“இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நாம் நினைக்கவில்லை” – ‘சாம் சூசைட் பண்ணப் போறான்’ படம் குறித்து மனம் திறக்கும் இயக்குனர் ஜீவதர்சன்

344

அண்மையில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றுவரும் குறும்படம் ‘சாம் சூசைட் பண்ண போறான்’. 40 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து யு-ரியூப்பில் வெற்றி நடை போடுகின்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கும் படத்தின் இயக்குனர் ஜீவதர்ஷன் படக்குழு ஊடாக தனது நன்றியறிதலை தெரிவித்துள்ளார்.

எமது “சாம் சூசைட் பண்ணப் போறான்” திரைப்படத்தை ரசித்த, ஆதரித்த, பகிர்ந்த, விமர்சித்த நண்பர்கள், நலன் விரும்பிகள், சினிமா ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

இவ்வளவு தூரம் சமூக வலைதளங்களில் எமது திரைப்படம் வரவேற்பு பெறும் என்று உண்மையில் நாங்கள் நம்பவில்லை. பெயர் சொல்லி நன்றி சொல்லப்போனால் ஒருவரை சொல்லி ஒருவரை சொல்லாமல் விட்டால் தவறாகிவிடும், ஆதலால் ஒவ்வொருவருக்கும் எம் உள்ளம் நிறைந்த நன்றிகள், தயைகூர்ந்து அனைவரும் தனித்தனியாக நன்றியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்களை அனைவருக்கும் நன்றி சொல்லும் அதேவேளையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் பற்றியும் சொல்லி, அவர்களுக்கு நன்றியும் சொல்லவேண்டிய கடமை எனக்கு உள்ளது.

Nishaharan Ranganathen
இந்த குறு நேர திரைப்படம் உருவாக மட்டுமில்லை, இந்த திரைப்படம் இந்தளவிற்கு வரவேற்பைப் பெற முதற் காரணம் நிஷாகரன் தான். இணை இயக்குனர் என்பது 100 சதவிகிதம் இயக்குனருக்கு இணையானவர் என்பதையே குறிக்கும்.

இயக்குனர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பெயர் கிடைத்துவிடும்; ஆனால் இயக்குனருக்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் இயக்குனரைவிட பல இடங்களில் சிந்தித்து சிறப்பாக செயலாற்றிய நிஷாகரனுக்குரிய பெயரும் வெற்றியும் இந்த திரைப்படத்தின் வரவேற்பில் இயக்குனருக்கு எவ்வளவு பங்கு பெயர் இருக்குமோ அதைவிட அதிகமாகவே உண்டு.

ஸ்கிரிப்டில் தொடங்கி, ரிகேஷல், படப்பிடிப்பு, எடிட்டிங், டிசைன், இசையமைப்பு, கலர் கிரேடிங், ப்ரோமோஷன் என இந்த திரைப்படத்தின் அத்தனை அத்தனை பகுதிகளிலும் நிஷாகரனின் மேற்பார்வையும் முடிவுமே பெரும் தாக்கம் செலுத்தியிருந்தது.

இன்னும் தெளிவாக சொன்னால் நிஷாகரன் ‘ஓகே’ சொல்லாமல் இந்த திரைப்படத்தின் எந்த விடயத்துக்கும் முற்றுப்புள்ளியிடப்படவில்லை. ஒரு இயக்குனராக நிஷாகரன் இயக்கும் முதல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்யக் காத்திருக்கிறேன்.

Piranavan Buvanendran
சிலரது வேலைகளின் தன்மையை, உழைப்பை, ஈடுபாட்டை, தொழில் மீதான பற்றை சொல்ல வார்த்தைகள் இருக்காது, அப்படி ஒருவர்தான் பிரணவன்.

