நல்லிணக்கத்தின் போலித்தனத்துக்குள் சிக்கித் தவிக்கும் “ஈழம் சினிமா”! – ஞானதாஸ் கவலை வெளியீடு

462

நல்லிணக்கத்தின் போலித்தனத்துக்குள் நம் படைப்பாளிகள் (“ஈழம் சினிமா”) சிலர் சிக்கித் தவிப்பதாக மூத்த திரைத்துறைக் கலைஞர், குறும்பட இயக்குனர், விமர்சகர் ஞானதாஸ் காசிநாதர் கவலை வெளியிட்டுள்ளார்.

பத்மயன் இசையில் கிஷாந்த் ஸ்ரீ இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த “வெருளி” பாடலை மேற்கோள் காட்டி அவர் இந்த விடயத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்திருந்தார். (Click to watch the song) இந்த நல்லிணக்கக் கோட்பாட்டின் அடிப்படை அம்சமான “இரண்டறக் கலத்தல்” என்னும் போலித்தனத்தின் அடிப்படையில் “சிங்களமும் தமிழும்” சரி சமனாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது இப்பாடலின் பெரும் தோல்வியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றான ஒரு விமர்சனத்தை அண்மையில் நவயுகா இயக்கத்தில் வெளிவந்த “பொட்டு” குறும்படத்திற்கும் அவர் வைத்திருந்தார். ஆனால், பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. “நல்லிணக்கம்” என்ற மாயைக்குள் எவ்வாறு எம் தனித்துவங்கள் இல்லாது போகின்றன / போகப்போகின்றன என்பதை சற்று விரிவாக ஞானதாஸ் அவர்கள் இப்பதிவில் எழுதியுள்ளார். அதனை குவியம் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

“வெருளி” : சிங்களமும் தமிழும் இரண்டறக் கலக்கும் புதிய கானம்!
சிங்கள வரிகளின் அர்த்தம் தெரியாவிடினும் அவை செந்தமிழோடு கலந்து தேன் என ஒலிக்கின்றன. அந்தவகையில் பத்மயனின் இசை அற்புதம். மதுவி எனும் இளங்குயிலின் மயக்கும் குரல் அதிசயம். கூடவே பாடிய அனைவருக்கும் பாராட்டுகள்!

ஆயினும்…. பெரும் உழைப்போடும், கவனத்தோடும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வெருளி பாடலும் ஒரு “நல்லிணக்கப் ப்ரஜெக்ட்” என்பதுதான் பெரும் சோகம்.

நான் இன நல்லிணக்கத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால் “இரண்டறக் கலத்தல்” எனும் இந்த போலி நல்லிணக்கத்துக்கு எதிரானவன். ஏனெனில் அது ஆரோக்கியம் அற்றது. சாத்தியமற்றது. மனித குலத்தை எவ்விதத்திலும் முன்னோக்கி நகர்த்தாது. இப்பாடலுக்கும் எவ்விதத்திலும் அது புதுமை சேர்க்கவில்லை!

2009 க்கு முன்னர், Conflict Resolution, Conflict Transformation என்னும் செயற்திட்டங்களை மேற்கொண்டு வந்த வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள், 2009 க்குப் பின்னர் Reconciliation என்னும் கோப்பாட்டை முன்னிறுத்தி அரச அனுசரணையோடு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. Conflict என்னும் சொல்லைக் கூட பயன்படுத்த அரசு இப்ப அனுமதிப்பதில்லை. அந்த வகையில் தான் FLICT என்னும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் காணாமல் போய்விட்டது. (CON + FLICT)

2009 க்குப் பின்னரான இந்த நல்லிணக்க வேலைகளுக்காப் பில்லியன் கணக்கில் பணத்தை இறைக்கின்றன அரச அதரவோடு இயங்கிவரும் தொண்டு நிறுவனங்கள். நாம் ஒரு முழு நீளப்படம் செய்ய நம் புலம்பெயர் உறவுகளிடமிருந்தும் உணர்வாளர்களிடமிருந்தும் ஒரு சில இலட்சங்களைத் திரட்ட படாத பாடு பட வேண்டியுள்ளது. ஆனால், இந்தத் தொண்டு நிறுவனங்கள் நல்லிணக்க குறுந்திரைப்படம் ஒன்றுக்கு வழங்கும் குறைந்த பட்ச பணம் 25 இலட்சம் ரூபாய்களாகும். (LKR 2.5 Million)

சினிமாக் கனவோடும் வெறியோடும் இருக்கும் எம் படைப்பாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது ஒன்றும் தவறில்லை. அது தவிர்க்க முடியாததும் கூட. ஏனெனில் நாம் அடிமைகள்! அந்த வகையில் இந்த “வெருளி” பாட்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதில் தவறில்லை.

