ஆம்! அவள் எங்கள் வலி மறக்கப்பாடினாள்; புது வழி பிறக்கப்பாடினாள் #கில்மிஷா

106

ஸீ தமிழ் சரிகமப பாடல் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கின்றது எங்கள் ஈழத்துக்குயில் கில்மிஷா. இதன் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் பெருமை கொள்ளச் செய்திருக்கின்றாள் கில்மிஷா. இன்று அவளது வெற்றியை ஒட்டுமொத்த ஈழத்தமிழரும் தங்கள் வெற்றியாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

கில்மிஷா ஸீ தமிழ் சரிகமப போட்டியில் கடந்து வந்த பாதை மற்றும் அவளது இசைப்பயணம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

சிறுவயது முதலே இசை – நடனம் இரண்டிலும் ஆர்வம் கொண்ட கில்மிஷாவை அவளது பெற்றோர் இரண்டு துறைகளிலுமே பயிற்றுவித்தனர். அல்லும் பகலும் அவளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். இலங்கையில் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் கில்மிஷா தனது ஆடல் மற்றும் பாடல் திறமையை நிரூபித்து வந்தாள்.

அந்த சமயத்தில் தான் அவள் குழந்தைப்பாடகியாக இலங்கையின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான சாரங்கா இசைக்குழுவில் இணைந்து கொள்கின்றாள் கில்மிஷா. சாரங்கா இசைக்குழுவில் அவள் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளும், சனங்களின் கைதட்டல்களும் அவளை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றது.

பல தென்னிந்திய பின்னணிப்பாடகர்கள், சுப்பர் சிங்கர் – சரிகமப பாடகர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்புக் கிடைக்கின்றது. அவர்களது அனுபவங்களைக் கேட்டறியும் வாய்ப்புக்கிடைக்கின்றது. அதன் மூலம் அவள் தனது திறமையை இன்னும் புடம் போட்டுக்கொள்கின்றாள்.

யாழ்ப்பாணத்தில், ஊர் அறிந்த பாடகியாக விளங்கிய கில்மிஷாவுக்கு இன்னும் உயரப்பறக்க வேண்டும் என்பது கனவு. இலட்சியம். இன்று நாடறிந்த அல்ல… உலகறிந்த பாடகியாக மாறிவிட்டாள். அதற்கு காரணம் ஸீ தமிழ் சரிகமப மேடை.

ஸீ தமிழ் சரிகமப லிட்டில் ஷம் சீசன் 3 க்கான தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சரிகமப தயாரிப்பு குழுவுடன் தொடர்பை ஏற்படுத்தி, கில்மிஷா பாடிய பாடல்களை அனுப்பியது மட்டுமல்லாது இணைய வழியிலான நேர்காணலிலும் பங்குபற்றச் செய்கின்றனர் அவளது பெற்றோர்.

ஏறக்குறைய தெரிவு உறுதி என்ற போதிலும், சரிகமப மேடைக்குச் சென்று முதல் பாடலைப்பாடும் வரை அவர்கள் அதை வெளிப்படுத்தவில்லை. இறுதியில் அவள் சென்றும் விட்டாள். இப்பொழுது வென்றும் விட்டாள்.

“குயில் பாட்டு” அவள் ஸீ தமிழ் மேடையில் பாடிய முதல் பாடல். அந்த ஒரு பாடலைக் கேட்ட நடுவர்களுக்கே திகைப்பு. இப்படி ஒரு பாடகியா? அதுவும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து… என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அசத்தினாள் கில்மிஷா.

“இது நேர கொண்டே றைக்கோட் பண்ண வேண்டிய வாய்ஸ்”. அதாவது பின்னணிப்பாடகியாக அனைத்து தகுதிகளும் உனக்கு உண்டு என முதல் பாட்டிலேயே எடுத்துக்கூறினார் நடுவர், பின்னணிப்பாடகர் ஸ்ரீனிவாஸ். அது மட்டுமல்லாது எனக்கு இசையமைக்கும் ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் உன்னை நான் பாட வைப்பேன். ஏனைய இசையமைப்பாளர்களும் இவளைப் பயன்படுத்த வேண்டும் என ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவாக நின்றவர் பாடகர் ஸ்ரீனிவாஸ்.

