Rotterdam சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருதினை வென்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ‘மணல்’

443

கடந்த 3 ஆம் திகதி (03.02.2023) அன்று நெதர்லாந்தின் “ரோட்டர்டாம்“ சர்வதேச திரைப்பட விழாவில் (International Film Festival of Rotterdam – IFFR) விசாகேச சந்திரசேகரம் எழுதி, இயக்கி தயாரித்த மணல் திரைப்படம் சிறப்பு நடுவர் விருதினை வென்றுள்ளது. (special Jury Award) இந்த விருதை இயக்குனர் நேரில் சென்று பெற்றுள்ளார்.

உலகின் முன்னணி திரைப்பட விழாக்களில் ஒன்றாக விளங்கக்கூடிய “ரோட்டர்டாம்” சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று சிறப்பு விருதை வென்றுள்ளமை நமக்கு எல்லாம் பெருமையே!

கதைச்சுருக்கம்

முன்னாள் தமிழ் போராளியான ருத்ரன் இராணுவ காவலில் இருந்து வீடு திரும்புகிறார், போரின் போது காணாமல் போன தனது காதலி வாணியைத் தேடுகிறார். ருத்ரனின் தாயார் செல்லம்மா, குறி சொல்லும் ‘வரம்’ பெற்றவர், அவர்களது உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்று அந்த ஊரைச் சேர்ந்த மக்களிடம் குறி சொல்லிவருகிறார், ஆனால் அவர் வாணியைப் பற்றி சொல்ல மறுக்கிறார். போரில் தோற்கடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களுமாக இந்துக் கோவில்களில் ஆறுதல் அடையும் போது, ருத்ரன் ஆரம்பத்தில் வழிபாடுகளில் ஈடுபட ஆர்வம் இல்லாதவராக இருக்கிறார், ஆனால் பின்னர் அவரது மன அழுத்தத்தினால் , அவர் தனது காதலியுடன் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஐயப்ப கடவுளின் உதவியை நாடி ஒரு மாத கால யாத்திரையை மேற்கொள்கிறார்.

முதற் சிறப்புத் திரையிடல் (World Premiere)

IFFR விழாக்குழு தங்களது 52வது பதிப்பை இந்த வருடம் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. நெதர்லாந்தின் ரொட்டர்டாம் நகரில் பல்வேறு திரையரங்குகளில் அதிகளவான திரைப்படங்களை திரையிட்டிருந்தனர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட முழுநீள தமிழ் திரைப்படமான மணல் திரைப்படத்தின் முதற்காட்சியை Pathe IMAX திரையரங்கில் தை மாதம் 28ம் திகதி திரையிட்டதுடன் 29ம் திகதி இரண்டாவது திரையிடலும் நடந்தது. இரண்டு காட்சிகளும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் வெற்றிகரமாக காண்பித்திருந்தனர். இரண்டு காட்சிகளுக்குமான நுழைவுச் சீட்டுகள் முன்கூட்டியே விற்றுத்தீர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படக்குழு முதற்காட்சியை இரண்டு அரசியல் கைதிகளுக்கு சமர்ப்பணம் செய்திருந்ததுடன், ” இந்தப்படத்தை நீங்கள் பார்வையிட வந்திருப்பதன் மூலம் பொழுதுபோக்கு அம்சத்தை தாண்டி மாறாக நீங்கள் உலக ஜனநாயக செயலில் ஈடுபடுகுறீர்கள், ஏனென்றால் நீங்கள் எங்களது கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் எங்களது மக்களுக்கு தேவையான நீதியையும் ஜனநாயக உரிமைகளை கோருவதற்கு வழி வகுக்குறீர்கள்” என்று திரைப்பட இயக்குனர் விசகேச சந்திரசேகரம் கூறியிருந்தார். ஜகத் மனுவர்ணவின் சிங்கள மொழி முழுநீள திரைப்படமான “Rahas Kiyana Kandu” திரைப்படமும் இந்த விழாவில் பங்கேற்று இருந்ததுடன் NETPAC விருதையும் வென்றிருந்தது.