ஆனால், இந்த நல்லிணக்கக் கோட்பாட்டின் அடிப்படை அம்சமான “இரண்டறக் கலத்தல்” என்னும் போலித்தனத்தின் அடிப்படையில் “சிங்களமும் தமிழும்” சரி சமனாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது இப்பாடலின் பெரும் தோல்வியாகும். நான் இதன் படைப்பாக்கம் சார்ந்த தோல்வியை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு பாடல் பல்மொழிகளைக் கொண்டிருப்பது ஒன்றும் தவறில்லை. அது புதிதும் இல்லை. ஆனால் அவ்வாறு பல மொழிகள் கலக்கும் போது அது அந்தப் பாடலுக்கு மேலதிக பெறுமானத்தை (Added Values) வழங்க வேண்டும். இன்னொரு மொழியைக் கலந்ததால் அப்பாடலின் சுவை மேலும் அதிகரித்திருக்க வேண்டும். அது புதிய அனுபவத்தை வழங்கவேண்டும். அப்படி இன்னொரு மொழியை கலந்திருக்காவிட்டால் அந்தப் பாடல் இவ்வளவு சுவையாக இருந்திருக்காது என்பதைக் கேட்போர் உணர வேண்டும்.

இந்திய தமிழ்ச் சினிமாப் பாடல்கள் பல இதற்கு நல்ல உதாரணமாக இருக்கின்றன. தமிழுக்குள் வரும் மலையாளமோ, தெலுங்கோ, ஹிந்தியோ, அரபியோ… அவை எவ்வளவு சிலிர்ப்பையும் புதிய அனுபவத்தையும் எமக்குத் தருகின்றன. ஏனெனில் அவை இரண்டறக் கலக்கவில்லை. தமிழுக்குள் மருந்து போல் வந்து போகின்றன.

சிங்களம் தமிழுக்குள் வந்து போகும் இன்று வரை நாம் இரசிக்கும் பாடல் ஒன்று உள்ளது. பைலட் பிறேம்நாத் படத்தில் வரும், “உடரட்ட மேனிக்கே மனஹர ஹந்துற திலகே… கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பிலதானே கல்யாணம்” என்னும் பாடல்.

இந்தப் பாடல் தரும் அந்த சிலிர்ப்பை அல்லது புது அனுபவத்தை இந்த வெருளி எனும் இரு மொழி பாடலால் தரமுடியவில்லை. இந்தப் பாட்டில் இருந்து சிங்கள வரிகளைத் தூக்கிவிட்டாலும் இந்தப்பாடல் ஒன்றையுமிழக்கப் போவதில்லை. அது இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமலிருப்பதும் ஒன்று தான். பின்னர் எதற்கு இந்தக் கலவை?

சிங்களமும் தமிழும் இரண்டறக் கலத்தல் என்னும் போலி நல்லிணக்கக் கோட்பாட்டை வலியுறுத்த வேண்டிய நிலை பத்மயன் அவர்களுக்கும் இப்பாடலின் இயக்குனர் கிஷாந்த் சிறி அவர்களுக்கும்!

பாடலில் சிங்களமும் தமிழும் இரண்டறக் கலப்பதால் அப்படி ஒன்றும் நாம் எதையும் பெரிதாக இழந்துவிடப் போவதில்லை. ஆனால், 75 வீத பெரும்பான்மை இனத்துடன் வெறும் 11 வீத தமிழர்கள் இரண்டறக் கலந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று இந்த நல்லிணக்கத்தின் பின்னால் அலையும் சினிமாப் போராளீஸ் நினைத்துப் பார்த்தால் சரி!

இந்தப் சினிமா போராளீஸ் நினைக்கலாம் “அவங்கடை காசை வாங்கி எங்கடை சினிமாவை வளர்ப்பம், பிறகு அவங்களுக்கு வைப்பம் ஆப்பு” என்று. இதையே அந்தக் காலத்திலே இந்தியாவின் உதவியை நாடிய பல “புரட்சிகர இயக்கங்களும்” சொன்னன. அப்படியே திட்டமும் தீட்டினர் என்பதை நினைவு படுத்துகிறேன்.