பைரவியின் மிகப்பெரும் கலைப்பாய்ச்சல் ‘கனாக்கள் கண்டேன்’ பாடல்

704

தினந்தோறும் புதிது புதிதாக பல கலைஞர்கள் எம்மத்தியில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படி ‘கனாக்கள் கண்டேன்’ பாடல் மூலம் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றார் பாடகி பைரவி.

அவரது தயாரிப்பில் அவரது மெட்டு, வரிகள் மற்றும் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் பைரவியின் இசைத்துறை சார்ந்த சினிமாப் பயணத்தில் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.

திசோன் விஜயமோகன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை பைரவியுடன் இணைந்து இலங்கேயன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கின்றது. ரெஜி செல்வராசாவின் ஒளிப்பதிவில், கதிரின் படத்தொகுப்பில் அழகான காணொளிப்பாடலாக இதனை இயக்கியிருக்கின்றார்கள் கதிர் மற்றும் ஆகாஷ். பாடலில் விதுர்ஷன் மற்றும் தரு கங்காதரன் ஆகியோர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்.

அதனைவிட இந்தப் பாடலில் பங்கேற்ற இசைக்கலைஞர்களுடன் பைரவியும் தோன்றியுள்ளார். வழக்கம் போல சிவி லக்ஸ் ‘ராப்’ வரி மற்றும் குரலில் பின்னியிருக்கின்றார்.

நாயகன் நாயகியை நினைத்துப் பாடும் பல பாடல்களுக்கு மத்தியில் இப்படி நாயகி நாயகனை நினைத்துப் பாடும் சில பாடல்களும் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் வந்து தான் போகின்றது. 2000 களின் பின்னர் அப்படி வெளிவந்த ஒரு அழகான பாடல் தான் ‘வசீகரா..’ அதேபோல, இந்தப் பாடலின் வரிகள் அதன் குரலின் உயிரோட்டம் பாடலைக் காட்சிப்படுத்திய விதம் என அனைத்தும் பாராட்டும் படி உள்ளது.