சமூகத்திற்கு நல்ல சேதியைக் குறிப்பிடும் “தளராதவன்” குறுந்திரைப்படம்

1085

“தளராதவன்” (Thalarathavan) இவ்வருடம் சித்திரை மாதம் 10 ஆம் திகதி திரையரங்கில் வெளியிடப்பட்ட தமிழ் குறுந் திரைப்படம் ஆகும்.

இப்படம் முரளிதரனின் கதை, வசனத்திலும், Visual Art Movies முரளிதரன் மற்றும் ஆறு சுரேன் ஆகியோரது தயாரிப்பிலும், கோடீஸ்வரனின் திரைக்கதை மற்றும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் • பவித்திரன் • கிர்ஷாந்தா • சிரோனியா • கிஸ்கந்தமுதலி • சுரேந்திரன் • முரளிதரன் • சுலக்ஷன் • சிந்துஜன் • திக்ஷனன் • ஆனந்தி • நிலக்ஷி • டுஜா • அனுஷாந்த் • கண்ணன் • சாம்பசிவம் • நிலு ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு – புஷ்பகாந்த், படத்தொகுப்பு – விஷ்னுஜன், வர்ணம் – அபிஷேக், விளம்பரப் படப்பிடிப்பு – தினுஷாந்த், சிகை அலங்காரம் – கண்ணன், ஒப்பனை – ஷாலினி, விளப்பர வடிவமைப்பு – டுஜா, தயாரிப்பு மேற்பார்வை – ஜனிதன், பின்னணிக்குரல் – விஜிதலோஜினி, தினேஸ் நா, டுஜா, கோடீஸ்வரன், S.N.விஷ்ணுஜன்

பின்னணிக் குரல் கலையகம் – Re Sound Records, இசை – ஒலிக்கலவை – சிறப்பு சத்தம் – கேஷாந்த், பாடல் வரிகள் – S.N.விஷ்ணுஜன், கவிஞர் வியன்சீர், கஜிந்தன்

பாடகர்கள் – யசோமிதா, கஜிந்தன், ராகுல், பார்த்திபன், யதஷனா, கேஷாந்த்

“தளராதவன்“ என்கிற படத்தின் டைட்டிலைப் பார்த்தாலே அப்படம் கூற வரும் செய்தியைப் புரிந்து கொள்ள முடியும். “த” என்கிற எழுத்தின் மேல் பட்டமளிப்பின் போது பயன்படுத்தப்படும் தொப்பியும், “ன்“ என்கின்ற எழுத்தை ஒருவர் தள்ளுவது போன்றும், கீழே சைக்கிள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. கதையை உள்வாங்கி அந்த டைட்டிலை வடிவமைத்த கலைஞருக்கு வாழ்த்துக்கள்.

ஒரே வரியில் சொல்வதானால் “வேலையில்லா பட்டதாரியின் திண்டாட்டம்” எனவும் வைத்துக் கொள்ளலாம். கஷ்டங்களுக்கு மத்தியில் படித்து பட்டம் பெறும் ஒருவன், தனது வேலையைப் பெற்றுக் கொள்வதற்காக படும் சிரமங்களை இதில் வெளிப்படுத்தியுள்ளனர். ”வேலை இல்லை என்பதல்ல பல பட்டதாரிகள் பலரின் பிரச்சனை, அரசாங்க வேலை இல்லை என்பதே அவர்களின் பிரச்சனை” என்பதையும் ஆணித்தரமாக இதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ரசாங்க வேலை இல்லாததால், கைகூடாமல் போகும் காதல்.. பட்டதாரிகள் சங்கத்தில் உள்ள சிலரின் இரட்டை நிலைப்பாடுகள்… உதவ வேண்டும் என நினைக்கும் மனித நேயம் கொண்டவர்கள் என சமூகத்தின் பல பக்கங்களை இப்படத்தினூடு தொட்டுச் செல்கின்றார் இயக்குனர். குறும்படமாக இன்னும் கொஞ்சம் “ஷார்ப்”பாக எடுத்திருக்க வேண்டிய கதையை, தியேட்டர் ரிலீஸூக்காக ஒரு குறும் திரைப்படமாகவே எடுத்துவிட்டார்கள்.

காட்சிகளின் நீளம் கதையின் சுவாரசியத்தைக் குறைத்தாலும் தாங்கள் சொல்ல வந்த சேதியை அச்சுப் பிசகாமல் பதிவு செய்திருக்கின்றார்கள் படக்குழு. இது ஒரு முழு நீள சினிமாவுக்கான பாய்ச்சல் தான். அடுத்தடுத்த படைப்புக்கள் மேலும் மெருகேற வாழ்த்துக்கள்.

இப்படத்தின் தயாரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பாக Visual Art Movies சார்பில் முரளிதரன் மற்றும் ஆறு சுரேன் ஆகியோரால் தயாரிக்கப்பட உள்ளது என 2021 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பங்குனி 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இப்படத்தின் முதற்பார்வை (First Look) போஸ்ட்டர் பங்குனி மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனைத்தெடர்ந்து படத்தின் விளம்பரக் காணொளி (Teaser) பங்குனி மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது. மட்டக்களப்பு பிரதேச சினிமா தனித்துவ அடையாளங்களுடனும் தொழில்முறையானதாகவும் வளர வேண்டும் எனும் நோக்கில் இப்படம் சித்திரை மாதம் 10 ஆம் திகதி மாங்காடு கிபேஷ் திரையரங்கில் வெளியிடப்பட்டது.