எது ஈழ சினிமா? இதுவும் ஈழ சினிமா தான்! விளக்குகின்றார் இயக்குனர் ஞானதாஸ்

520

எமக்கான சினிமா என்பதன் அடிப்படைப் பண்பு அது பார்ப்போருக்கு முதலில் சினிமா அனுபவத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எமது கதைகளைச் சொல்வது என்பதையும் தாண்டி கனமான சினிமா அனுபவத்தை வழங்குவதாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் இந்த சினிமா முயற்சியில் வெற்றியடைய முடியும் என சினிமா செயற்பாட்டாளர், விமர்சகர் ஞானதாஸ் காசிநாதர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இருந்து உருவாகும் கிஷாந்த் சிறியின் “Mother Z” என்கின்ற குறும்படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகியிருந்தது. அது குறித்த பார்வையாக தன் பேஸ்புக் பக்கத்தில் பதிந்திருந்த ஒரு கருத்திலேயே இயக்குனர் ஞானதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமக்கான சினிமா” அல்லது “ஈழம் சினிமா” என்றவுடன் பலரும் இங்கு, அது எமது போராட்ட வரலாற்றைச் சொல்லும் சினிமா, எமது வலிகளைச் சொல்லும் சினிமா, எம் மீதான ஒடுக்கு முறையைச் சொல்லும் சினிமா, தமிழ்த் தேசியம் பேசும் சினிமா என்றளவில் மட்டும் முற்கற்பிதம் செய்து கொள்கிறார்கள். எமக்கான சினிமா முயற்சியில் தீவிரமாகச் செயற்படும் படைப்பாளிகள் சிலரிடம் கூட அத்தகையே புரிதலே உள்ளது.

அந்த அடிப்படையில் ஈழம் சினிமாக்கள் ஜனரஞ்சகமற்ற, வரண்ட தன்மையைக் கொண்ட யதார்த்த சினிமாக்கள் அல்லது ஆர்ட் பிலிம்கள் என்ற ஒற்றை வகையறாப் படைப்புகளாகவே இருக்கும் எனப் பலர் கற்பனை செய்கிறார்கள்.

ஒரு இனத்தின் பெறுமானத்தையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கணிப்பிடுவதில் அந்த இனத்தின் கலை இலக்கியப் படைப்புகள் முக்கிய பங்கு வகின்றன. ஒரு காலத்தில் அவை காப்பியங்கள், கட்டடக் கலைகள், ஓவியங்கள், நாடகங்கள், இசைகள், கவிகள் என இருந்தன. அதற்குள் இன்று சினிமா ஒரு முக்கியமானதும் முதன்மையானதுமான கூறாக அமைந்து உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அந்த வகையில் இங்கு எமக்கான சினிமா என்பதன் அடிப்படைப் பண்பு அது பார்ப்போருக்கு முதலில் சினிமா அனுபவத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். உண்மையில் சினிமா பார்க்க வருபவர்கள் குறித்த வகைக் கதைகளையோ அல்லது ஏதாவது செய்தியையோ அல்லது ஏதாவது அறிவையோ பெற்றுக் கொண்டு செல்ல வருவதில்லை. அவர்கள் ஒரு சினிமா அனுபவத்தைப் பெற்றுச் செல்லவே காசு கொடுத்து நேரம் ஒதுக்கி படத்தின் முன்னால் அமர்கிறார்கள். அந்த சினிமா அனுபவத்தில் அவர்களை மூழ்க வைப்பதன் மூலமே ஏதாவது கருத்தையோ புரிதலையோ தாக்கத்தையோ பார்ப்பவரிடத்து பகிர்ந்து கொள்ள முடியும்.

கொரியர் என்றால் ஒரு காலத்தில், நாய் தின்பவர்கள், பாம்பு தின்பவர்கள் என்ற முற்கற்பிதங்களோடு இருந்த உலகம் இன்று கொரியாவை மிகவும் மரியாதையோடு பார்க்கிறது. அவர்கள் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள். எம்மை அறியாமல் அவர்களை நேசிக்கக் கூடச் செய்கிறோம். அமெரிக்காவுக்குச் சவாலாக இருக்கும் ஈரானையும் ஈரானிய மக்களையும் அமெரிக்கரே மதிக்கவும் நேசிக்கவும் செய்கிறார்கள். இலத்தின் அமெரிக்க நாடுகளை உலகம் இன்று வியந்து பார்க்கிறது.

