ஏணை (பிரான்ஸ்) – திரைவிமர்சனம்

349

ஏஆர்சி மொபைல் தயாரிப்பில் நட்சத்திரம் படைப்பகம் வழங்கும் திரைப்படம் ‘ஏணை’. இதனை அஜந்தன் (பிரான்ஸ்) இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு கோவி சண், படத்தொகுப்பு சங்கர், இசை ஈஸ்வர் குமார் மற்றும் அனிஷ்டன். கோணேஸ், கௌதம், கிரிஷாந்தி, அட்ஷயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடொன்றுக்கு செல்லும் தாயை இழந்த ஒரு குடும்பம், விசாவும் இல்லாமல், ஆதரவும் இல்லாமல் படும் துன்பங்களை சொல்லும் படமாக ‘ஏணை’ வெளிவந்திருக்கின்றது.

மேலோட்டமாகப் பார்த்தால், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்லும் எல்லோரும் ஆரம்பத்தில் அனுபவிக்கும் கஷ்டங்கள் தான் இந்தப்படம். 80 களிலும் சரி, இப்பொழுதும் சரி, புலம்பெயர்ந்து செல்லும் எம்மவர்களுக்கு என்றும் மாறாத ஒரு விடயமாக இது இருந்து வருகின்றது. பட்ட துன்பங்களை எடுத்துச்சொல்லவும், வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலைமை பற்றி தாயகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. அதற்கு அஜந்தன் ‘திரைப்படம்’ ஐ பயன்படுத்திக் கொண்டார். அதில் அவர் வெற்றியும் அடைந்திருக்கின்றார் என்று தான் கூற வேண்டும்.

படத்துக்கு பிரதான பலம் பாத்திரத் தேர்வு. தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் ஆரம்பத்தில் இருக்கும் கோலமும், வெளிநாடுகளில் 20, 30 வருடங்களாக இருக்கும் நம்மவர்களும் கோலமும் அழகாக திரையில் வந்திருக்கின்றது. உதவுவதும் எம்மவர்கள் தான், உபத்திரவம் கொடுப்பவர்களும் எம்மவர்கள் தான் என்பதையும் அஜந்தன் தன் படைப்பின் ஊடாக சொல்லத்தவறவில்லை. வெளிநாட்டில் வளர்ந்தாலும் இன்னமும் நம்மவர்களுக்கு தாயக உணர்வு உண்டு என்பதை கதாநாயகி ஊடக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

அஜந்தனைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்து தான் உள்ள நாட்டில் ஈழசினிமாவை வளர்க்க வேண்டும் என இயங்கும் முக்கிய திரைச்செயற்பாட்டாளர்களில் ஒருவர். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியுள்ளதுடன், சக இயக்குனர்களின் குறும்படங்களில் நடித்தும் உள்ளார். முத்தாய்ப்பாய் தனது முதல் படத்திலேயே தனக்கு கிடைத்த வரையறுக்கப்பட்ட வழங்களைப் பயன்படுத்தி ஜெயித்தும் உள்ளார் என்று தான் குறிப்பிட வேண்டும். அவர் இந்தத் திரைப்படத்தை பிரான்ஸ் மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் காட்சிப்படுத்தியிருந்தார். இன்னும் சில காட்சிப்படுத்தல்களுக்கும் திட்டமிட்டிருந்தார். கொரோனா மிகப்பெரும் அச்சுறுத்தலாக முழு உலகிற்கும் விளங்கும் இந்நேரத்தில் இணையத்தில் படத்தை வெளியிட்டிருக்கின்றார். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு..

குவியம் புள்ளிகள் – 3/5