Tiger Award – பிரதான விருது

IFFR விழாவின் முதன்மை பகுதி Tiger போட்டிப் பிரிவாகும். இதில் மூன்று விருதுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இரண்டு நடுவர் விருதுகளில் மணல் திரைப்படமும் ஒரு நடுவர் விருதினை (Jury award) பெற்றுக்கொண்டது. ” புரட்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையில் சிக்குண்ட ஒரு இளைஞனை பற்றிய எளிய கதை” என்று விருதினை அளிக்கும்போது நடுவர் குழு குறிப்பிட்டிருந்தது. பெறுமதியான விருதினையும் பத்தாயிரம் யூரோ பரிசுத்தொகையினையும் பெற்றுக்கொண்ட இயக்குனர் ” வார்த்தைகள், ஒளிகள் , நிறங்கள் மற்றும் ஒலியின் மூலம் நாங்கள் எங்களது கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்துகிறோம், ஜனநாயக உரிமை இல்லாது எங்களது கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்த முடியாது, கருத்துச் சுதந்திரம் இல்லாவிடின் எங்களது ஆன்மாவிலிருந்து எங்களது விருப்பப்படி திரைப்படங்களை உருவாக்க முடியாது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னணி (Background)

சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவந்த ஒரேயொரு இலங்கைத் திரைப்படம் மணல் மட்டுமே. இலங்கையில் குழப்பமான மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் போது திரைப்படத்தை வெற்றிகரமாக தயாரிக்க நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்திருந்தனர்.

இலங்கையின் தெற்கிலும் கொழும்பிலும் தொடர்ந்து வன்முறைச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே இப்படத்தின் படப்பிடிப்பு வடக்கில் இடம்பெற்றது. அனேகமாக பெரும்பாலான தமிழ் பேசும் நடிகர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்களை இலங்கையின் வடகிழக்கில் இருந்து தெரிவு செய்து உள்வாங்கி தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மணல் ஆகும்.

மேலும் இத்திரைப்படம் புகைப்பட இயக்குனர் ரிஷி செல்வம் மற்றும் இசையமைப்பாளர் பத்மயன் சிவானந்தன், போன்ற பல கலைஞர்களையும் சிவகுமார் லிங்கேஸ்வரன் (ருத்ரன்), துர்க்கா மகேந்திரன் (வாணி) உட்பட பல நடிகர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தது அதோடு உதவி இயக்குனராக ஜெனோசன் ஜெயரட்ணமும், தயாரிப்பு முகாமையாளராக பரத் பஞ்சாட்சரமும் பணியாற்றி இருந்தனர்.

திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் விசாகேச சந்திரசேகரம்

விசாகேச சந்திரசேகரம் வழக்கறிஞராக பணிபுரிகிறார், கல்வியாளர் மற்றும் கலைஞர். அவர் இரண்டு முழுநீள திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் – சயாபேதி குசுமா (ஃபிராங்கிபானி- frangipani) மற்றும் பாங்ஷு (பூமி- Paangshu) இது பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றது. Tigers Don’t Confess மற்றும் The King and the Assassin ஆகிய இரண்டு நாவல்களையம் எழுதி வெளியிட்டுள்ளார். கிரேடியன் பரிசை வென்ற “Forbidden Area” (தடை செய்யப்பட்ட பகுதி) உட்பட பல மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். விசாகேசா இலங்கையில் மனித உரிமைகள் வழக்கறிஞராகவும் அவுஸ்திரேலியாவில் NSW அரசாங்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் ஒப்புதல் வாக்குமூல ஆதாரங்களைப் பயன்படுத்துவது குறித்த தனது ஆராய்ச்சிக்காக அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

மேலதிக தகவல்களுக்கு உதவி இயக்குநர் ஜெனோசன் ஜெயரட்ணம் –
WhatsApp +94778317686 | email: jenoshj@gmail.com

மணல்

திரைப்படக்குழு
Screenwriter, Director, Producer: Visakesa Chandrasekaram
Director of Photography: Rishi Selvam
Film Editor: Sithum Samarajeewa
Music Composer: Pathmayan Sivananthan
Art Director: Channa Asanka
Costume Designer: Selvaraj Leelawathy
Makeup Artist: Julius Andrew
Sound Designer: Aruna Kaluarachchi
Digital Colourist: Ananda Bandara
Assistant Director: Jenoshan Jeyaratnam
Production Manager: Barath Panchadsaram
Associate Producers: Rishi Selvam, Jenoshan Jeyaratnam & Barath Panchadsaram

நடிகர்கள்
Rudran: Sivakumar Lingeswaran
Sellamma: Kamala Sri Mohan Kumar
Vaani: Thurkka Magendran
Kajan: Gowtham Sharma
Chandran: Dharu Baalan
Sivaraman: R. Rajah Mahendrasingam
Ponnamma: Francis pathma malini
Defence Lawyer: Selvaraj Leela
Betty: Svitlana Lysovska
Kaarthi: Ramsunthar Kantharuban
Judge: Amalathas Elroy
Prosecutor: Ananthakumar Vakeesan
Thambu: S. R. Thusikaran
Kalyani: Srilekka Perinbakumar
Medical Officer: Sathasivam Kalaiyukan
Shalini: Arunthavarsa Girithya
Baalan: Francis Julies Collin
Shankar: Karuppaiah Saththiyaseelan
Soldiers: Palitha Abeyrathne & Dhananjana Dinuwantha