நாளை வெளியாகிறது பிரகாஷ் ராஜாவின் “வனவேட்டை 2” திரைப்படம்!

224

பிரகாஷ் ராஜாவின் இயக்கத்தில் Biruntha Studio வின் ஒளிப்பதிவில் செல்வராஜ் தனுசனின் ஒளித்தொகுப்பில் உருவாகியுள்ள “வனவேட்டை 2“ திரைப்படம் நாளை (ஏப்ரல் 12) மற்றும் நாளை மறுதினம் மல்லாவி மற்றும் பாண்டியன்குளம் பிரதேசங்களில் திரையிடப்படவுள்ளது.

வனவேட்டை படத்தை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள அதன் 2ஆம் பாகம் முற்று முழுதாக வன்னியில் படமாக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், பட வெளியீடு குறித்து அதன் இயக்குனர் பிரகாஷ் ராஜா தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

”என்னடா இவன் எப்ப பாத்தாலும் இத பத்தியே பேசிட்டு இருக்கான் எண்டு நீங்க நினைக்கலாம். இது வெறும் படம் இல்ல நூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பசி மறந்து தூக்கம் மறந்து ஒன்றாக இணைந்து மேற்கொண்ட ஒரு யாகம். ஆகவே இதை பற்றி நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும் திரும்ப திரும்ப பேசித்தான் ஆக வேண்டும்.
இதற்காக நாங்கள் செய்த தியாகங்களும் பட்ட கஸ்டங்களும் கொஞ்சநஞ்சமல்ல. நாங்கள் ஒவ்வொரு தடவையும் இப்படைப்பை பற்றி பதிவிடும்போது புதிதாக ஒருவர் இப்படைப்பை பற்றி அறிந்து கொண்டாலே அது எமக்கு கிடைத்த பெரும் வெற்றிதான்.

இந்திய திரைப்படங்களை கொண்டாடும் நாம் என்றாவது ஒரு ஈழத்து திரைப்படத்தை கொண்டாடி இருப்போமா? இந்திய நடிகர்களுக்கு கட்டவுட் வைத்து பாலாபிசேகம் செய்து அவர்கள் அன்றாட வாழ்வில் சாதாரணமாக செய்யும் ஒரு விடயத்தை கூட சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து அவர் பெரிது இவர் பெரிது என்று எமக்குள் அடித்துக் கொள்கிறோம். ஆனால் எமது ஈழத்து கலைஞர்கள் குறைந்தது ஐந்து பேரின் பெயராவது எம்மால் சொல்ல முடியுமா??

எமக்கு கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு இயக்குனருக்கும் ஏதோ ஒரு நடிகருக்கும் ஏதோ ஒரு இசையமைப்பாளருக்கும் கொடுக்கும் அங்கீகாரத்தை எமது மண்ணில் பிறந்து நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கலைஞர்களுக்கு கொடுக்கின்றோமா?

பொருளாதார வசதிகளோ, தொழில்நுட்ப வசதிகளோ இல்லாவிடினும் தன்னுடைய விடாமுயற்சியால் ஒரு நல்ல படைப்பை கொடுக்க வேண்டும் என்று தனது கைக்காசை போட்டு பசி தூக்கம் பாராது எமது கலைஞர்கள் ஒரு படைப்பை யு-ரியூப் தளத்தில் வெளியிட்டாலும் அதை பார்க்க கூட எம்மில் ஆள் இல்லை. அப்படி பார்த்தாலும் அதை பகிர்ந்து அடுத்தவர்களும் பார்க்கும்படி செய்ய ஆள் இல்லை. அதில் உள்ள குறை நிறைகளை கூறி அவர்களை ஊக்கப்படுத்த ஆள் இல்லை. இப்படி இருந்தால் அந்த படைப்பாளியால் அடுத்த படைப்பை எவ்வாறு மனம் உவந்து கொடுக்க முடியும்?

