யாழில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள அருந்ததியின் “மாற்று மோதிரம் 2024”

261

பெண் முயற்சியாளர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதற்கான ஒரு களமாக அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வு அமையும் என அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா தெரிவித்துள்ளார். 

அருந்ததி நிறுவனத்தின் மாற்று மோதிரம் நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 

அது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே அவ்வாறு குறிப்பிட்டார்.

மாற்று மோதிரம் நிகழ்வானது மணப்பெண் அலங்காரம் மற்றும் திருமண கண்காட்சி என்பவற்றுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதில், அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் கலைஞர்கள், கேக் தயாரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், விடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என திருமண நிகழ்வுடன் தொடர்புடைய கலைஞர்கள் பங்கேறவுள்ளனர். 

பெண் முயற்சியாளர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதற்கான ஒரு களமாக அந்நிகழ்வு அமையும்.

திருமண கண்காட்சிகளின்போது திருமணத்திற்கான அனைத்தும் வழங்குநர்கள் இவ்வாறான கண்காட்சியில் இணைததன் மூலமாக அவர்களும் தம்மை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார். 

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அழகுக்கலை நிபுணரான வித்தியா நிரஞ்சன் தெரிவிக்கையில், பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் பலர் தற்போது உருவாகி வருகின்றனர். இவ்வாறான நிகழ்வுகள் அவர்களை மேலும் வளப்படுத்தும். அவர்களுக்கு இதொரு சிறந்த தளமாக அமையும்- என்றார். 

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மற்றுமொரு அழகு கலை நிபுணரான கோபிநாத் தெரிவிக்கையில், இவ்வாறான மணப்பெண் அலங்கார கண்காட்சிகள் மூலம் வித்தியாசமாக சிந்தித்து , புதிய வித்தியசமான அலங்காரங்களை செய்ய தூண்டும் இதன் ஊடாக எம்மை நாம் வளப்படுத்தி எங்களை உலகத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றார். 

இந்த சந்திப்பில் அழகுக்கலை நிபுணர்களான கயல்விழி ஜெயபிரகாஷ் மற்றும் த. அனிதா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.