PS சுதாகரனின் “ஒருத்தி 2“ எதிர்வரும் 18 ஆம் திகதி Scarborough இல் திரையிடப்படுகிறது (விமர்சனம்)

506

கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள Ps சுதாகரனின் “ஒருத்தி 2” திரைப்படம் கனடாவின் ரொரன்ரோ நகரைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (03) மொன்றியலில் திரையிடப்பட்டு பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Scarborough நகரின் Woodside Cinemas (MacCowan & Finch) இல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ரிக்கெட்டுக்களைப் பெற 4167209303 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக “ஒருத்தி 2” உருவாகியுள்ள நிலையில், அது குறித்தான விமர்சனத்தை உமா மோகன் (M.A) தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். படிக்க..

P.S சுதாகரன் அவர்களின் கதை உருவாக்கத்தில் அமைந்த ‘ஒருத்தி பாகம் 2’ திரைப்படமானது கனடாவைக் களமாகக் கொண்டு காலத்தின் தேவைக்கேற்ற விடயத்தை கதைக்குரிய கருவாகக் கொண்டு எந்த ஒரு இடத்திலும் கதை தொய்வடையாது மிகத்தெளிவான காட்சி அமைப்போடும் நல்ல பாடல்களோடும் நகைச்சுவைகளோடும் வெளியாகியுள்ளது. இப்படமும் ‘எம்மவரின் திறமைக்குச் சான்றான படங்களுள் ஒன்று‘ என்று பார்த்தவர்கள் பலரும் பேசும்படியாக அமைந்திருந்தது.

தொழிற்துறைகள் விரைவாக வளர்ச்சி அடைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் நம் இளைய தலை முறையினரின் பங்களிப்பும் அவர்கள் தொழிலிற்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் கடின உழைப்பும் அதனால் குடும்ப உறவுகளில் உண்டாகும் இடைவெளிகளும் அதனால் உண்டாகும் பிரச்சினைகளும் என்பதோடு தொழில் சார் போட்டிகளும் அதனால் உண்டாகும் இடையூறுகளும் என இத்தனை விடயங்களை உள்ளடக்கியதாக கதை அமைந்துள்ளது.

அதேவேளை நடுத்தர வயதுடைய பெற்றோர்களின் மனநிலையும், அவர்களது புரிந்துணர்வும் இன்றைய காலத்துப் பிள்ளைகளோடு அவர்கள் அணுகும் முறைகளும் அத்தோடு சில தொழில்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முனையும் பெண்களிற்குப் பிறக்கும் பிள்ளைகளின் மனநிலையும் அந்தப் பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவும் வெளிக் கொணரப்பட்டுள்ளது.

கதையின் தலைப்புக்கு ஏற்ப இத்தகைய சவால்களை அந்த கலையரசி என்ற பாத்திரம் குடும்பப் பெண்ணாக எப்படி எதிர் கொள்கின்றாள் என்பதே இந்தக் கதை .

இக்கதையில் நகைச்சுவைக் காட்சிகளும் கதைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அறிவு பூர்வமான விடயங்களை எடுத்துக் கூறுவனவாக அமைந்திருந்தன. இந்த நகைச்சுவைகள் இரசிக்கக்கூடியனவாகவும் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதில் நடித்த ஒவ்வொருவரும் தமது பாத்திரங்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்திருப்பது உண்மைச் சம்பவம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

கதாநாயகிப் பாத்திரமாக வரும் கலையரசிக்கு கதையின் கலைப்புக்கு ஏற்றாற்போல் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதைக்கு ஏற்ப அவரின் நடிப்பும் மிக இயல்பாக இருந்தது. ஒப்பனைகளும் களத்திற்கு ஏற்றவகையில் அழகாகச் செய்யப்பட்டிருந்தன. மிகவும் துணிச்சலான கடமையிலே கண்ணாக எத்தகைய இடையூறு வந்தாலும் தனக்குக் கொடுக்கப் பட்ட பொறுப்பைச் செய்யவேண்டும் என்றகொள்கை கொண்ட பெண்ணாகவும் இங்கு கதாநாயகி சித்திரிக்கப்படுகிறாள். இந்த கதாபாத்திரம் இன்றைய இளைய தலைமுறைப் பிள்ளைகள் துணிவுமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறுகின்றது.

கதாநாயகன் வினோத்தும் தனக்குரிய பாத்திரத்தை மிகவும் கனகச்சிதமாக நடித்துக் கொடுத்துள்ளார். அவரின் முகபாவங்கள், உணர்வுகள் பார்ப்பதற்கு ஜதார்த்தமாகவே இருந்தன. இக்கதையில் ஒரு இயல்பான குடும்பஸ்தருக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கள் அவர் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.