இசைமீது பிரணவனின் ஈடுபாடும், வேலை நேர்த்தியும், திறனும் நிச்சயம் ஒருநாள் பிரணவனை பெரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். பாடல், பின்னணி இசை மட்டுமல்ல இந்த திரைப்படத்தின் அம்பியன்ஸ் ஒலி சேர்க்கை, பொலி ஆர்ட்ஸ், சவுண்ட் டிசைன், சவுண்ட் மிக்சிங் என அத்தனை பிரிவினரது வேலையையும் தானே எடுத்து அதற்கு அவர் கொடுத்த உழைப்பும் ஈடுபாடும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

பொலி ஆர்ட்ஸ் வேலைகளுக்காக தனது ஸ்டூடியோவில் அவர் ஒலிப்பதிவு செய்யும்போது; தேய்ந்த விளக்குமாறு முதற்கொண்டு ஏகப்பட்ட பொருட்கள் வருவதும் ஓலி எழுப்புவதும் போவதுமாக ஸ்டூடியோவை சுற்றிப்பார்த்தன, பகல் இரவாக சவுண்ட் மிக்சிங், Live ஆக புல்லாங்குழல், கிட்டார் இசை சேர்ப்பு என post production வேலைகளில் பெரும் உழைப்பைக் கொடுத்தது பிரணவன்தான்.

அது தவிர ரிகேஷ லில் தொடங்கி, டப்பிங் வரை, மிக முக்கியமாக படப்பிடிப்பில் முதன்மை உதவி இயக்குனர் பொறுப்பிலும் பிரணவன் செய்த செயற்பாடுகள் மிகப்பெரிது.

Rishi Selvam
இந்த திரைப்படத்தின் ரியல் ஹீரோ. விஷுவல் ட்ரீட் என்று முடிவானதும் நாம் நம்பிய ஒருவர், நாம் கேட்டதைவிட அதிகமாக மிகுந்த நேர்த்தியாக சீரற்று மாறுபட்டுக்கொண்டிருந்த பல்வேறுபட்ட வானிலைகளுடன் மல்லுக்கட்டி ஒளிப்படமாக்கிக் கொடுத்தவர்.

யாருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் எத்தனை படமும் சேர்ந்து வேலை செய்யும் அளவுக்கு மிக இயல்பாயும் இலகுவாயும் வேலை செய்யக்கூடிய மிகத் திறமையான ஒருவர்.

ஒளிப்பதிவு மட்டுமில்லை; வானிலை செய்த கடுமையான கோளாறை தனது கலர் கிரேடிங் மூலம் முடிந்தளவு சீர்செய்து நல்ல விஷுவலாக்கிக் கொடுத்தவர், அதற்க்கான பொறுமையும் நேரா மினக்கெடலும் மிக மிக மிக அதிகம்.

சினிமா உருவாக்கம் சார்ந்த சிறந்த அறிவைக் கொண்டவர், இப்படி ஒரு ஒளிப்பதிவாளர் எந்த இயக்குனருக்கும் இரட்டிப்பு பலம். ஒவ்வொரு சட்டகமும் Fill செய்திருப்பது Cinematic Feel ஐ எந்தளவுக்கு கொண்டுவரும் என்று எமக்கு சொல்லியும் அதனை படமாக்கியும் கொடுத்தவர்.

ரிஷி ஒளிப்பதிவு துறையில் ஏற்கனவே பல படிகள் முன்னேதான் உள்ளார், இன்னுமின்னும் அவரும் அவரும் அவரது மூன்றாம் கண்ணும் மின்னும்.

SR Thusikaran
இந்த திரைப்படம் இவர் இல்லாவிட்டால் உருவாகியே இருக்காது என்பதில் மாற்று எண்ணத்துக்கு இடமே இல்லை. லைன் ப்ரொடியூசர், எடிட்டர், டிசைனர், ஆர்ட்டிஸ்ட் மேனேஜ்மண்ட், நடிப்பு, டப்பிங் என பல வேலைகளை தனி ஒருவராக அழகாக செய்து முடித்தவர்.

