் சிறந்த கதைக்கு அடித்தளம் இட்டிருக்கிறார். வைத்தியர் சுகுணன் திரைத்துறைக்கு வந்ததை நாம் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.

“ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா?” இந்தக் கேள்வி காலாகாலமாக தமிழ்ப்படங்களில் சுட்டப்படும் ஒரு விடயம் தான். நட்பு காதலாக மாறும் பல படங்களை நாம் பார்த்திருப்போம். அதிலிருந்து இது சற்று வித்தியாசப்படுகின்றது. நெகிழ்ச்சியான ஒரு கதையை கவனமாக கையாண்ட இயக்குனர் கோடீஸ்வரன் சற்று விறுவிறுப்பையும் வழங்கியிருக்கலாம்.

முழு நீள படத்துக்கு உண்டான உழைப்பு இதில் இருக்கின்றது. அப்படியே சில நகைச்சுவையை சொருகி எமோஷன் காட்சிகளை கூட்டி திரைக்கதையை ஷார்ப்பாக்கியிருந்தால் பக்கா திரை அனுபவமாக இருந்திருக்கும்.

சின்னச்சின்ன குறைகளைத் தவிர, படம் பலருக்கும் பிடித்திருக்கின்றது என்பதை இந்தப்படத்திற்கு வந்திருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போதே புரிகின்றது.

தொடர்ந்து சமூகக் கருத்துக்களை தனது படைப்பூடாக சொல்லிவரும் இயக்குனர் கோடீஸ்வரன் இந்தப்படத்தில் உடல் உறுப்பு தானம் குறித்துப் பேசியிருக்கின்றார். படக்குழுவினரும் தங்கள் உறுப்புக்களை தானமாக வழங்க இணங்கியிருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.

திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் தங்களை நிரூபித்துக்காட்டியிருக்கின்றது “எனக்குள்ளே” படக்குழு. வாழ்த்துக்கள்.

Presented by @karnan creation
Produced by: SIPS Cinemas
Producer: Dr. Sukunan
Story | Screenplay | Dialogue | Direction: Kodees Waran
Cinematographer | Editor | Colorist: Ganesalingam Pushpakanth
Music, mixing & mastering: Kaeshanth
SFX: Shankerjan
Lyrics: Viththakan
Singers: Kaeshanth Kulenthiran | Divya | Chiyaan chiyan | Kovitha | Darryl duke
Poster: Tn Sathies
Hair dressing: Kisho Kannan
Art director: Thinu Mahendran
Assistant directors: Raffath Sharosh | Dhakshan Krish
Production head: Muralitharan Murali