“கருவலி” குறும்படம் – விமர்சனம்

694

அறிமுக இயக்குனர் சங்கீதா நடேசலிங்கத்தின் இயக்கத்தில் “படைப்பாளிகள் உலகம்” வெளியீடாக அண்மையில் வெளிவந்த குறும்படம் “கருவலி”. இந்தப் படத்தில் அஜய், பிரியா பிரதான பாத்திரங்களாக நடித்திருந்தனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சசிகரன் யோ. இசை பகீர் மோகன்.

“குழந்தைப் பேறின்மை” என்கிற விடயத்தை கதைக் கருவாகக் கொண்டு, ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையை சித்தரித்திருக்கின்றார்கள். பொதுவாக எம் சமூகத்தில் குழந்தையில்லாத பெண்ணுக்கு ஈஸியாக கிடைக்கும் “மலடி” என்கிற பட்டமும், அவள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதும், கேலிப் பேச்சுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாக தொடந்து வருகின்றது.

21 ஆம் நூற்றாண்டில் உலகம் எவ்வளவு முன்னேறி விட்டது என பெருமை பேசினாலும், இன்னமும் “குழந்தை இல்லை” என்ற ஒரே காரணத்திற்காக குடும்பப் பெண்களை மங்கல நிகழ்வுகளுக்கு கூட முன்னிருத்தாமை வருத்தத்திற்கு உரிய விடயமாகும். பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டி புகுந்த வீட்டார் கூட புறம் பேசுவதும், தங்களது மகனுக்கு வேறு திருமணம் குறித்து சிந்திப்பதும் வேதனையானது.

ஆனால், இக்கதையில் பெண்ணின் கணவன் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பெண்ணின் குறையை தன் குறையாக கூறி அவளை சமரசம் செய்ய முற்படுவதும் சிறப்பான முன்நகர்வு. இறுதியில் பெண் துணிச்சலான முடிவு எடுப்பவளாக அல்லாமல், அதர பழசான “தற்கொலை” எனும் முடிவுக்கு வருகிறாள் என்பது கொஞ்சம் நெருடலே!

அது போக, குழந்தைப் பேறின்மை தொடர்பில் தற்காலத்தில் இருக்கக்கூடிய நடைமுறை “சகல தம்பதிக்கும் குழந்தை” என்பது தான். இதனைத் தான் நவீன மருத்துவமும் வைத்தியர்களும் குறிப்பிடுகின்றார்கள். “கருவலி” படத்தின் பிரதான குறையாக காட்ட முற்படுவது என்ன? “கர்ப்பப்பை பலவீனம்” தானே! அதற்குத் தான் “வாடகைத் தாய்” முறை இருக்கின்றது. இதனைத் தான் இறுதிக் கட்டமாக வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றார்கள். இந்தியா போன்ற நாடுகளில் குறித்த வாடகைத் தாய்மாரை, மகப்பேற்று வைத்திய நிலையங்களே (தனியார்) பொறுப்பேற்கும் நிலைமை கூட இருக்கின்றது.

எனவே, இன்றைய காலகட்டத்தில் குழந்தை இன்மை என்பதை ஒரு குறைபாடாகவே யாரும் பார்ப்பதில்லை. மருத்துவ முன்னேற்றம் காணாத அந்தக் கால கட்டத்திற்கு பொருத்தமான ஒரு கதையே இது. இருந்தாலும், தனது முதற்படத்திலேயே சமூக அக்கறை உள்ள கதைக் களத்தை தேர்வு செய்த பெண் இயக்குனர் சங்கீதாவுக்கு எமது பாராட்டுக்கள்.

படத்தின் பிரதான பாத்திரங்களான அஜய் மற்றும் பிரியாவின் நடிப்பு அபாரம். தான் ஒரு கை தேர்ந்த நடிகை என்பதை பிரியா இதில் மீண்டும் நிரூபித்திருக்கின்றார். சசிகரனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு அதேபோல பகீர் மோகனின் இசை என்பன படத்திற்கு பக்க பலம்.

குவியம் புள்ளிகள் – 2.5/5