மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இலங்கையில்? – நம் நாட்டுக் கலைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

649

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைப்படமாகிறது. இதனை ஈழத்தமிழரான அல்லிராஜா சுபாஸ்கரனின் “லைக்கா புரொடக்ஷன்ஸ்” நிறுவனம் மணிரத்னமின் “மெட்ராஸ் டாக்கீஸ்” உடன் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்கின்றது.

நாவலில் வரும் ஈழத்து நிலப்பிரதேசங்களில் அது படமாக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதற்கமைய பிரதான நடிகர்கள் உள்ளிட்ட படக்குழு விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கதையின்படி ஈழத்துக்கதாபாத்திரங்களை ஈழத்துக் கலைஞர்களே நடிக்க தயாரிப்பாளர்கள் தரப்பு தீர்மானித்துள்ளது. அந்த வகையில், இலங்கையில் தற்சமயம் ஆவர்வமுள்ள கலைஞர்களின் தொடர்புகள் பெறப்படுகின்றன.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்கள் ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்சமயம் இந்தியாவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பெரிய பட்ஜட் படங்களின் படப்பிடிப்புக்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், தயாரிப்புத் தரப்பான லைக்கா இலங்கையில் இப்படப்பிடிப்பை தொடர விருப்பம் வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிகின்றது. இதற்கு பிரதான காரணமாக இலங்கையில் கொரோனா அச்சம் குறைந்திருக்கின்றமையைக் குறிப்பிட்டாலும், லைக்கா நிறுவனம் இலங்கையிலும் தனது வர்த்தகத்தை விரிவு படுத்தி கிளைகள் பரப்பி பெரு விருட்சமாக வளர்ந்து நிற்பதால் இலங்கையில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி படப்பிடிப்புக்களை நடத்துவது மிக சுலபம் என கருதப்படுகிறது.

பொன்னியின் செல்வனின் இலங்கைப் படப்பிடிப்புக்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் விடுக்காத போதும், இலங்கை இந்திய ஊடகங்களில் இது தற்சமயம் பேசுபொருளாகியுள்ளது. ஒரு பிரமாண்ட படத்தின் படப்பிடிப்புக்களுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அது “பொன்னியின் செல்வன்” ஆக இருப்பதற்கு 99 சதவீத சாத்தியங்கள் உண்டு. எனவே, இலங்கையில் ஆர்வமுள்ள கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக சிங்கள சினிமாவின் பிரபல இயக்குனர் பிரசன்ன விதானகே செயற்படவுள்ள அதேநேரம், தமிழ் கலைஞர்கள் இயக்குனர் கேசவராஜான் நவரட்னத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“பொன்னியின் செல்வன்” பல இந்திய இயக்குனர்களின் கனவுப்படம். அதுவும் இயக்குனர் மணிரத்னம் இதனை படமாக எடுக்க வேண்டும் என பல வருடங்கள் முயற்சித்திருந்தார். தற்சமயம் அது லைக்காவின் கைகோர்ப்பால் சாத்தியமாகியுள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா, திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கான இசை ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின் முதற்பாகத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாம்!