விக்னகுமார் இசையில் தமயந்தி வரிகளில் “கடலம்மா” பாடல்

300

“நெய்தல் பத்து” என்ற பத்துப் பாடல்கள் தொகுப்பின் முதல் பாடலாக பொங்கல் தினத்தன்று வெளிவந்திருக்கின்ற பாடல் “கடலம்மா”.

இந்தப்பாடலுக்கான இசையினை மகேசன் விக்னகுமார் (நோர்வே) அமைத்திருப்பதுடன், ரமேஷ் தேவராஜன் பாடியுள்ளார். பாடலுக்கான கவி வரிகளை தமயந்தி சிமோன் எழுதியுள்ளார்.

பாடலில் தோன்றியிருப்பது பல்கலை வித்தகர் கலாபூஷணம் ஜூட் கொலின் மற்றும் லின்சி அனோஜா, நர்த்தகி லவீனா ஆகியோர். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆராதனன் செல்வகுமார்.

இந்தப்பாடலில் அனலைதீவு, பருத்தீவு, எழுவைதீவு, மெலிஞ்சிமுனை, சாட்டி, அல்லைப்பிட்டி, மாடோடிப்பிட்டி, சிறுத்தீவு, குருசடித்தீவு, மண்டைதீவு, கொட்டடி, பாஷையூர், கொழும்புத்துறை, மண்ணித்தறை, கட்டைக்காடு, அக்கரைப்பற்று, கற்குடா, பாசிக்குடா, திருகோணமலை என பல இடங்கள் பதிவாக்கப் பட்டிருக்கின்றன.

பாடலைப்பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பாடல் பற்றி பாடலாசிரியர் தமயந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

எமக்கென்று கடலிருந்தது
கடல் நிறைய வாழ்விருந்தது
காவல் அரண்களாய் கரைகள் இருந்தன
கரைகள் நீளமும் கலைகள் திரிந்தன
கூத்துப்பாட்டும் கும்மாள ஒலிகளுமாய்
மக்கள் வாழ்ந்திருந்தனர்

கடலோடும் கரைகளோடும் மக்கள்
கட்டுண்டு ஒட்டி உறவாடி
வாழ்வைக் கொண்டாடி, தம்மைக்
காக்கும் கடலைக் காத்து வாழ்ந்தனர்

தாயாய், தாய்க்கும் தாயாய்
தாய்வழி மாந்தர் கடலம்மாவை
வழிவழியாய் அள்ளியெடுத்து
நெஞ்சாங்கூட்டில் சுமந்து வாழ்ந்தனர்

இன்றோ….?!
கடலுமில்லை
கரைகளுமில்லை என்கிறது காலம்.
அதிகாரங்களின் நுகத்தடியில்
சர்வாங்கமும் குருதி வடிய
சிதைக்கப்படுகின்றன கடலும் கரைகளும்.

முகம் கிழிக்கப்பட்ட நிலவாய்
நெய்தற் கலைகள் சிதிலமாகின

காலகாலமாக
கடலோடும் கரைகளோடும்
ஒட்டி வாழ்ந்த மக்கள்
அறுத்தெறியப்பட்டு
அந்நியமாக்கப்பட்டனர்.

அதிகாரங்களின் சிறையில்
அடைக்கப்பட்டதாய் கடலும் கரைகளும்.
மக்களோ மவுனத்தையே தினமும்
புசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடலும் அப்படித்தான்….
எடுத்துச் சொல்ல
ஏதொரு வார்த்தையுமின்றி
மவுனித்துக் கிடக்கிறது.

காலம் இப்படியே நகர்ந்து விடாது.
ஒரு நாள்…
கடல் வீறுகொண்டெழும்
கரைகளைத் தாண்டும்
மக்களும் அப்படித்தான்
எழுவர்…. எழுந்து வருவர்
அதிகாரங்களை நோக்கிய கேள்விகளோடு.

Lyrics : Thamayanthi Simon
Singer : Devarajah Rameshan
Violin : Athisaiyan Suresh
Bass Gitar : Dolly (Shiraz Amit)
Camera: Arathanan, Thamayanthi
Editing: Arathanan
Music : Mahesan Vicknakumar