இந்திய திரைப்படங்களை பார்த்து பார்த்து அந்த திரைப்படங்களோடு எமது படைப்புக்களை ஒப்பீடு செய்வதே இதற்கு காரணம். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்திய சினிமா ஆகாயத்தில் இருந்து விழுந்த ஒன்றல்ல. அதுவும் எம்மைப்போல் எதுவுமே இல்லாமல் இருந்து படிப்படியாக வளர்ந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம் இந்திய மக்களின் ஒத்துழைப்புதான். அந்த ஒத்துழைப்பு எமது மக்களிடம் இருந்து எமக்கு கிடைத்தால் மிக விரைவாக எம்மாலும் இந்திய சினிமாவின் உயர்தை எட்ட முடியும்.

சரி இப்போது நமது கதைக்கு வருவோம். இந்த வனவேட்டை இரண்டாம் பாகம் ஆறுமாத காலங்களுங்கு மேல் படமாக்கப்பட்டது. அதிலும் 90சதவீதமான காட்சிகள் வனாந்தரத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகளோ அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப குழுக்களோ இல்லை என்றாலும் நாங்கள் சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த சினிமா அறிவைக்கொண்டு மிகவும் தரமான காட்சிகளை உருவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். சில காட்சிகள் எங்களையே வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு வந்துள்ளதென்றால் பாருங்களேன்…

நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கு நூறு வீதம் இப்படம் தரமானதாக இருக்கும் என்று உறுதிப்படுத்துகின்றோம். ஆகவே பயமே இல்லாமல் வந்து பாருங்கள்.

இந்த படம் Youtube தளத்தில் வெளிவராது என்பதையும் அறிய தருகின்றோம். எங்கள் நூறு பேரின் உழைப்பை சாதாரணமாக youtubeஇல் பதிவிட்டு அவர்களின் உழைப்பிற்கு உரிய உயரிய அந்தஸ்தை கொடுக்க தவறும் தவறை நாங்கள் செய்ய தயாராக இல்லை. இந்த படமானது முதன்முதலாக மல்லாவி மண்ணில் திரையிடுவதற்கும் காரணம் உண்டு.

எங்கள் படைப்பு உருவாவதற்கு மல்லாவி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் தந்த ஆதரவு கொஞ்சநஞ்சமில்லை. கமரா, லைட்டிங் வசதி, போக்குவரத்து வசதி, உணவு என எல்லாவற்றிலும் எமது மக்களின் ஒத்துழைப்பு பரிபூரணாக எமக்கு கிடைத்தது. ஆகவேதான் மிகப்பெரிய பொருட்செலவில் முடிந்திருக்க வேண்டிய இந்த படைப்பை எங்கள் திராணிக்கு கட்டுப்படும் அளவு பொருட்செலவில் முடித்திருக்கிறோம். ஆகவே எங்கள் மக்களின் ஆதரவுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாகவே தியேட்டரே இல்லாத மல்லாவி மண்ணில் முதன்முதலில் மாதிரி தியேட்டர் அமைக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இப்படம் திரையிடப்படுகின்றது. இதனை தொடர்ந்து ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் இதனை திரையிடுவோம்.

நாங்கள் எதிர்பார்த்த அளவு டிக்கட்டுக்கள் விற்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு காட்சிக்கும் அரங்கம் நிறைந்த ரசிகர்களும் அவர்களின் ஆரவாரமுமே எங்கள் படைப்பிற்கு கிடைக்கும் சரியான அங்கீரமாக நாங்கள் கருதுகின்றோம். ஆகவே வேலைப்பளுக்கள் இருந்தாலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி எம் திரைப்படத்தை கண்டு களிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இது உங்களின் தம்பியின் படம், உங்களின் அண்ணனின் படம், உங்களின் நண்பனின் படம், உங்களின் மச்சானின் படம், உங்களின் பிள்ளையின் படம் இதற்கு நீங்கள் ஆதரவு தராமல் வேறு யார் தருவார்? உங்கள் மீதான அளப்பெரிய நம்பிக்கையில் துணிந்து களத்தில் இறங்குகின்றோம். உங்களில் ஒருவனாக எண்ணி எம்மை வெற்றி பெற செய்யுங்கள்.