இவரது எடிட்டிங் வேகமும், எடிட்டிங் அறிவும் நிச்சயம் ஒரு பெரிய முழுநீள திரைப்படத்தை நேர்த்தியாக செய்து முடிக்கும் அளவுக்கு 100 சதவிகிதம் தன்னை வளர்த்து வைத்திருக்கிறார் என்பதை காண்பித்தது.

இந்த திரைப்படத்தின் வேகம் குறையாத தன்மையை பலர் சுட்டிக் காட்டினார், அதற்கு முதன்மைக் காரணம் இவரது படத்தொகுப்புத்தான். இந்த திரைப்படத்தில் ஒளி, ஒலிக்கு நிகராக மிகச் சிறப்பாக அமைந்த மற்றய துறை படத்தொகுப்பு, அதுதான் இந்தப் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியது, அதற்க்கு தூசியின் திறனும் அனுபவமும் பெரிதும் கை கொடுத்தது.

அது தவிர இந்தத் திரைப்படத்தின் போஸ்டர், டீசர்களுக்கு, ப்ரோமோஷனுக்கு துஷி கொடுத்த கடும் உழைப்பு பெரும் பலமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் துஷி கை காட்டியவர்கள்தான்.

Thuwaragan Ranganaathen
இந்த திரைப்படத்தின் அழகான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், அது மட்டுமல்ல மக்கள் தொடர்பில் துவாரகனை அடிக்க இங்கு ஆளே இல்லை. எந்த இடம், எந்த மனிதர்களிடம் எப்படிப் பேசவேண்டும், எப்படி ஒத்துழைப்பும் அனுமதியும் வாங்கவேண்டும்; அவைகளையே அந்த தயாரிப்பை அவர்களது தயாரிப்பாக உணரவைக்க வேண்டும் என்பதை எல்லாம் துவரகனிடம் படிக்கலாம்.

வொய்ஸ் ஆர்ட்டிஸ்ட், பாடல் வரிகள் எழுதுதல், பாடுதல், மக்கள் தொடர்பு, லொக்கேஷன் அனுமதி, தயாரிப்பு முகாமைத்துவம் என எமது சினிமாவின் ஜக் கலிஸ் துவாரகன்தான்.

அதுதவிர வெவ்வேறு புள்ளியிகள் தேங்கி நின்றவர்களை இழுத்து தொடுத்து இந்த தயாரிப்பை முன்னெடுக்க ஒரே காரணமும் கருவியும் துவாரகன்தான். இன்னும் நிறய சொல்லலாம், சொன்னால் நெஞ்சை நக்குகிறேன் என்று சங்கடப்படுவார்.

இருந்தாலும் சொல்கிறேன் துவரகனின் இத்தனை ஆண்டு பொறுமைக்கும், கூட இருப்பவர்கள் மேலுள்ள நம்பிக்கைக்கும் பொறுப்புக்கு அவர்களோடு சேர்ந்து மிக விரைவில் ஏதாவதொரு துறையில் துவராகனுக்கான தென்னிந்திய சினிமாவின் கதவு பெரிதாக திறக்கும் என்கின்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

Nathan Kathirgamanathan
படத்தின் தயாரிப்பாளர், உண்மையை சொன்னால் படம் வெளிவந்த மூன்று நாட்களின் பின்தான் முதல் முதலாக பேசினோம். துஷிகரன் மீதிருந்த அளவு கடந்த நம்பிக்கையால் எம்மையும் நம்பியிருந்தார், அவரது நம்பிக்கையை ஒரு திரைப்படமாக நாம் காப்பாற்றிவிட்டதாக அவர் சொன்னாலும், அவர் செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கவில்லை என்பது பெரும் குறையாகவே எம்மிடம் இன்னும் இருக்கின்றது.

