‘ஈழ சினிமா’ : உண்மையான படைப்பாளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் – இயக்குனர் மதிசுதா உருக்கமான வேண்டுகோள்

521

ஈழ சினிமாவில் அவ்வப்போது சில சர்ச்சைகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த தேவையற்ற சர்ச்சைகளை அத்துறையில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாலும் வெளியில் இருந்து விமர்சிப்பவர்கள் அதனை ஒட்டுமொத்த ‘ஈழ சினிமா’வின் பிரச்சினைகளாகவே சுட்டிக்காட்டுகின்றனர்/ விமர்சிக்கின்றனர். அதனால், துறையில் இருக்கும் பொறுப்பானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டுக்கு தள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த சினிமாவும் அவப்பெயருக்கு ஆளாகும். அது; இந்த துறையில் கனவுகளுடன் முழு மனதாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பலரையும் காயப்படுத்தும்.

அண்மைய நாட்களாக ஈழத்து நடிகை என கூறப்படும் ஒருவர் குறித்த சர்ச்சை ஒன்று இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது கொரோனா முடக்க காலம் என்பதால் வீடுகளில் முடங்கியிருக்கும் பலரும் அது பற்றி அவதானம் செலுத்துகின்றனர்/ பேசுகின்றனர். சமூக வலைத்தளங்களில் அது பேசுபொருளாக மாறியது மட்டுமல்லாமல்; பலரும் அந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு ‘ஈழ சினிமா’ மீது தங்கள் விமர்சனக் கணையத் தொடுத்து வருகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த ஈழ சினிமா கலைஞர்களும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

பல்வேறு கலைஞர்களின் தியாகங்களாலும் போராட்டங்களாலும் கட்டி எழுப்பப்பட்டு கொண்டிருக்கும் ‘ஈழசினிமா’ எனும் கோபுரம் ஒரு சிலரின் தனிப்பட்ட நடத்தைகள் காரணமாக சரிந்து விழுந்துவிடக்கூடாது என்ற கவலை பலருக்கும் இருக்கின்றது. எனவே பொழுது போக்கிற்காகவும் பிரபல்யத்துக்காகவும் சினிமாவில் இருக்கும் ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த துறையையும் விமர்சிப்பதை பல ஆத்மார்த்தமான கலைஞர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது விடயம் குறித்து இயக்குனர் மதிசுதா தன் ஆதங்கங்களை பேஸ்புக்கில் பதிந்துள்ளார். ஈழ சினிமாவில் 10 வருடங்களாக இயங்கி வரும் அவர், பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளதுடன், முழு நீளத்திரைப்படங்கள், காணொளி பாடல்களையும் இயக்கியுள்ளார். பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர். போருக்கு பின்னரான ஈழ சினிமாவின் முக்கிய அடையாளம் மதிசுதா என்றாலும் மிகையில்லை. தனது பத்தியை பிரதி செய்து பகிர்வதற்கான அனுமதியையும் அவர் வழங்கியுள்ளார். எனவே, நாங்களும் பகிர்கின்றோம்.

எமக்கு பேசுவதற்கு பேசுபொருள் மட்டும் தேவையே தவிர அது பற்றி சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.

ஒரு போராட்டம் மிகுந்த துறைக்குள் எந்த வித சுயகட்டுப்பாடுகளும் இன்றி வந்ததுடன், வந்து வெறும் ஒன்றரை வருடத்துக்குள்ளான காலப் பகுதி கொண்ட ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு,

பலநூற்றுக்காணக்கானவரின் இத்தனை வருடப் போராட்டத்தை எப்படி உங்களால் கொச்சைப்படுத்த முடிகின்றது.

ஏற்கனவே இணையத்தில் உங்கள் படைப்புக்களை “ஈழசினிமா” என்ற அடை மொழியில் பகிர முடியாது. அப்படிப் பகிர்ந்தால் அப்படைப்பை இணையமே வலுவிழக்க வைத்து விடுகின்றது.

ஏனென்றால் ஈழம் என்ற சொற்பதத்தை அடியோடு இல்லாமல் செய்வதே அதன் நோக்கமாகும்.