சமமான அந்தஸ்துக் கொண்ட சம்பந்திகள், அவர்களின் மனப்பாங்கு, பிள்ளைகளின் வாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பெற்றொர்களாக இராது ஒரு புரிந்துணர்வு உள்ள பெற்றோர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இவர்களது இயல்பான நடிப்பும் வார்த்தைப்பிரயோகங்களும் ஈழத்தமிழ்க் குடும்பங்களில் வாழும் பல பெற்றோர்களைக் கண்முன் கொண்டுவருகின்றது. முன்னைய காலத்து ஓரளவு வயதான பெற்றோரின் உணர்வுகளில் இருந்து இவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். முன்னைய பெற்றோர் உணர்வுகளுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் பிள்ளைகளின் பிரச்சினைகளில் தாங்கள் அதிகளவில் தலையிடுவதுண்டு. ஆனால் இங்கு காட்டப்படும் பெற்றோர் பிள்ளைகளது மனத்திற்கும் , இன்றைய வாழ்க்கை முறைக்கும் ஏற்ற விதத்தில் தமது உணர்வுகளை அளவுடன் வெளிப்படுத்தி பிள்ளைகளது உணர்வுக்கும் அறிவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

இயல்பாகவே சினிமாக்களில் வரும் வில்லன் பாத்திரங்களும் கூட இங்கு வருகின்றன. தொழில்சார் வில்லன்களாக அவர்கள் நடித்துள்ளனர். அவர்களது வில்லத்தனமும் நடிப்பும் அவர்களது நடை , உடை பாவனைகளும் சிறப்பாக அமைந்திருந்தன.

வில்லன்கள் கூட நாகரிகமான வில்லன்களாகக் காட்டப்பட்டமை சிறப்பு.

நகைச்சுவைக் காட்சிகள் குறைவு ஆனாலும் இடங்களுக்கு ஏற்றாற்போல் நகைச்சுவை நடிகர்களும் தமது நடிப்பைத் திறம்படச் செய்துள்ளனர். அதிலும் கதாசிரியர் தன் கதைக் கருவிற்குத் தேவையான விடயங்களையும், அறிவு பூர்வமான விடயங்களையும் கூறக்கூடியவர்களாகவே அவர்களையும் பயன்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் அளவுக்கு மீறிய ஒப்பனைகள் இல்லை. இயல்பான, அளவான, அழகான ஒப்பனைகள் செய்யப்பட்டிருந்தன. ஆடைகள் கூட பாத்திரங்கள் மற்றும் களங்களுக்கு ஏற்ப அமைந்திருந்தது.

கனடாவைக் களமாகக் கொண்டு இயல்பாக கதைக்குத் தேவையான களங்கள் மிகவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. பயம் உண்டாக்கும் இடங்களும் கதைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒளி, ஒலிப்பதிவுகளும் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் அமைந்திருந்தன. இரண்டு பாடல்களே ஆனாலும் அவையும் அழகான அர்த்தம் நிறைந்த பாடல்களாக இருந்தன.

இவ்வாறாக பல விடயங்களை இயல்பாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்திய இப்படத்தில் வார்த்தைகளாற் காட்டப்படும் பிறந்த குழந்தை நேரடியாகக் காட்டப்பட்டு தாயின் பிரிவை பிள்ளை மூலமாக வெளிப்படுத்தி இருப்பின் இக் கதை இன்னும் உயிர்த்துடிப்பொடு உணர்வு பூர்வமானதாகவும் இருந்திருக்கும். அத்தோடு அது எமது இளம் தாய்மாருக்கு ஒரு படிப்பினையாகவும் அமைந்திருப்பதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கும்.

இப்படத்தில் பாத்திரங்கள் வளர்ந்து சென்றாலும் களங்கள் கூட அகன்று சென்றாலும் முன்னர் குறிப்பிட்டது போல் தான் செய்யும் வேலையில் உறுதியாய் இருக்கும் அந்த “ஒருத்தி” யை மட்டுமே ( கருவை ) சுற்றியே கதை சென்றதால் படம் முடிந்த பின் அது எனக்கு ஒரு சிறுகதையை வாசித்த உணர்வை ஏற்படுத்தியது.

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் கலாச்சாரச் சீர்கேட்டுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் என்பது பலரது ஒட்டுமொத்தமான கவலையாகவும் அதுவே பேசுபொருளாகவும் இருக்கும் போது , இக்காலத்தில் ஒரு நாகரிகமான இளம் தலைமுறையினரை கதையில் காட்டிச்செல்லும் சுதாகரன் இக்கதை மூலம் நல்ல அறிவுரையையும் கூறுகின்றார் என்பதையும் இதில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மொத்தத்தில் எம்மவரின் இந்த திரைப்பட முயற்சி சிறப்பாகப் போற்றி வரவேற்கத்தக்கது.

திரு P.S சுதாகரனுக்கும் அவரது இத் திரைப்படக்குழுவினருக்கும் பாராட்டுக்களைக் கூறிக் கொள்வதோடு எம்மவர் பிற சினிமாக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எமது ஈழத்துப் புலம்பெயர் கலைஞர்களுக்கும் கொடுத்து அவர்களை ஊக்கிவிக்க வேண்டும், வளர்க்க வேண்டும் அவர்களது சிறந்த முயற்சிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும்.