வெளியாகியது “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் – எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ததா?

329

‘இம்போர்டஸ்’ தயாரிப்பாக ‘தமிழன் 24’ வெளியீடாக சசிகரன் யோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெளிநாட்டு காசு” வெப் சீரிஸின் முதல் பாகம் அண்மையில் வெளிவந்துள்ளது.

இந்த வெப் சீரிஸ் பற்றி நாங்கள் ஏற்கனவே எழுதிய பதிவு மற்றும் முன்னோட்டப்பாடலை இந்த லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம். தற்போது, நாங்கள் இத்தொடரின் முதல் பாகம் குறித்து பார்க்கலாம்.

வெளிநாட்டில் இருந்து வரும் நாயகனோடு கதை ஆரம்பிக்கின்றது. அந்த நாயகன் உள்ளுரில் இருக்கும் கதையின் இன்னொரு நாயகனோடு பயணத்தை தொடர்கின்றார். காட்சிகள் விரிவடைந்து செல்கின்றன. முதல் எபிசோட் என்பதால் கதையின் போக்கை தீர்மானிக்க முடியவில்லை.

இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது, யாழ்ப்பாணத்தில் (மட்டும்) தயாரிக்கப்பட்ட முதல் வெப் சீரிசாக இது இருக்கின்றது (தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்). எனவே, தற்போது உள்ள டிஜிட்டல் ப்ளெட்ஃபோர்மில் எம்மவர்களின் முயற்சிகளுக்கு சிறந்த தொடக்கப்புள்ளியாக இது அமையலாம்.

அடுத்து, நகைச்சுவையை கையில் எடுத்திருக்கின்றார்கள். இது ஒரு நகைச்சுவை வெப் சீரிஸாக பயணிக்கும் என்பதை அனுமானிக்க முடிகின்றது. எம்மவர்களிடையே நிறைய கதைகள் கொட்டிக் கிடந்தாலும், திரைப்படத்திலும் குறும்படங்களிலும் அதனைக் கையாண்ட விதம் மிக மிக குறைவு. அதனை இக்குழு நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

வெறுமனே பாடல்களிலும் மொடல் ஷூட்களிலும் அதிகளவில் பார்த்து பழகிய நாயகிகளான ரெமோ நிஷா மற்றும் பூர்விகா இதில் தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம். அதை அவர்கள் நிச்சயம் அடுத்து வரும் எபிஷோட்களில் தொடர்வார்கள் என நம்பலாம்!

எம்மவர்கள் சறுக்கக்கூடிய இடம் என பலராலும் கணிக்கப்படும் டப்பிங் பகுதியில் இந்தக் குழுவினரும் சறுக்கியுள்ளனர். பல இடங்களில் டப்பிங் ஒட்டவில்லை. அது போக, நகைச்சுவைத் தொடருக்கு தேவையான பின்னணி இசை மற்றும் சவுண்ட் எபெக்ட்ஸ் போதுமானதாக இல்லை. டைட்டில் பாடலில் வரும் ஒரே ட்ரக், முதலாவது எபிசோட் முழுவதிலும் எதிரொலிக்கிறது. எனவே, ஒலிச்சேர்க்கை குறித்து அடுத்துவரும் எபிசோட்களில் கவனம் செலுத்தினால் நன்று.

பல்வேறு போராட்டத்தின் மத்தியில் குறைந்தளவு வளங்களைக் கொண்டு இந்த “வெப் சீரிஸ்” முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகரன் யோ தலைமையிலான படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறான உங்கள் முயற்சிகள் குறைகளை களைந்து தொடர வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.