10 நிமிடத்தில் சமுதாயத்தை மாற்றிட முடியுமா? – REAL RAPIST குறும்படம்

796

LIFE LANKA ENTERTAINMENT தயாரிப்பில் AV கீர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் REAL RAPIST. சமுதாயத்தில் பேச வேண்டிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து முடிந்தவரை சிறப்பாக அதனைப் படமாக்கியிருக்கின்றார்கள்.

படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா. நீண்ட நாட்களின் பின்னர் ஒரு குறும்படத்தில் பணியாற்றியிருக்கின்றார் என நினைக்கின்றோம். பாடல்களில் தனது கமெரா கண்கள் மூலம் வண்ணம் பூசிய ரெஜி, இந்தக் குறும்படத்திலும் தனது கைவண்ணத்தை விட்டு வைக்கவில்லை.

இரவுக்காட்சிகள், அதற்கு பயன்படுத்திய ஒளியமைப்பு என எல்லாமே அவரது அனுபவத்தை பறைசாற்றி நிற்கின்றது. திரைக்கதைக்கு ஏற்ப ஒரு பரபரப்பான த்ரில்லர் அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு தருவதற்கு ரெஜியின் ஒளிப்பதிவு உதவியிருக்கின்றது.

இசையமைப்பாளர் திஷோன். ராப் சிலோன் மூலமாக பல அட்டகாசமான பாடல்களை வழங்கி ஆட்டம்போட வைத்த திஷோனும் குறும்பட பின்னணி இசையில் கலக்கியிருக்கின்றார். சிறு பாடல் ஒன்றையும் இடைச்செருகி தனக்கு கிடைத்த இடத்தில் இசையால் என்னென்ன ஜாலங்களை செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கின்றார்.

படத்தொகுப்பு மனாஸ். அவரது கத்தரிப்புக்களும் குறும்படத்தை பரபரப்பாக கொண்டு சென்றிருக்கின்றது. உதவி இயக்குனரான அரவின் ரமணனின் பங்களிப்பும் படத்தில் முக்கியமானது. தயாரிப்பு முகாமையாளராக JEHU JEREMY பணியாற்றிருக்கின்றார்.

குறும்படத்திற்கு உயிர் கொடுத்த ஆதி, கவிவர்ஜினி, சுஜா, பரணிதரன் ஆகியோரின் நடிப்பு ஜதார்த்தம். பேச்சுத்தமிழும் நன்றாகவே இருந்தது. இடையிடையே நாடகத்தமிழும் எட்டிப்பார்க்கத் தான் செய்தது.

இயக்குனர் கீர்த்தி எடுத்துக் கொண்ட கதையே இங்கு முக்கியமானது. இந்த சமூகத்தில் பல ஆண்டு காலமாக வேரூன்றி போயுள்ள “சாதியம்” என்கிற விடயத்தை இளம் படைப்பாளிகள் சினிமா ஊடாக பேச முயற்சி செய்தமை ஆரோக்கியமான விடயம்.

10 நிமிட இந்தக் குறும்படத்தால் சமுதாயத்தை மாற்ற முடியுமா? என்பது தான் கேள்விக்குறி. ஆனாலும், இளையவர்களிடம் இந்த சிந்தனையை விதைத்துச் சென்றாலே அது படக்குழுவின் வெற்றி தான்.

சிறந்த கதையை எடுத்து, அதற்கு அழகாக திரைக்கதை அமைத்து, சமூக நோக்குடன் இந்த குறும்படத்தை தந்த படக்குழுவிற்கு பாராட்டுக்கள்.