மதிசுதாவின் ‘வெடிமணியம்’ பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?

390

மதிசுதாவின் “வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் இணையத்தில் வெளியாகியதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அது பேசுபொருளாகியுள்ளது. ஈழ சினி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள் என பலரும் குறும்படம் பற்றிய தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவ்வாறு பேஸ்புக் பக்கத்தில் பதியப்பட்ட சில கருத்துக்களை உங்களுக்காக தருகின்றோம்.

Jey Mayu – “வன்னியின் மக்கள் வாழ்வியலை இயல்பான முறையில் காட்டி சென்றுள்ளது இந்த குறும்படம். முன்பு வன்னியின் கனகராயன் குளத்தில் இருந்த சமயம், இந்த வேட்டை தொடர்பில் அதிக பரிட்சயம் உண்டு. அங்கு இடியன் துவக்கை தூக்கி கொண்டு காட்டுக்குள் செல்லும் நபர்கள் மான் , மரை, குறைந்த பட்சம் காட்டுப்பன்றி சகிதம் ஊருக்குள் வந்தால் அந்த ஊரே அதை கொண்டாடும்.

அத்தகைய வாழ்க்கைமுறையை விடுதலை போராளி ஒருவனின் உருவாக்கத்துடன் தொடர்புபடுத்திய முறை அருமை. மேலும் வழமையான மதி சுதாவின் காட்சி அமைப்பை விட இந்த படத்தில் தெளிவான காட்சி அமைப்புகள் சிறப்பு”.

Mathiyalakan Sivakurunathan – “உண்மையில் அனைவரும் பார்க்கவேண்டிய படம். நான் நேற்றுப் பாத்து விட்டு அதற்குள் இருந்து இன்னும் மீள முடியவில்லை ஒவ்வொரு பாத்திரங்களும் ஓராயிரம் நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது. எங்கே கனவுகள் கலைந்து விடுமோ என்று ஏங்குபவர்களுக்கு இந்த குறும் படம் நம்பிக்கை ஒளி பாச்சும். அத்தனையும் சிறப்பு”.

Parani Krishnarajani – தமிழக சினிமாவின் பாதிப்பில் இருந்து மீண்டு புலத்தில் குறும்படங்களை நேர்த்தியாக எடுக்கும் நம்மவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை நாம் புலம்பெயர் சினிமா என்ற வகைமைக்குள்தான் பொருத்த வேண்டியுள்ளது.

ஆனால் முதல் முறையாக தாயகத்திலிருந்து இவ்வளவு நேர்த்தியாக வெளிவந்த ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. படம் தந்த உணர்வுகளிலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை. துணிந்து கூறலாம். இது – இதுதான் தமிழீழ சினிமா”.

Jenoshan Jeyaratnam – “வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படத்தின் முதன்மையான ஆரோக்கியமான விடயம் இதனூடு ஒரு வியாபாரம் நடந்திருக்கிறது. ஈழத்தின் தொழில்முறை சினிமாவுக்கான முதன்மையான படியாக இது இருக்கும். நம் சமூகத்தின் கதையை, நிலத்தை எங்களை விட்டால் வேறு யார் எடுத்துரைப்பது? பாடுபட்ட அனைவருமாக அன்பும் நன்றியும்.

MaThi Sutha மிகப்பெரிய முயற்சிகளில் இருக்கிறீர்கள், நல்லதே நடக்கும்! Rishi எப்பவும் போல அசத்தல். திரைக்கு பின்னால் நிறைய உழைப்பிருந்திருக்கும், பாடுபட்டஎல்லாருக்கும் சினிமா தொழிலாக மாற வாழ்த்துக்கள்”.

Surenthirakumar Kanagalingam – “மதி சுதாவிடம் எதிர்பார்த்ததற்கு மேலாக அருமையாக படத்தை உருவாக்கியிருக்கிறார். இத்தப் படம் நிச்சயமாக சுதாவின் படங்களில் ஒரு மைல் கல்லாக இருக்கும். படத்திற்கு பின்னணியில் ஒரு அருமையான டீம் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. படத்திற்கான லைட்டிங், பிரேமிங் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. ரிஷியின் திறமையை வெளிக் கொணரக்கூடிய இதுபோன்ற திரைப்பட வாயப்புக்கள் தொடர்ந்து அமைய வாழ்த்துகிறேன்”.

