‘பார்வதி பிலிம்ஸ்’ இன் மாபெரும் மலையக குறுந்திரைப்படப் போட்டி

808

‘மலையக மாற்றத்திற்கான சினிமாப் பயணம்’ எனும் தலைப்பின் கீழ் ‘பார்வதி பிலிம்ஸ்’ மாபெரும் குறும்படப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்சமயம் கொரோனா முடக்கத்தால் பல்வேறு சினிமா படைப்பாளிகளுக்கும் மேலதிக நேரம் கிடைக்கும் என்பதால், அதனைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதன் பொருட்டு மிகச்சொற்பமான வளங்களைப் பயன்படுத்தி மையக்கருவை நோக்கியதான 3 முதல் 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இந்த குறும்படங்களைப் படைக்க வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோள்.

போட்டியாளர்கள் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் பங்குபற்றலாம் என்ற அறிவிப்பை விடுத்துள்ள அதேவேளை, மலையக மாற்றத்திற்கான எதிர்கால சிந்தனை கருதி குறுந்திரைப்படங்கள் அமைதல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுந்திரைப்படங்களின் முதற்கட்டத்தேர்வு இலங்கையில் இடம்பெறுவதுடன், இரண்டாம் கட்டத்தேர்வு இந்தியாவில் துறைசார் வல்லுனர்களினால் நடத்தப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்களான பார்வதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போட்டிக்கான குறும்படங்களை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி என்பதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படப் போட்டி பற்றிய மேலதிக விபரங்களை 077-8866860 மற்றும் 072-1118836 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.