ரஹ்மான் படத்தில் ‘அன்பு அறிவிப்பாளர்’ – சம்பவத்தை விபரிக்கிறார் B.H.அப்துல் ஹமீட்

2470

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கதை மற்றும் இசையில் உருவான ’99 சாங்ஸ்’ என்கிற திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளில் அப்படத்தை சரியாக வெளியிட முடியவில்லை. இதனால் பலரையும் அப்படம் சென்றடையவில்லை. தற்சமயம் OTT தளத்தில் அதை காணக்கிடைக்கின்றது.

25 வருடங்கள் சினிமா பயணத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த முதல் படம் இது என்பது சிறப்பு. இந்தச் சிறப்பான படத்தின் ஆரம்பம் நம்மவரின் குரலுடன் விரிகின்றது. ஆம்! உலக அறிவிப்பாளர்; எங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் குரலுடன் ‘டைட்டில்’ காட்சிகள் பயணிக்கின்றன. இந்த விடயம் குரலுக்குச் சொந்தக் காரரான ஹமீட் ஐயாவிற்கு தெரிந்திருக்கவில்லை. அது தெரிய வந்த விடயம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கின்றார்.

Oscars வெற்றித் தமிழன் ஏ.ஆர்.ராஹ்மானிடம் இருந்து, கடந்த ஏப்ரல் 20ம் திகதி ஒரு மின்னஞ்சல்- ‘99songs’ திரைப்படம் பார்த்து விட்டீர்களா? என்ற கேள்வியுடன். தொடர்ந்து ‘திரைப்படம் உங்களது குரலோடுதான் ஆரம்பமாகிறது’ என்ற குறிப்பு வேறு, என்னை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது. எப்படி நடந்தது?
நினைவுகளை இரைமீட்டினால்…….

சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்- ஒரு நாள், தொலைபேசியில் அழைத்து, ‘நான் சொல்லும் வசனங்களை உங்களது கணினியிலேயே பதிவு செய்து எனக்கு அனுப்பிவையுங்கள்’ என அன்புக் கட்டளையிட்டார். எதற்காக? என்று கேள்வி கேட்காமலேயே, அவர் சொல்லச் சொல்ல, நானும் பேசிப் பதிவு செய்து அனுப்பிய பின், அந்நிகழ்வை அடியோடு மறந்தும் போய்விட்டேன். அவர் அனுப்பிய மின்னஞ்சலின்படி, அவரது இலட்சியப் படைப்பான ‘99Songs’ திரைப்படத்தில் எனது குரலா?

பார்க்க (கேட்க) வேண்டுமே!!! என ஆவல் மேலிட்டாலும் அத்திரைப்படத்தைப் பார்க்கவோ! குரலைக் கேட்கவோ வழியில்லை. கொரோனாவின் கோரதாண்டவம் வேறு அந்த ஆவலை முடக்கிப்போட்டது.

60 ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சியிலும், அதன் பின் ‘இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சியிலும், அதனைத் தொடர்ந்து சன்மானம் பெறும் வானொலிக் கலைஞனாக ‘வானொலி நாடகங்களில்’ நடித்தபோதும் எனது குரலை நானே வானொலியில் கேட்டதில்லை. காரணம்! அன்று எல்லா நிகழ்ச்சிகளுமே நேரடி ஒலிபரப்பு.

நீண்ட காலம் கழித்து முன்கூட்டியே ஒலிப்பதிவு செய்யும் முறை வந்தபின், முதன் முதலாக எனது குரலை நானே வானொலியில் கேட்டபோது ஏற்பட்ட பரவசத்தைச் சொல்லால் விளக்க முடியாது.

நேற்று ஒரு இன்ப அதிர்ச்சி- லண்டன் மாநகரில் இருந்து அன்புச்செல்வன் ரஜெந்தன் (S.K.ராஜென் அவர்களது புதல்வர்) ‘99Songs’ (தமிழ்) திரைப்படத்தின் ஆரம்பத்தை மட்டும், கரிசனையோடு தரவிரக்கம் செய்து, அனுப்பியிருந்தார். அதனைக் கேட்ட (பார்த்த) போது 55 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அதே பரவசம், நேற்று மீண்டும் எனக்குள் பூத்தது. அந்த உணர்வை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.(ரஹ்மானுக்கும், ரஜெந்தனுக்கும் நன்றி)
*தற்போது Netflix தளத்திலும் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.