ஈழ சினிமாக்காரர் என்ற சொல்லுக்கு பின்னால் எந்தப் பெரிய போராட்டம், தியாகம், சுயகட்டுப்பாடு இருக்கின்றது. அதை எத்தனை பேர் சிரமேற்கொண்டு செயற்படுகின்றார்கள் என்று ஒரு நாளாவது சிந்தித்ததுண்டா ?

1) இதற்காக பல்கலைக்கழகத்தை விட்டு விட்டு வந்தவர் இருக்கின்றனர்.
2) அரசாங்க வேலையை விட்டவர் இருக்கின்றனர்.
3) சொந்த வாகனத்தை ஈடு வைத்து படம் எடுத்தவர் இருக்கிறார்கள்.
4) வங்கிக் கடன் எடுத்து படம் முழுகிப் போக முழித்தவர்கள் உண்டு
5) திருமணம் இன்றி இருக்கிறார்கள்
6) திருமணமாகியும் குழந்தையை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
7) வீட்டுடன் பிரச்சனைப்பட்டு பேசாமல் இருக்கிறார்கள்.
8) பெரும் கல்லூரியில் பட்டம் பெற்றும் பெரிய சந்தர்ப்பங்களை கைவிட்டு ஈழ சினிமா தான் வேணும் என்று விட்டு வந்தவர் உண்டு.
9) பெரிய பெரிய வர்த்தக அறிவிருந்தும் அவ் உழைப்பை விட்டு படம் எடுக்கப் போகிறேன் என இதற்குள்ளேயே கிடப்பவருண்டு.
10) ஓட ஒரு மோட்டார் சைக்க்கிள் இருக்காத நிலையிலும் அதற்கு சேர்த்த காசில் குறும்படம் எடுத்தவன் இருக்கிறான்.

இது என்னோடு பழகும் சக படைப்பாளிகளின் ஆதாரத்துடன் கூடிய தியாகங்களே, நான் கூறத்தவறிய பலது இருக்கலாம்.

இவை எல்லாம் படிக்கும் போது உங்கள் உள்மனம் சொல்லும் முட்டாள்கள், பைத்தியங்கள் எனும் வார்த்தையைத் தான் ஆனால் அந்த அவமானம் எல்லாம் இந்தப் போராளிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல…

முடிந்தால்..
நான் ஈழசினிமாக்காரன் என்பவனிடம் சில கேள்வி கேளுங்கள்.

1) நீ இந்த துறைக்கு வந்த நோக்கமென்ன ?
2) இதற்காக நீ இழந்தது என்னென்ன ?
3) இத்துறைக்குள் உனக்கென நீ வைத்திருக்கும் சுய கட்டுப்பாடுகள் என்ன ?
4) எவ்வளவு காலமாக இதற்குள் இருக்கிறாய்?
5) எவ்வளவு காலம் இருக்கப் போகிறாய் ?
6) நீ செய்யும் படைப்பால் ஈழ சினிமாவுக்கு என்னென்ன சாதகமும் என்னென்ன பாதகமும் என நினைக்கிறாய் ?

இத்தனைக்குமான கேள்விக்கும் வரும் பதில்களை வைத்துக் கொண்டாவது முடிவெடுங்கள்.

ஈழ சினிமா என்றால் என்ன ?
யார் யார் ஈழ சினிமாக்காரர் ?

இது எனக்குமட்டுமல்ல என் போன்ற பல திரைப் போராளிகளின் கனவு , இலட்சியம் , உலகம் எல்லாமே இது தான் தயவு செய்து சிற்றின்பங்களுக்காக எங்கள் கோட்டையை தகர்த்து விடாதீர்கள்.

நான் வழமையாக இவ் வார்த்தையை கேட்பதில்லை ஆனால் இதற்காக கேட்கின்றேன்.

எம் உழைப்பையையும் உண்மைத் தன்மையையும் மற்றவருக்கு சொல்வதற்காக இப் பத்தியை ஒத்தி ஒட்டியாவது (copy and paste) மற்றவருக்கும் பகிருங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா.
(ஈழ சினிமா செயற்பாட்டாளர்)