சிந்திக்கத்தூண்டும் சோபனாசிவனின் DEATH OF ADAM குறும்படம்!

376

”படைப்பாளிகள் உலகம்” ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் சோபனாசிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் DEATH OF ADAM.

இதன் ஒளிப்பதிவை சோபனாசிவனும் படத்தொகுப்பை திலீப் லோகநாதனும் மேற்கொண்டுள்ளனர். புவனேஸ்வரன் பிரசாந் இதில் நடித்துள்ளார்.

போதைப்பொருட்களின் பாவனை வடபகுதியில் அதிகரித்திருப்பதாக தரவுகள் குறிப்பிடும் நிலையில், புகைத்தலின் கெடுதல் பற்றி சொல்லிப்போகிறது இந்தக் குறும்படம்.

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு விழிப்புணர்வுக்குறும்படம் என்றாலும் அதை சொல்லிய விதத்தில் “அட” போட வைக்கின்றார் இயக்குனர்.

படத்தின் தொழில்நுட்ப விடயங்கள் நிறையவே கைகொடுத்திருக்கின்றது. அந்த வகையில் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளருடன் ஒலிச்சேர்கையில் இணைந்து கொண்ட ஜொனா மற்றும் ரொஷானும் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரு அறைக்குள் நடந்த படப்பிடிப்பில் தன் பங்குக்கு கலை இயக்குனர் மா.மல்கினும் புகுந்து விளையாடியுள்ளார்.

போதைப்பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்பவர்களின் உடல் ஒட்டிப்போயிருக்கும் எனக்குறிப்பிடுவார்கள். அதற்கேற்ற பொருத்தத்துடன் புவனேஸ்வரன் பிரசாந் நடித்தாரா? அல்லது வாழ்ந்தாரா? எனச்சந்தேகிக்கும் அளவிற்கு பாத்திரத்திற்கேற்ப ஒட்டியிருக்கின்றார் நடிகர்.

மொத்தத்தில் இதுவொரு சிறந்த விழிப்புணர்வுக் குறும்படம். தொடர்ந்தும் தன் படங்கள் ஊடாக சமூகத்திற்கான விழிப்புணர்வு செய்திகளை கொடுக்கும் இயக்குனர் சோபனாசிவன் பாராட்டுக்குரியவர்.