இலங்கை மற்றும் இலங்கை தமிழ் பேசும் புலம்பெயர் மக்களிடையே கணிசமான அளவு சமூக வலைதளத்தில் வைரல் ஆனாலும் தமிழக மக்களிடம் இந்த திரைப்படம் சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை, அதன் கரணம் அவர்களுக்கு இப்படியான திரைப்படங்கள் சாதாரணமாக இருக்கலாம், எமது பேச்சு வழக்கு மொழி அவர்களுக்கு புரியாததாக இருக்கலாம்.

எது எப்படியோ ஏதாவதொரு வகையில் இந்த திரைப்படத்திற்கு செலவழித்த பணத்தை துஷி மீட்டால் மிக்க மகிழ்ச்சி, அப்போதுதான் எமக்கு இந்த திரைப்படம் உண்மையான திருப்தியை தரும், அதுவரை எதோ ஒன்று தொக்கு நிக்கும்.

மேலும் அண்ணனது கடந்தகால நிகழ்கால செயல்களையும் பலன்களையும் நிலைகளையும் அறியாமல் இல்லை; நம்பியவர்கள் செய்த பெரும் மோசங்கள், தவிர்க்கமுடியாமல் பின் வேறு சிலரது பேச்சுக்கும் திட்டுக்கும் ஆளாக்கும் என்பதையும், அதை ஓடி ஒழியாது அங்கேயே நின்று கையாள வேண்டும் என்பதையும் அப்பாவிடம் அருகிலிருந்து பார்த்ததால் ஐங்கரன் அண்ணா எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை, அவர் இன்னொரு ஜதார்த்த உலகு போராட்டக்காரராக தெரிகிறார். நிச்சயமாக மீண்டு வருவார்….

கதையின் நாயகர்கள்
ரிகேஷல் முதற்கொண்டு டப்பிங் வரை இவர்கள் அத்தனைபேரும் கொடுத்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் வெளிப்பாடுதான் இந்த திரைப்படத்தின் நீங்கள் கூறிய இயல்புத் தன்மையை முடிந்தவரை காட்சிகளாக கொண்டுவந்தவை.

முக்கியமாக நிவேதிகன் Nivethigan Vj உப்புத் தண்ணீரில் சகதியில் மூன்று நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடுநடுங்கியபடி இரண்டு நாட்கள் நின்றதற்கு என்ன பதில் கைமாறு செய்யப்போகிறோமோ தெரியாது.

எமது படத்தை அழகாக்கவே குருநாகலில் இருந்து வந்து வெறும் மூன்று நாள் ரிகேசலில் அதிகபட்ச வெளிப்பட்டைக் கொடுத்த Anjali Harshani க்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு, முழு நீள சிங்கள சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கான திறன் அவரிடம் உண்டு, நிச்சயமாக அசத்துவார்.

அடுத்து ‘கண்ணாடி’யாகப் படத்துக்கு உயிர் குடுத்த ஒத்துழைப்பும் ஆர்வமும் மிக்க Jashi ஜெசிக்கு படக்குழு சார்பில் நன்றியும் பாராட்டும்.

அடுத்து Steno , Kanth Ruban , Jeno Malkin நீங்கள் பேசிய வேக வசனங்களும், சைக்கிளை நீங்கள் ஓட்டிய வேகமும்தான் இந்த திரைப்படத்தின் வேகம், நீங்கள் கொடுத்த ஈடுபாட்டுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி என்பது வெறும் வார்த்தைதான்.

ஒருவர் தேவை என்றதும் படப்பிடிப்பன்று வந்து நண்பர்களோடு நண்பனாக ஓடித்திருந்து உதவிய Saran சரன்யனுக்கு மிக்க நன்றி.

ரிகஷல் முதல் படப்பிடிப்பு, டப்பிங் வரை ஒரே டேக்கில் அசத்தும் மிகத் திறன்மிக்க Anjali க்கும், ஒரு காட்சியானாலும் இயல்பாக நடித்து கொடுத்த Morisக்கும் மிக்க நன்றிகள்.