Varodayan Kanaganayagam – எங்கள் கதைகளைப் பேசுவதன் ஊடகவே எங்கள் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லலாம் என நம்புபவன் நான். அந்த நம்பிக்கைக்கு சான்று பகிரும் ஒரு படைப்பு மதிசுதாவின் ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’. ஒரு ஈழ சினிமா படைப்பாளியாக மதிசுதாவிடம் பலரும் எதிர்பார்ப்பதும் இவ்வாறான படைப்புக்களையே! ஆனால், மதிசுதாவின் முதல் திரைப்படமான ‘உம்மாண்டி’ என் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. விரைவில் நம் மண்ணின் கதை பேசும் திரைப்படத்தை MaThi Sutha தருவார் என்ற நம்பிக்கையும் உண்டு. வாழ்த்துக்கள்”.

Pratheep Kunaradnam – “…..படத்தில் இருக்கும் அல்லது கதையில் இருக்கும் பெரிய கோளாறே வன்முறை மீதான அதீத உணர்வும், புனிதப்படுத்தலும். விடுதலைப் போருக்கு எடுத்த துவக்கு நீதியின் பொருட்டு எடுக்கப்படுவது, அது உன்னதம் செய்யப்பட்ட லட்சியங்களை வன்முறையை ‘ஒரு சாதனையாக’ கருதத் தொடங்கும் போது அது நீதியைக் கடந்து செல்கிறது. இந்தப்படத்திலும் அதுதான் நடக்கிறது. படத்தில் அப்படி ஒரு பிசுறு அடிக்கும் போதுதான் கதை இழந்து போய் உணர்ச்சியே மிஞ்சுகிறது.

மதிசுதாவிடம் எனக்குள்ள பிரியத்திற்கு முக்கிய காரணம் அவர் நிலத்தில் வாழக்கூடியவர், அந்த வாழ்க்கையையே கதையாக்க வேண்டும் என்பவர். குறிப்பாக இந்தியச்சூழலுக்கு எடுபடாமல் நிலத்தின் ‘மொழியை’க் கையாள முயற்சியேனும் செய்தவர். ஆனால் படத்தில் இருக்கும் மொழியும் அதன் நாடகீயமும் பாத்திரங்களுக்குள்/ கதைக்குள் செல்ல விடாமல் வெட்டி வெட்டி நிறுத்துகின்றன. அதுவும் ‘பெட்டைமிருகம்’ என்ற பதத்தை கேட்கும் போது அவ்வளவு தூரம் அந்நியப்பட்டேன். அங்கே பெட்டை வேறு மிருகம் வேறாக நிற்கும் மொழித்தோரணை அசூசை மனநிலையைப் பிறாண்டி விட்டது…..”

நியூமன் பெனடிக்ற் – “…..இந்த படத்தில் வரும் பிரதான கதாபாத்திரமான வேட்டைக்கார்ர் பெண்மிருகங்களை கொல்வதில்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்து அதன்மூலம் இயக்குனர் அந்த கதாபாத்திரத்தை நியாயப்படுத்துகிறார்.

உண்மையில் அந்த இடத்தில் இயக்குனர் கதையில் சமரசம் செய்து அதன் தன்மையினை உடைத்து விட்டார். ஒருவேளை இது அவருடைய எண்ணத்திலிருந்த கதாபாத்திரமாக்கூட இருக்கலாம் ஆனால் அதைமட்டுமே ஒரு பெரிய விடயமாக முன்வைத்தமை கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது.

இந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த இடத்தில் ஒரு பெரிய நெருடலை தவிர்க்க முடியவில்லை. நல்ல ரவுடி, குழந்தை மனதுள்ள கொலைகாரன், நல்ல திருடர் இதுபோன்ற பாத்திர அமைப்புகள் ஒரு goosebumps சிலிர்ப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பாத்திரத்திற்கான அழுத்தத்தை மட்டுப்படுத்தி நம்பகத்தன்மையினை ஏற்படுத்திவிடுகிறது.

கதாபாத்திரத்திற்கும் பார்வையாளனுக்குமிடையில் இருக்கவேண்டிய நெருக்கத்தை இதுபோன்ற சமரசங்கள் குறைத்து அந்நியப்படுத்திவிடுகிறது…..”, “….மதிசுதாவிடமிருந்து ஒரு நல்ல, எல்லோரும் எதிர்பார்க்கும் சினிமாவை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையினை இந்த குறும்படம் ஏற்படுத்துவதும் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது”.