பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “லூஸி” திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மறுநாள் 18ஆம் திகதி வவுனியாவில் திரைப்படவுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய இயக்குனர் ஈழவாணி, ”யாழ். மற்றும் வவுனியா திரையிடல்களைத் தொடர்ந்து இலங்கையின் ஏனைய பாகங்களிலும் திரைப்படத்தினை திரையிட திட்டமிட்டுள்ளோம். அதன் திகதிகளை பின்னர் அறிவிப்போம்.
அத்துடன் , புலம்பெயர் நாடுகளிலும் திரையிட திட்டமிட்டு உள்ளோம். அதனையும் விரைவில் அறிவிப்போம்.
இந்த திரைப்படமானது , உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. எம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களில் இருந்து உருவானது. குடும்ப வன்முறைகள் , சிறுவர் துஸ்பிரயோகங்கள் பற்றி நிறையவே திரைப்படம் ஊடாக பேசி இருக்கிறோம்.
இதில் அரசியல் பேச நாங்கள் விரும்பவில்லை. எங்கள் சமூகத்தில் எங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை கதையாக்கி படமாக்கி இருக்கிறோம்.
இலாப நோக்கை கருத்தில் கொண்டோ , புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்தோ , யாரோ ஒரு தரப்பினரை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்குடன் படம் எடுக்கவில்லை.
எமது படைப்பினை எமது மக்கள் முன்னால் கொண்டு வருகிறோம். அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு வரவேற்பார்கள் என நம்புகிறோம்.
எனவே எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 18ஆம் திகதி வவுனியாவிலும் திரையிடவுள்ளதால் எமது மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
லூஸி திரைப்படத்தில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி ஆன்ரன், கௌசி ராஜ், ஆர்.ஜே.நெலு, ஷாஷா ஷெரீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

