இந்தியாவில் வெளியிடப்படவுள்ள ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” – மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட இயக்குனர் மதிசுதா

479

மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க மகிழ்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர். அதாவது படம் முதற்கட்டமாக இந்தியாவில் திரையிடப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் மதிசுதா இன்று வெளியிட்டுள்ளார். அத்துடன், Crowd funding முறை மூலம் தயாரிக்கப்படும் தனது படத்திற்கான தயாரிப்பு மற்றும் விளம்பரப்படுத்தல்களுக்கான பணமும் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், உங்களைப் போல் தான் நானும் என் படத்தை திரையில் காணக் காத்திருக்கின்றேன் என்பதை முன்னரே சொல்லி உங்கள் திட்டுக்களில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றேன்.

1. கடந்த மாதம் படத்தின் முதலீட்டாளர்கள் தொடர்பான தரவேற்றம் ஒன்றில் 16 இலட்சம் ரூபாய்கள் படத்தில் இருந்து வெளியேறிய தரவேற்றம் ஒன்றை பதிவிட்டிருந்தேன். புரிந்துணர்வு தொடர்பான விடயங்களால் நடந்த அச் சம்பவம் சுமூகமாக நன் நிலையை அடைந்ததால் அப்பணம் மீளளிக்கப்பட்டு நான் அடைமானம் வைத்திருந்த வீடும், உந்துருளியும் மீளப் பெறப்பட்டிருக்கின்றது. உண்மையில் அதுவரை இணைந்த 161 பேரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என் சினிமாவுக்கு உதவுவதற்காக வந்தவர்களே அதனால் எவர் மனதும் புண்படக்கூடாது என்ற நன்றி எண்ணம் எப்போதும் எனக்குள்ளே உண்டு. என்னை நம்பி இவ்வளவு பணத்தை அளித்த அனைவருக்கும் மீண்டும் என் உளப்பூர்வ நன்றிகள்.

2. 161 பேருடன் இருந்த இக் குழுப்பணச்சேர்ப்பை இம்மாதம் 5 ம் திகதியுடன் முடித்துக் கொண்டு அனைவரது விபரங்களையும் வெளியிடுவதாகவும், விளம்பரத் தேவைக்காக பணம் தேவைப்படுவதால் மேலும் இணைய விரும்புபவரை இணையும்படியும் கேட்டிருந்தேன். அத்துடன் ஏற்கனவே வாக்குறுதி அளித்தவர்களையும் உறுதிப்படுத்தக் கேட்டிருந்தேன். பங்காளர் தொகை சடுதியாக 195 ஆக மாறியதுடன் விளம்பரச் செலவுக்கான தொகையும் கணிசமாக அதிகரித்து 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. பங்காளர் தொகையை 200 ஆக்கிக் கொண்டு பெயரை வெளியிட உத்தேசித்துள்ளேன்.

3. எதிர்பார்த்ததற்கு மேலாக விளம்பரச் செலவுக்கு பணம் கிடைத்ததால், ஏற்கனவே இத்திரைப்படத்தைக் காண இந்தியாவில் காத்திருக்கும் சில திரைப் பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சியுடன் படத்தின் வெளியீட்டுப் பயணத்தை ஆரம்பிக்க எமது விளம்பரக் குழு தீர்மானித்துள்ளது என்ற சந்தோச செய்தியை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். எனக்குறிப்பிட்டுள்ளார்.