‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’ – விமர்சனம்

676

சரியான கலைஞர்கள் ஒன்று சேர்ந்தால் எம்மண்ணிலும் சரியான படைப்பைப் படைக்க முடியும் என்பதற்கு மதிசுதாவின் ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’ மிகச் சிறந்த உதாரணம். இது மதிசுதாவுக்கு மட்டுமல்ல, ஈழ சினிமாவிற்கே மிக முக்கியமானதொரு குறும்படம். முக்கியம் எனும் போது, அது ‘கதை’யை மட்டும் அர்த்தப்படுத்திவிடாது.

‘படைப்பாளிகள் உலகம்’, ‘மதிசுதா ஃபிலிம் ஃபக்ட்றி’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு ரிஷி செல்வம், படத்தொகுப்பு சஞ்சிகன், இசை பத்மயன் சிவா, எழுத்து – இயக்கம் மதிசுதா. ஈழத்தின் முக்கியமான சினிமா செயற்பாட்டாளர் அமரர். முல்லை யேசுதாசன், மற்றுமொரு முக்கியஸ்தர் கேசவராஜன், அவரது பாரியார் கமலாராணி, யாழ் யசீதரன் மற்றும் சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றார்கள்.

வேட்டையாடுதலை பிரதான பொழுதுபோக்கு (தொழில்) ஆகக்கொண்டிருக்கும் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசப்போராட்டம் தான் இந்த ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’ என மேலோட்டமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அதை எம் ஈழ விடுதலைப்போராட்டத்துடன் தொடர்புபடுத்தியமை தான் இயக்குனரின் சாதூரியம். கதையின் நகர்வுக்கேற்ப, இக்குறும்படம் யுத்த காலப்பகுதியில், அதாவது 2009 இற்கு முன்பதாக எடுக்கப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

படத்தின் பிரதான அம்சமே, ‘எங்கட தமிழ்’ என ‘அட!’ போட வைக்கும் வசன உச்சரிப்புக்கள். எம் மண்ணுக்கே உரித்தான பல சொல்லாடல்கள் வசனங்கள் ஊடு வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனாலும், சில இடங்களில் அது ஜதார்த்தத்தையும் மீறி நாடக வடிவில் வந்து விழுந்து விடுகின்றன. தன் வசனங்களுடாக சாதியம், போராட்டம் என பல விடயங்களைச் சொல்லிப் போகிறார் இயக்குனர். நடிகர்கள் ஒவ்வொருவரும் தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் முல்லை யேசுதாசன் ஐயா, ‘சபாஷ்’ போட வைக்கிறார்.

குறும்படத்திற்கு பெரும் பலமே ரிஷியின் ஒளிப்பதிவு. அதிலும் வெளிப்புறக்காட்சிகளை எல்லாம் தன் கமெரா கண்களால் ஓவியமாக்கியிருக்கின்றார். பத்மயனின் இசையும் கதையுடன் இணைந்ததாக பயணிப்பதால் பார்ப்பவர்களுக்கு நெருடல் இல்லை. ‘நொன் லீனியர்’ வகை கதை கூறலில், குறும்படத்தின் இறுதிக்காட்சியை படத்தொகுப்பாளர் செதுக்கிய விதம் அருமை.

போர் காலப்பகுதியில் நிகழும் குறும்படம் என்பதால் பல விடயங்களை மிகவும் கவனமாக கையாண்டிருக்கின்றார்கள். இருந்தும் பத்திரிகையின் பின்பக்க செய்தி உள்ளிட்ட ஒரு, சில விடயங்கள் அவர்களையும் மீறி நடந்த தவறுகள். ஒட்டுமொத்தத்தில் பார்க்கப்போனால், இது ஒரு நிறைவான ‘ஈழப்படம்’. அதனால் தான் பலரும் சமூக வலைத்தளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர். மதிசுதாவின் திரைத்துறை வாழ்வில் இது முத்தாய்ப்பான படம் என்றால் அது மிகையில்லை.

குவியம் புள்ளிகள் – 3.5/5