“குவியம் விருதுகள் 2023” – யாழில் நாளை எம் சினிமா கலைஞர்களுக்கான மாபெரும் விருது விழா

402

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருது விழாவான “குவியம் விருதுகள் 2023” நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) ஆரம்பமாகவுள்ளது.

இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் (RED CARPET) தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகி, பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன.

விருது விழாவில் , முழு நீள திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் , குறும்படங்கள் மற்றும் காணொளிப்பாடல்களுக்காக விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதற்கமைய கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான படைப்புக்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் விழா மேடையில் அறிவிக்கப்படவுள்ளதுடன் விருதுகளும் வழங்கிவைக்கப்படவுள்ளன.

தவிர, இரண்டாவது தடவையாக இடம்பெறவுள்ள குவியம் விருதுகள் நிகழ்வில் பல சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் ஈழத்தமிழ் சினிமாவுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த ஒப்பற்ற கலைஞன் மறைந்த திரைப்பட இயக்குனர் நவரட்ணம் கேசவராஜாவுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது“ வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. அமரர் சார்ப்பில் அவரது குடும்பத்தார் அதனைப் பெற்றுக் கொள்வார்கள்.

சம காலத்தில் இலங்கையில் இடம்பெறுகின்ற எம் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் ஒரேயொரு விருது விழா “குவியம் விருதுகள்” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை குவியம் விருதுகள் நிகழ்வுக்கு Bright moon productions பிரதான அனுசரணை வழங்குவதுடன், கர்ணன் படைப்பகம் இணை அனுசரணையினை வழங்குகின்றது.