இளங்கோ ராமின் ‘TENTIGO’ நாளை எஸ்தோனியாவின் PÖFF 27 திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது

400

இலங்கையின் முன்னணி விளம்பரப்பட இயக்குனராக அறியப்பட்ட எழுத்தாளர் / ஒளிப்பதிவாளர் – இளங்கோ ராம் இயக்கியுள்ள முதலாவது முழு நீளத்திரைப்படம் ‘நெலும் குளுனா – டெண்டிகோ’ (Nelum Kuluna – Tentigo). இதனை ஹிரண்யா பெரேரா தயாரித்துள்ளார்.

இருண்ட நகைச்சுவை (DARK COMEDY) வகையறாவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் எஸ்தோனியாவின் ‘Tallinn Black Nights Film Festival’ (TBNFF) திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

இதற்கமைய நாளை (நவம்பர் 15, 2023) புதன்கிழமை இதன் முதலாவது உலகத்திரையிடல் (world premiere) நடைபெறும்.

கேன்ஸ், வெனிஸ் மற்றும் பெர்லின் ஆகியவற்றுடன் உலகின் 15 ஏ-பட்டியல் திரைப்பட விழாக்களில் இந்த TBNFF திரைப்பட விழாவும் ஒன்றாகும்.

கௌசல்யா பெர்னாண்டோ, பிரியந்த சிறிகுமார, துசித லக்நாத், சமிலா பீரிஸ், சாந்தனி செனவிரத்ன, தில்ஹானி ஏகநாயக்க, சுலோச்சனா வீரசிங்க, அலோகா காயத்ரி, ரஞ்சித் பனாகொட, மதுர பிரபாஷ்வர, சமன் கோரலகே, சஞ்சீவ உபேந்திரா, அலோகா சம்பத், அசேல டி சில்வா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

லியோன் பாப் ஜேம்ஸ் இசையமைக்க, ஆதன் சிவானந்தர் படத்தொகுப்பு செய்துள்ளார். ஒலி மற்றும் இசை மேற்பார்வையாளர் – ரங்கன சின்ஹாரகே, தயாரிப்பு வடிவமைப்பாளர் அஜந்த அழககோன். உதவி இயக்குனர் – நிரோஷன் எதிரிமான்ன மற்றும் தயாரிப்பு மேலாளர் மஞ்சுளா பெரேரா

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு சொந்தமான தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் உடன் இணைந்து நெலும் குளுனா படத்தை 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம் என இயக்குனர் இளங்கோ ராம் தெரிவித்துள்ளார்.