இதுவெல்லாம் சினிமா செய்த மாயம். அந்த மாயத்தை உருவாக்கியது அவர்களின் கதைகளும் அந்தக் கதைகளால் அந்த மக்கள் மீது ஏற்பட்ட கழிவிரக்கமும் அல்ல. அவர்கள் இந்த உலகுக்குக் கொடுத்த சினிமா அனுபவம். அந்த சினிமா அனுபவம் பார்ப்பவரின் நினைவிலி மனதில் புகுந்து தன் வேலையைச் செய்கிறது.

எமக்கான சினிமா முயற்சி என்பது அந்த வகையில் எமது கதைகளைச் சொல்வது என்பதையும் தாண்டி கனமான சினிமா அனுபவத்தை வழங்குவதாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் இந்த சினிமா முயற்சியில் வெற்றியடைய முடியும்.

உண்மையில் எமது சினிமா முயற்சியின் இன்றைய தேவை, சினிமாவை எமக்கான மீடியமாக, ஒரு மேடையாக உருவாக்கிக் கொள்ளுதலே ஆகும். அந்த மேடையைச் சரியாக அமைக்காவிடின் நாம் எமது கதைகளை இந்த உலகுக்குச் சொல்ல முடியாது போய்விடும் என்னும் யதார்த்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவரை காலமும், நான் உட்பட எமக்கான சினிமா முயற்சியில் ஈடுபடுபவர்கள் எமது கதைகளை சொல்லுதல் என்பதில் காட்டிய அக்கறையையும் கவனத்தையும் சினிமா அனுபவத்தை வழங்குவதில் காட்டவில்லை என்பது மறைக்க முடியாத உண்மை. எமது கதைகளை சொல்லுதல் என்பதில் நாம் கொண்டிருக்கும் தீவிர பற்று (Obession) ஒரு வகையில் எமது சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே இருந்து வருகிறது என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆனால், புதிய தலைமுறைப் படைப்பாளிகள் இந்த விடயத்தில் சரியான நிலைப்பட்டில் நின்று செயற்படுகிறார்கள். நான் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். அவர்களில் முக்கியமானவர் தம்பி, கிஷாந் சிறீ.

மிகவும் இளையவர் ஆனால், தனது பள்ளிக்கூட கால நாட்களில் இருந்தே சினிமாவைத் தேட தொடங்கியிருக்கிறார். கணணிப் பொறியற் துறையில் ஜயவர்த்தனப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்த இவர் யார் சொல்லியும் (நான் சொல்லியும்) கேட்காமல் அதை இடை நிறுத்தினார் – அது தனது சினிமா முயற்சிக்குத் தடையாக உள்ளது என்று. அவரது முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் எமக்கான சினிமா முயற்சி பற்றிய பெரும் நம்பிக்கையை அவரது அசாத்திய நம்பிக்கை எனக்குத் தந்தது.

உலக சினிமாவின் ட்றெண்ட், புதிய தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் முறைச் சந்தைப்படுத்தல் அனைத்து விடயங்களையும் நாள் தோறும் அலசி ஆராயும் அறியும் அவர் எம் சினிமா முயற்சிக்கு ஒரு பெரும் பலம். “எங்களாலும் பக்கா சினிமா அனுபவத்தை ஓடியன்சுக்கு குடுக்க முடியும் எண்டதை நிரூபிக்க வேணும் சேர்” என்று அடிக்கடி சொல்லும் அவரின் ஒரு பாரிய முயற்சிதான்…
MOTHER Z என்னும் குறுந்திரைப்படம்.

இதன் கதை எங்கள் ஊர்க் கதைதான். ஆனால் அதை அவர் ZOMBIE என்னும் ஒரு குளோபல் குறியீட்டின் வழி சினிமாவாக்கியுள்ளார். சோம்பி ஒரு குறியீடு மட்டுமல்ல அது ஒரு வகை சினிமாவாகவும் இன்று பார்க்கப்படுகிறது. பாரிய வேலைகள். நூற்றுக் கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள், வவுனியா மண்ணில் ஒரு உலக சினிமா முயற்சியை நிறைவேற்றிக் காட்டினார்!

பெரும் பட்ஜட்.
சொந்தக் காசு.
பெரும் துணிச்சல்
எமக்கான சினிமா பற்றிய பெரும் நம்பிக்கை.

அதன் மேக்கிங் வீடியோவை பார்த்து நான் பிரமித்துப் போனேன்.