மதிசுதாவின் ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’ குறும்படத்திற்கு மீண்டும் ஒரு சர்வதேச விருது

1094

மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி அண்மையில் யு-ரியூப்பில் வெளியிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படம் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’. இது ஏற்கனவே சில சர்வதேச விருதுகளைச் சுவீகரித்துள்ள நிலையில், தற்சமயம் மீண்டும் ஒரு சர்வதேச விருது கிடைக்கப்பெற்றுள்ளதாக இயக்குனர் மதிசுதா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்புக்கள் மட்டும் தான் அடையாளமானவை. அவனது நடை உடை பாவனையோ செயற்பாடுகளோ அல்ல என்பதும் என் தாரக மந்திரங்களில் ஒன்றாகும். அதற்கான அடையாளத்தை ”வெடிமணியமும் இடியன் துவக்கும்” மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சர்வதேச படைப்புக்களையும் உள்வாங்கி ரொரண்டோவில் இடம்பெறும் Toronto Tamil (I) Film Festival இல் சிறந்த குறும்படத்துக்கான விருதை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இக் கொண்டாட்டங்களுக்கெல்லாம் சாமி அப்பா எம்மோடு இல்லாத போதும் அவர் ஆத்மா ஈழசினிமாவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.

இப்படைப்புக்காக திரையில் வாழ்ந்த அனைவருக்கும், அத்துடன் என்னோடு இப்படைப்புக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் நன்றியைப் பகிர்ந்து கொள்வதுடன், இப்போட்டி ஏற்பாட்டாளருக்கும் எனது உளப்பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விருது விழாவானது Saturday, September 12, 2020 அன்று Netwyn Place இல் இடம்பெறுகின்றது.

குறிப்பு – இக்குறும்படமானது தமிழ் மொழி கடந்த சர்வதேசப் போட்டிகளுக்கான அட்டவணையில் Hunter Maniyam என்ற பெயரிலேயே பங்கு பற்றியிருந்தது.