கொரோனா அச்ச சூழலைக் கதைக்களமாகக் கொண்ட ‘தலைமை’ குறும்படம்

483

எஸ்.எஸ். மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைமை’ குறும்படம் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சசிகுமார் ரட்ணம் இன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லீ இயக்கியுள்ளார்.

ஜொனி, பிரியா, இதயராஜ், வஷ்மியா பிரசாந்தன், தினுஜா, ஜனத், ஜெயந்தன் விக்கி, கவோன், ஜொகிந்தன், சஞ்ஜீவன் மற்றும் குழந்தை நட்சத்திரமாக ஜனத் ஆகியோர் நடித்துள்ள இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு பிரியன் அருள், படத்தொகுப்பு கெமல், இசை மற்றும் சிறப்பு சப்தம் பகீர் மோகன், கலை இயக்கம் கலாமோகன், ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ்.

கொரோனா அச்ச சூழ்நிலையால் இவ்வருட ஆரம்பத்தில் ஒட்டுமொத்த உலகமே முடங்கிப்போயிருந்தது. அதற்கு இலங்கையும் விதிவிலக்கு அல்ல. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உச்சம் பெற்ற இந்நிலைமை மே மாதத்திற்கு பின்னர் கொஞ்சம் தணிந்துள்ளது.

கொரோனா அச்சத்தை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரங்கால் முடங்கிப்போன இயல்பு நிலை மீண்டு வர பல நாட்கள் ஆயிற்று. குறித்த காலப்பகுதியில் குடிகாரனைக் குடும்பத் தலைவனாக கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நிகழும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘தலைமை’ குறும்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

கதை மிகவும் எளிமையானது என்பதால் திரைக்கதையில் மினைக்கெட்டிருக்கலாம். அந்த மினைக்கெடல்கள் போதாதோ? என்ற படத்தை பார்த்த போது எண்ணத் தோன்றியது.

ஜொனி, பிரியா மற்றும் இதயராஜின் அனுபவம் நடிப்பில் தெரிந்தது. அதுவும் ஜொனி மற்றும் பிரியா மிகவும் இயல்பாக நடித்திருந்தார்கள். இதயராஜின் மனைவி மற்றும் வீட்டு உரிமையாளராக வருபவர்களின் நடிப்பில் செயற்கை ஒட்டிக்கொண்டுள்ளது. அவர்களை இயக்குனர் இன்னும் பட்டை தீட்டியிருக்கலாம்.

பிரியனின் ஒளிப்பதிவு நன்று. ‘ட்ரோன்’ காட்சிகள் அபாரம். இசை தேவைக்கு ஏற்ப நெருடல் இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக கத்தரித்து படத்தின் அளவைக் கொஞ்சம் குறைத்திருந்தால் சுவாரசியம் அதிகரித்திருக்கும். வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..