சூசையாக வாழ்ந்த, இன்னமும் எங்கள் மத்தியில் அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பி Niel Rexonக்கும் அவரது Stills க்கும் உளமார்ந்த நன்றிகள்.

திரைப்படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்ற ஆரம்ப ட்ரோன் காட்சி முதல்; நாம் கேட்டதை விட சிறப்பாக ட்ரோன் காட்சிகளையும் மிக அற்புதமாக அமைத்துக்கொடுத்த Reji Selvarasaவிற்கும்.

திடீர் அழைப்பை ஏற்று வந்து உதவிய கலை இயக்குனர் Pirunthavan அவர்களுக்கும், Julius Andrewவின் ஆர்ப்பாட்டமில்லாத நிறைவான ஒப்பனைக்கும், கூலான Aadhiயின் ஒளிப்பதிவாளருக்கான உதவிக்கும், ஸ்டெல்லாவுக்கு பின்னணி பேசிய Keethu கீர்த்தனாவிற்கும், செய்தி வாசித்த Mørñį Mäyurįமயூரிக்கும், டைட்டில் டிசைன் செய்த Rajeevanக்கும், நிதினி மற்றும் Deepikaதீபிகாவின் மிகச்சிறந்த உணவு வழங்கலுக்கும், அனைவரையும் ஈர்த்த தீபிகாவின் பின்னணி குரலுக்கும், RK Sree – Sahana – தீபிகா அணியினரது கோர்ஸுக்கும், விஷ்ணுதாசனின் புல்லாங்குழலுக்கும், அஞ்சலோ நிரோஜனின் கிட்டாருக்கும் மிக்க நன்றிகள்.

இவை அனைத்தையும் தாண்டி பாசையூர் மற்றும் குருநகர் மக்களுக்கும், குறிப்பாக பாசையூர் மதன் அண்ணாவுக்கும் அவரது எம்டன் குழுவினருக்கும் அவர்கள் அன்புக்கும், அவர்கள் அழகிய இளகிய மனங்களுக்கும், அவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும் ஆயிரமாயிரம் நன்றிகளும் முத்தங்களும்.

கூடவே படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாசையூர் அந்தோனியார் கோவிலுக்கும், குருநகர் மாதா கோவிலுக்கும் வணக்கங்கள். கூடவே படகு உதவி புரிந்த இதயானந்த், ஜீவன், சுரேன் மூவருக்கும் மிக்க நன்றிகள்.

அதேபோல குருநகர் ஐந்துமாடி மைதான உதைபந்தாட்ட தம்பிகளுக்கும், சேர்ச்சில் விளையாடிய குட்டி சிறுவனுகளுக்கும் நன்றிகள்.

இறுதியாக வெளியிலும், அருகிலும் இருந்து எப்போதும் பெரும் ஆதரவும் நம்பிக்கையும் கொடுக்கும், எப்போதும் மேலான சிறந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் சொல்லிக் கொடுத்து என்னையும் நான் செய்யும் செயல்களையும் இயக்கும் Santhan Kula கிரிஷாந்தன், Lavan லவன், Mayu Arulமயூரதன் மூவருக்கும் நன்றி எல்லாம் சொல்ல முடியாது, அப்படிச் சொல்வதானால் மணிக்கொருதடவை அலாரம் வைத்து சொல்லவேண்டும். இது அவர்களது கடமை என்று நம்புகின்றேன்…. கடமைகள் என்றும் தொடரும்….

இப்படி இவர்கள் ஒவ்வொருவரும் முன்னின்று தம் படைப்பாக எண்ணி உழைக்க; இயற்கையோ கடவுளோ நிச்சயித்து எம் சக்திக்கு மேலாக அமைத்துக்கொடுத்த இந்த திரைப்படத்தில் இவை அனைத்துக்கும் சாட்சியாக நானும் இருந்ததில் மகிழ்சச்சி.

நன்றி
அருளானந்தம் ஜீவதர்ஷன்.