மலையகத்திலிருந்து உயிரோட்டமான ஒரு குறும்படம் ‘ஏரோபிளேன்’

424

அகனிகம் பிலிம்ஸ் தயாரிப்பாக ரி.கே.யுகனின் இயக்கத்தில் எஸ்.பிரசாத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் உருவாகி கடந்த அன்னையர் தினத்தில் யு-ரியூப்பில் வெளியிடப்பட்ட குறும்படம் ‘ஏரோபிளேன்’.

தமது வேலை நேரத்தில் இறந்து போன பல தேயிலைத் தோட்ட தொழிலாள தாய்மார்களுக்கு இப்படத்தினை சமர்ப்பணம் செய்வதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது. மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் உயிரோட்டமாக அமைந்திருக்கின்றது.

தேவி, நிரஞ்சன், ஷான் சதீஸ், கிருஷாந்தி, திலீபா, கல்யாணி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இக்குறும்படம் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் கனவுகளுக்கும் நடுவே ஊசலாடும் மலையக மக்களின் பிரச்சினையின் ஒரு பகுதியை சொல்லிப்போகின்றது.

அட்டைக்கடி, சிறுத்தைகள் சஞ்சாரம், குளவித் தாக்குதல் இவற்றின் மத்தியில் தேயிலைக் கொழுந்து கொய்யும் மலையகத் தாய்மாரின் இடர்களை படம்பிடித்துக் காட்டுகின்றது. படத்தில் மலையக மக்களின் லய வாழ்வியலை அப்படியே பிரதிபலித்திருக்கின்றது. சின்னச்சின்ன விசயங்களையும் கவனித்து பதிவேற்றியிருக்கின்றார் இயக்குனர்.

குறும்படத்தில் நேரடியாக கள ஒலிப்பதிவை பாவித்தமை சிறப்பு. அதிலும் குறிப்பாக அவர்கள் பேசும் மொழியை அப்படியே பதிவு செய்தமை அதிசிறப்பு. டப்பிங் பேசப்போனால், சில வசனங்கள் செயற்கையாகப் போய்விடும். நிஜத்தை அழகாக பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு கச்சிதம். மலையகத்தின் அழகை ஏரியல் வியூவில் காட்டியதும் சிறப்பு ஏழ்மையின் மறுபக்கத்தை பதிவு செய்த விதமும் சிறப்பு. படத்தொகுப்பும் கிராபிக்ஸ் காட்சிகளும் கை கொடுத்திருக்கின்றது. அந்த வகையில் எஸ்.பிரசாத் பாராட்டுக்குரியவர்.

‘கனவு காண்பதற்கு அல்ல, சாதிப்பதற்கு’ என்பதை அடிக்கோடிட்டுச் செல்லும் இக்குறும்படம் மலையக சினிமாவின் முக்கிய பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு..