அடேங்கப்பா! ஒரு ஓட்ட வடைக்குள் இம்புட்டு அரசியலா?

516

எங்கட ஆக்கள் எந்தக் குழந்தைக்கும் முதல்ல சொல்லிக்குடுக்கிறது “பாட்டி வடை சுட்ட கதை“ தான். மேலோட்டமாக பார்த்தால் அது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக சொல்லப்படும் கதையாக இருந்தாலும் அதற்குள்ளேயே மிகப்பெரும் அரசியல் இருக்கின்றது.

பாட்டியிடம் இருந்து வடையைச் சுடும் காகத்தின் “லாவகம்”, பாட்டியின் “ஏமாற்றம்”, நரியின் “தந்திரம்” என்று பல விடயங்களை அந்தக்கதையில இருந்து படிக்க முடியும். பாட்டியின் சாதா வடையிலேயே அம்புட்டு அரசியல படிக்கலாம்னா.. பூவன் மதீசனின் சுட்ட ஓட்ட வடையில இருந்து எம்புட்டு அரசியல படிக்க வேணும். உண்மையில பலரும் படிச்சிட்டு இருக்காங்க எண்டது தான் உண்மை.

சரி, அப்பிடி என்ன அரசியல இந்த மதீசன்ட “வடை“க்குள்ள கண்டு பிடிச்சிட்டியள்? மதீசன் ஒண்டும் சொல்லேல.. அவர் ஒரு பாட்டு தான் செய்திருக்கின்றார். அப்படீன்னா நீங்க ஒவ்வொருவரும் அதை விளங்கிக் கொள்ளுற முறையில தான் “அந்த அரசியல்“ இருக்கு. விளங்கியிருக்கும் எண்டு நம்புறம்.

இந்தப் பாட்டு தொடர்பில் ஒருவர் பகிர்ந்திருந்த கருத்து இவ்வாறு இருக்கின்றது. ”ஒரு தலைமுறை கடந்த பின் வரலாறு புத்தகமாகி விடுவதால் பலரால் சுமக்க முடிவதில்லை. அதற்குப் பதில் கதையாக கடந்துங்களேன் என்ற சிந்தனையை இலாவகமாச்சொல்லுது #வடை”. உண்மை தான். ஈழத்தமிழர்களின் கதைகளை சினிமா (பாடல், படம்) எனும் ஊடகம் மூலமே எதிர்கால சந்ததிக்கு கடத்துவது ஒரே வழி. ஆனால் அது இலகுவானதல்ல.

மதீசனின் எண்ணத்திலும் வரிகளிலும் குரலிலும் உருவாகியிருக்கும் இந்தப்பாடலுக்கு சுஜீத் ஜி (லண்டன்) குரல் கொடுத்திருக்கின்றார். பாடலின் அரசியலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கின்றார் சிவராஜ். படத்தொகுப்பு சசிகரன் யோ. இன்னும் இந்தப் பாடலில் பணியாற்றிய ஏனைய கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எல்லா கலைஞர்களுக்கும் சமூக அக்கறை இருந்து விடுவதில்லை. ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அந்த வகையில் தொடர்ச்சியாக சமூக அக்கறையுடன் பல படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கும் மதீசனுக்கு வாழ்த்துக்கள்.