கிளிநொச்சியில் இடம்பெற்ற “ஊழி” திரைப்பட இசை வெளியீடு

144

கனடாவைச் சேர்ந்த ஈழத்தமிழர் ரஞ்சித் ஜோசப்பின் இயக்கத்தில் உருவாகி நாளை (10) உலகெங்கும் வெளியாகவுள்ள “ஊழி” திரைப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், ஊழி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சட்டத்தரணி சுகாஸ், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சட்டத்தரணி சுகாஸ், பாடலாசிரியர் தீபச்செல்வன், நடிகர் ஆகாஷ், நடிகர் ஜொனி உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் அனுபவ உரையாற்றினர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் நாளை 16 நாடுகளில் 70 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனினும் இலங்கையில் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்த இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என இயக்குனர் இன்று அறிவித்துள்ளார்.

ரஞ்சித் ஜோசப்பின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகவுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனத்தை ஈழத்து கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். தென்னிந்திய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

குறித்த பாடல் இறுவெட்டினை ஈழப்பாடகி பார்வதி சிவபாதம் மற்றும் ஈழ இசையமைப்பாளர் செயல்வீரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.