கொரோனாவுக்குப் பின் கூடுதலான மக்களை திரையரங்கம் வரச்செய்ய என்ன வழி?

480

கொரோனாவால் பல தொழில்துறைகளும் முடங்கியுள்ள நிலையில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான திரையரங்குகளுக்கு இன்னமும் பல நாடுகளில் தடை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவுடன் இணைந்ததான திரையரங்கமும் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மார்ச் 19 ஆம் திகதி திரையரங்குகள் மூடப்பட்டன. சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு இன்னமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் திரையங்குகளை திறப்பதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் பிற தொழில்களைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைப் போல, திரையரங்குகளையும் மீள இயக்க அனுமதி அளிக்குமாறு ‘தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்’ மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல, கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. ஆகியவற்றையும் குறைக்கும் பட்சத்தில் 20 சதவீதம் வரை ரிக்கெட்டின் பெறுமதியையும் குறைக்க முடியும். இதன் மூலம் அதிகளவில் மக்களை திரையரங்கு நோக்கி வரச்செய்ய முடியும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். அதேபோல, மின் கட்டணங்களிலும் சில சலுகைகளை வழங்குமாறும் திரையரங்க உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

தமிழ்த்திரையுலகில் 2 மாதங்களுக்கு மேலாக எந்தவொரு திரைப்படங்களும் வெளியாகாத நிலையில், அண்மையில் ‘ஒடிடி’இல் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸானது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளதால், கொரோனா நெருக்கடிக்கு பின்னர் வெளிவரும் முதல் பெரிய திரைப்படமாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.