அதேபோல, மற்றுமொரு நடுவரான பாடகர் விஜய் பிரகாஷ் கில்மிஷாவின் முதல் பாடலைக் கேட்ட பிறகு கூறிய வார்த்தைகளும் பின்னர் நிஜமானது. அதாவது, நீ இறுதிப்போட்டியில் இருக்க வேண்டிய பாடகி என்று கூறியிருந்தார். அது நிறைவேறியது.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு கிழமையும் சரிகமப நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு நடுவர்களும் கில்மிஷாவை பாராட்டத்தவறவில்லை.

அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் தேவா, “எப்பிடிம்மா இப்பிடி பாடுறா?” எனக்கேட்டதும், நடிகர் ஜெயம் ரவி, “ஒரிஜினலை விட இது நல்லா இருக்கு” என செந்தூர பாடலை பாடிய கில்மிஷாவை புகழ்ந்ததும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான செந்தமிழன் சீமான் கில்மிஷாவிடம் “வலி மறக்கப்பாடு, மக்கள் வழி பிறக்கப்பாடு” எனக்கூறியது இன்று நிதர்சனமாகியிருக்கின்றது.

இறுதிப்போட்டிக்காக இரண்டாவதாக தெரிவான கில்மிஷாவுக்கு இறுதிப்போட்டியில் எல்லோரையும் விட சிறப்பாக பாடக்கூடிய சக்தியைக் கொடுத்தது, அவள் ஊரில் பாடிய இசைக்கச்சேரிகள் தான்.

அவள் ஏற்கனவே பல்லாயிரம் மக்கள் முன் பல மேடைகளில் பாடியிருக்கின்றாள். அதனால் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இறுதிப்போட்டிக்காக மக்கள் முன் பாடுவதென்பது கில்மிஷாவுக்கு அல்வா தின்பதைப் போன்றது. சனங்களின் ஆர்ப்பரிப்புக்கள் அவளை இன்னும் உத்வேகம் அடையச் செய்தது. அந்த உத்வேகத்துடன் இரண்டு சுற்றுக்களுக்கான பாடல்களைப்பாடினாள். ஐந்து நடுவர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள். அப்போதே அவளுக்கான வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

ஆனாலும் இந்தியத் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஈழத்தமிழ் கலைஞர்கள் ஊறுகாயாக பாவிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை எம் மக்கள் பார்த்திருந்ததால், சில வேளைகளில் வெற்றி கை நழுவி விடுவோ என்ற ஐயம் பலரிடம் இல்லாமலும் இல்லை.

ஆனாலும் இறுதிப்போட்டியின் சிறப்பு நடுவராக வந்திருந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வெற்றியாளரை அறிவித்தத போது அழுதது கில்மிஷா மட்டுமல்ல. லட்சக்கணக்கான ஈழத்தமிழரும் தான். அது ஆனந்தக் கண்ணீர்.
அவள் எங்கள் வலி மறக்கத் தான் பாடினாள்.

2009 இறுதிப்போருக்கு பின்னராக எங்கள் ஈழத்தமிழினம் சில தனிநபர்களின் வெற்றியைத் தான் பார்த்திருக்கின்றது. அந்த வெற்றிகளில் முதன்மையானது கில்மிஷாவின் வெற்றி. இன்று ஈழத்தமிழினம் அவள் பேர் சொல்லி விழிக்கப்படுகிறது. பல கோடிகளைக் கொட்டி எடுக்க முடியாத புகழை தன் திறமையால் பெற்றுத் தந்திருக்கிறாள் சிறுமி கில்மிஷா.

அவள் வென்று விட்டாள். சரிகமப டைட்டிலை மட்டுமல்ல. பல லட்சம் மக்களின் இதயங்களையும்… வாழ்த்துக்கள் கில்மிஷா. இன்னும் பல வெற்றிகள் உன்னை வந்து சேரட்டும்!