நிழல் டோனி தற்கொலை செய்துகொண்டார் – துயரத்தில் திரையுலகம்

837

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவான் வீரருமான எம்.எஸ்.டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் இந்தியத் திரையுலகினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

டோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘M.S. Dhoni: The Untold Story’ படத்தில் மிகவும் தத்ரூபமாக டோனியைப் பிரதி செய்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

இந்நிலையில், அவர் மும்பை – பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் ஹிந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவரவில்லை.

ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய முகாமையாளர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இவ்விரு தற்கொலைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்புள்ளதா எனும் கோணத்தில் மும்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா முடக்க காலத்தில், இவர் தனிமையில் தனது வீட்டில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனவே, கடும் மன அழுத்தத்தினால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா எனும் கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகின்றது.