ஏஞ்சலோ ஜோன்ஸின் ‘இறவாமை’ திரை முன்னோட்டம்

753

இலங்கையின் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் ஏஞ்சலோ ஜோன்ஸ். இவர் கிங் ரட்ணம் இயக்கத்தில் உருவான “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் என்பதுடன் பல்வேறு குறும்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தனது முதல் திரைப்படத்திற்கான முன்னோட்டக்காட்சிகளை வெளியிட்டுள்ளார். “இறவாமை” என்ற பெயரில் அவர் இயக்கும் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் ஏலவே ஆரம்பிக்கப்பட்ட போதும், அது பல்வேறு காரணிகளால் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் இதுவரை படமாக்கிய காட்சிகளைக் கொண்டு ரசிகர்களின் ஆதரவை அறிந்து கொள்வதற்காக முன்னோட்டக் காட்சியைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். சஸ்பென்ஸ், த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன.

அது மட்டுமல்லாது இலங்கையின் முன்னணி நடிக, நடிகையர்கள் இதில் நடித்தும் உள்ளனர். தர்சன் தர்மராஜ், கஜன் கணேசன், ரூபன் பிலிப், மதுமதி பத்மநாதன், பேர்லிஜா, தர்ஷி உள்ளிட்ட பலர் தோன்றியுள்ளனர்.

தடைப்பட்டுள்ள படப்பிடிப்புக்களை இவ்வருடம் மீள ஆரம்பித்து அடுத்த வருடம் படத்தினை வெளியிடத் தீர்மானித்துள்ளார் இயக்குனர் ஏஞ்சலோ. இதற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர்பார்த்து நிற்பதோடு, தன் படைப்பின் மீது நம்பிக்கை வைத்து தன்னுடன் கைகோர்க்குமாறு தயாரிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏஞ்சலோவின் முயற்சி வெற்றியளிக்க நாமும் வாழ்த்துவோம்!